ADDED : ஜூன் 25, 2026 10:18 AM

தேடி வந்த வாய்ப்பு
சென்னையில் இருந்த பெரிய அரசியல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். 'உங்கள் வாழ்வையே மாற்றும் சந்திப்பு' என நண்பர் என்னை உசுப்பேற்றி விட்டு அனுப்பியிருந்தார்.
கட்சியில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என்னிடம் பேசினார்.
“எங்க தலைவர் தன்னோட வாழ்க்கை வரலாறை புத்தகமா எழுதியிருக்காரு. நல்லா வித்துச்சி. அத இங்கிலீஷ்ல மொழி பெயர்க்கணும். அதுக்கு நீங்கதான் சரியான ஆளுன்னு எல்லாரும் சொன்னாங்க”
நான் அந்த புத்தகத்தைப் படிக்க முயற்சி செய்திருக்கிறேன். என்னால் பத்து பக்கங்களைக் கூட தாண்ட முடியவில்லை. ஆபாசம், வன்முறை, வெளியே பேச முடியாத வார்த்தைகள் - அன்பே இல்லாத ஒருவரின் வாழ்க்கையை வரலாறாக எழுதினால் இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன்.
“நீங்க சும்மா செய்ய வேணாம். உங்க வேலைக்காக எங்க கட்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தரச் சொல்லியிருக்காரு தலைவர். மொழிபெயர்ப்புக்கான இலக்கிய விருதுகளும் வாங்கித் தர்றோம்”இதில் எல்லாம் நான் மயங்கிவிடுவேன் என நினைத்தாரோ?
“இந்த வேலை அதிகம் போனா ஒரு வருஷத்துல முடிஞ்சிரும். அப்போ உங்க கையில நிறைய பணம் இருக்கும். அத வச்சிக்கிட்டு உங்களுக்கு பிடித்த நல்ல விஷயங்கள செய்யலாம். அது மட்டுமில்ல, பட்டிதொட்டியெல்லாம் உங்க பேரும் புகழும் பரவிரும். நிறைய பேர் உங்க புத்தகத்த வாங்கிப் படிப்பாங்க. உங்க வாழ்க்கையோட நோக்கமே பச்சைப்புடவைக்காரியோட அன்பை பரப்பறதுதான்னு சொல்லியிருக்கீங்க. அது சுலபமா நடந்திரும்.”
என் பலவீனம் என்னவென்று தெரிந்து கொண்டு குறிபார்த்து அடித்தார். நான் ஆடித்தான் போனேன்.
“இந்த நல்ல வாய்ப்பை தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வராது. உங்களால இன்னும் எத்தனை வருஷம் எழுத முடியும்? இந்த மொழிபெயர்ப்பும், அதனால கிடைக்கற பணம், விருது உங்க எழுத்துலக வாழ்க்கைக்கு ஒரு முத்தாய்ப்பா இருக்கும்ல?”
நான் சபலப்பட்டேன் என்பது உண்மைதான். என்றாலும் உடனே சரியென சொல்லவில்லை.
“கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். சொல்கிறேன்.”
“இந்த வேலையச் செய்யறதுக்கு பெரிய வரிசையில ஆளுங்க காத்துக்கிட்டிருக்காங்க. எல்லாரையும் விட்டுட்டு உங்களக் கூப்பிட்டா...''
“இப்போ எதுவும் சொல்ல முடியாது”
“ஒரு வாரம்தான் டயம். அதுக்குள்ள நீங்க ஒண்ணும் சொல்லலேன்னா வேலைய வேற ஆளுக்குக் கொடுத்திருவோம்”
ஊர் திரும்பிய பிறகு இரண்டு முறை பச்சைப்புடவைக்காரியின் கோயிலுக்கு நடந்தே போனேன். எப்படியும் வழியில் தோன்றி எனக்கு வழி காட்டுவாள் என நினைத்தேன். நடக்கவில்லை.
அன்று முக்கியமான வருமான வரி ஆவணத்தில் ஒரு வாடிக்கையாளரின் கையெழுத்தை வாங்க வேண்டியிருந்தது. அவரால் கிளினிக்கை விட்டு வர முடியாது எனச் சொல்லிவிட்டார். டிரைவரும் இல்லை என்றார். வீட்டிற்குப் போகும் வழியில் அவரது கிளினிக் இருந்ததால் நானே அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு போனேன். மருத்துவரின் காத்திருப்பு அறையில் நல்ல கூட்டம். அங்கே இருந்த பெண் ஊழியர் என்னை வரவேற்று விவரங்கள் கேட்டாள்.
“உள்ள போயிருக்கற பேஷண்ட் வெளியே வந்தவுடனே நீங்க போயிரலாம் சார்” அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று என்னைப் பாடாய்ப் படுத்தியது.
