ADDED : ஜூன் 25, 2026 10:34 AM

மண்டோதரியை போலே
அமிர்தத்துக்கு கொண்டு வந்திருந்த சுண்டலை அவர் சாப்பிட்டு முடிக்கட்டும் என காத்திருந்தார் கிருஷ்ணவேணி.
“என்ன சுவாமிக்கு சுண்டல் நைவேத்தியமா?” என கேட்டார் அமிர்தம்.
“பக்கத்து பிளாட் பிரேமா கொடுத்தாங்க. இன்னிக்கு பெருமாள் கோயிலில் அவங்களோட அபிஷேகம். நீங்க சுண்டல்னா விருப்பமா சாப்பிடுவீங்கன்னு எடுத்துட்டு வந்தேன்'' என்றார் கிருஷ்ணவேணி.
“பெண்பிள்ளை அடுத்த வாக்கியமான 'அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே' பற்றி சொல்றா. இதில் மண்டோதரி யாரை தெய்வம் எனச் சொன்னாள் என அறியும் ஆவலில் ராமானுஜரும் அவருடைய சீடர்களும் காத்திருந்தனர். மண்டோதரி யார் தெரியுமா? தேவர்களின் கட்டடக் கலைஞரான மாயனின் மகள். ராவணனை மணந்த பிறகு இலங்கையின் ராணியானாள். பதிவிரதை. நற்குணம் கொண்டவள்.
சீதையும் மண்டோதரியும் அழகிலும் குணத்திலும் சமமானவர்கள். எப்படி தெரியுமா? சீதையைத் தேடி ஹனுமன் வந்த போது மண்டோதரியை அந்தப்புரத்தில் பார்த்து சீதை என தவறாக நினைத்து நடுங்கினார். பிறகு தவறை உணர்ந்து ராவணனின் மனைவி மண்டோதரி என உணர்ந்தார். அப்படி தோற்றத்தால், குணத்தால் அறிவாற்றல் மிக்க ஹனுமனையே கலங்க வைத்து விட்டவள்.
மண்டோதரியின் மகன் மேகநாதன், ராவணனுக்கு முன்பாக போருக்குச் சென்றான்.
குழந்தையாக இருந்த போது இவனுடைய அழுகை மேகங்கள் இடிப்பதால் ஏற்படும் ஒலி போல இருந்ததால் மேகநாதன் என அழைத்தனர். இவனே பின்னாளில் இந்திரனோடு போர் புரிந்து அவனை சிறையிலிட்டான். இந்திரனை வென்றதால் இந்திரஜித் எனப்பட்டான். இப்படி ராவணனுக்கு பிறகு ஆட்சிக்கு வர வேண்டிய இந்திரஜித்,போரில் லட்சுமணனின் அம்பினால் வீழ்ந்தான்.
முதன் முதலாக இலங்கை அந்தப்புரத்தில் மேகநாதனைப் பார்த்த ஹனுமன், அவன் வீரத்தை எடை போட்டு போர் நீண்ட நாள் நீடிக்கும் என நினைத்தார். அத்தனை சிறப்பு பெற்ற இந்திரஜித் இறந்ததும் இலங்கையே குலுங்கியது. அப்போது மண்டோதரி மகனின் அரிய ஆற்றல்களை எல்லாம் சொல்லி புலம்புகிறாள். ஆனால் ராவணன் இறந்த போது அவளின் செயலில் மாறுபாடு தெரிந்தது. முதலில் ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு வந்த போது அவனை கண்டித்தாள். ராவணன் செய்வது குற்றம் எனவும் இலங்கைக்கு அழிவை சேர்க்கும் எனவும் சொன்னாள்.