உள்ளே இருந்த நோயாளிக்கு பெரிய பிரச்னை போலும். நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. அப்போது புதிதாக வந்த நோயாளியை என் அருகில் அமர வைத்தாள் நர்ஸ். அந்த நோயாளியைப் பார்த்து அதிர்ந்தேன். உடல் முழுதும் கொப்பளங்கள். சீழ் வடிந்தது. துர்நாற்றம் தாங்க முடியவில்லை. அலைபேசியில் பேசுவது போல் அந்த அறையை விட்டு வெளியேற முயற்சித்தேன்.
வாசலில் நர்ஸ் வழிமறித்தாள்.
“சகிக்க முடியவில்லையோ? ஏன் அவசர அவசரமாகப் போகிறாய்?”
அவளை அடையாளம் கண்டு கொண்டேன். கையில் இருந்த அலைபேசியை அவள் காலுக்கு அருகில் போட்டு அதை எடுக்கும் சாக்கில் அவளின் திருவடியை தொட்டு வணங்கினேன்.
“இவனுக்கு வந்திருப்பது தொற்று நோயல்ல. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறியதால் வந்த வினை இது. அதுவும் ஓரிரு வாரத்தில் சரியாகிவிடும்.
“இந்த நோயாளியின் சீழையும் நாற்றத்தையும் உன்னால் தாங்க முடியவில்லையே, மனம் நிறைய சீழையும் நாற்றத்தையும் வைத்திருப்பவனின் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போகிறாயே, அதை தாங்குவாயா? அவன் தீமை என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவன். தீமை பயங்கரதொற்று நோய் “இங்காவது நோயாளியின் அருகில் தான் இருந்தாய். மொழிபெயர்க்கும்போது அந்த தீயவனின் மனதின் ஆழத்திற்குள் செல்வாய். அங்கே வடியும் ரத்தமும் சீழும் உன்னை அழித்துவிடும்”
“அதனால் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஏதாவது நல்ல காரியம்...''
“தீயவனின் சீழாலும் ரத்தத்தாலும் நீ எந்த நல்ல காரியமும் செய்ய வேண்டாம்” நான் தலை குனிந்தேன்.
“நான் உனக்கு கொடுத்திருக்கும் திறமையை நீ அவனுக்காகப் பயன்படுத்தினால் அவன் உலகப் புகழ் பெற்று விடுவான். இன்னும் அதிகமான பாவங்களைச் செய்யத் தொடங்குவான். அந்தப் பாவங்கள் உன் கர்மக் கணக்கில் சேரும். அதன்பின் நீ என்னைப் பார்க்க முடியாது. என்னுடன் பேச முடியாது. அப்புறம் உன் இஷ்டம்”
அதற்குள் மருத்துவர் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். உள்ளே போய் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரி அதே இடத்தில் நின்றிருந்தாள். அவள் முன் நின்றபடி அந்த அரசியல் கட்சிக்காரரிடம் பேசினேன்.
“என்னை மன்னிச்சிருங்க. என்னால அந்த வேலையை செய்ய முடியாது. பெரிய வரிசையில ஆளு நிக்கறதாச் சொன்னீங்கல்ல, அதுல யாருக்காவது கொடுத்திருங்க”
“கோடிகளத் துாக்கியெறியற முட்டாள் எழுத்தாளரை இப்போதான் முதன்முதல்ல பார்க்கறேன்”இணைப்பைத் துண்டித்தேன்.
“உன் மூலம் பல கோடிகளுக்கு நல்ல காரியம் நடக்க நான் வழி செய்கிறேன். உன் எழுத்து பல லட்சம் பேருக்கு வழிகாட்டும் வரத்தையும் உனக்குத் தருகிறேன். இதற்கு மேல் நீ என்ன கேட்டாலும் நான் தரத் தயாராக இருக்கிறேன்”
“இன்னும் ஒரே ஒரு வரம் வேண்டும் தாயே”
“கேள்”
“என் மூலம் நல்லது நடக்கிறது என்பது எந்த காலத்திலும் எனக்கு தெரியக் கூடாது. அது தெரிந்தால் என் மனதிற்குள் அகந்தைப் பாம்பு புகுந்து விடும். அகந்தை வந்தால் அன்பு போய் விடும். அதன்பின் அழகான அன்பரசியை நான் பார்க்க முடியாமல் போய் விடும். அதை விடக் கொடிய நரகம் வேறு எதுவும் இல்லை”
நான் அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னும் தாயின் சிரிப்புச் சத்தம் என்னைப் பரவசப்படுத்திக் கொண்டிருந்தது.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