சீதையை ராமனிடம் சேர்க்குமாறும் ராமனுடன் நட்பு பாராட்டும் படியும் மண்டோதரி பலமுறை ராவணனிடம் சொல்கிறாள். ஆனால் ராவணன் அதை பொருட்படுத்தவில்லை.போரில் ராவணன் இறந்த செய்தி கிடைத்ததும் ராவணனுடைய மனைவியர் ஓடி வந்து அழுகிறார்கள். கணவன் இறந்ததும் அதற்கு காரணமானவரை பழி துாற்றுவது மனைவியரின் இயல்பு. ராவணனின் மனைவியர் இப்படி செய்ய மண்டோதரி மட்டும் ராவணனுக்கு அறிவுரை சொல்வது போல இப்படி சொல்கிறாள்.
இறந்ததும் ஒருவரின் ஆத்மா அந்த இடத்திலேயே கொஞ்ச நேரம் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்த மண்டோதரி, அன்பு கணவரே உங்களுடைய சக்தி பெரும் ஆற்றல் பொருந்தியது. இருந்த போதிலும் ராமன் சாதாரண பிறவி இல்லை. உங்களைக் கொன்றது சங்கு, சக்கரத்தை ஏந்தி நிற்கும் அந்த பரம்பொருள் நாராயணன் தான். ராமன் அவதார புருஷன். தவ வலிமையாலும் அதனால் பெற்ற வரத்தாலும் நீங்கள் கர்வம் கொண்டீர்கள். நான் பலமுறை அறிவுரை சொல்லியும் கேட்காமல் பதிவிரதை சீதையின் மீதுள்ள ஆசையால் இந்த முடிவை விதி அளித்திருக்கிறது.
முன்பு இந்திரன் தேவர்களுடன் போய் விஷ்ணுவிடம் ராவணனை வீழ்த்த வேண்டினான். அப்போது தசரதன் மகனாக ராமனாக தோன்றி அரக்கர் வாழ்வை முடிப்பேன் என இந்திரனுக்கு வரம் கொடுத்தார். அந்த வரலாறு இன்று உயிர் பெற்று இருக்கிறது. அந்த விஷ்ணு தான் ராமனாக வந்து உங்களை கொன்றிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை என அழுகிறாள். அது மட்டுமல்ல, ராமனின் வில் திறமையை பாராட்டுகிறாள் மண்டோதரி. இப்படி மண்டோதரியைப் போல ராமன் பரம்பொருள் என உணர்ந்து அவனே தெய்வம் என சொல்லும் அளவிற்கு பக்தியில் நான் சிறக்கவில்லையே. அதனால் திருக்கோளூரை விட்டுப் போகிறேன் சுவாமி என உருகுகிறாள் பெண்பிள்ளை'' என சொல்லி முடித்தார் கிருஷ்ணவேணி.
“ம்... மண்டோதரி மதிநுட்பம் வாய்ந்த பெண் தான். அவளின் பேச்சை ராவணன் கேட்டிருந்தால், வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆனால் மங்கையற்கரசியால் மீண்டும் சைவம் தழைத்தது”
“யார் அந்த மங்கையற்கரசி” என ஆச்சரியப்பட்டார் கிருஷ்ணவேணி.
“மங்கையற்கரசி சமணத்தில் மூழ்கி இருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் மனைவி. சோழ இளவரசியான இவள் அமைச்சர் குலச்சிறையாருடன் இணைந்து சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவ சமயத்தை நிலை நிறுத்தியவர்”
“அவ்வளவு தைரியசாலியா?”
“தைரியசாலி என்பதை விட பக்தியால் மனபலம் பெற்ற பெண். அப்போது பாண்டிய நாட்டில் சமண சமயம் பரவி இருந்த காலகட்டம். மன்னன் சைவ சமயத்தை மறந்திருந்தான். அரசியான மங்கையற்கரசி சிவன் மீது பக்தி கொண்டிருந்தார். மங்கையற்கரசியும், குலச்சிறையாரும் ரகசியமாக சிவபூஜை செய்து வந்தனர். ஊரறிய சிவபக்தியில் திளைக்க வேண்டும் என்பதே அவளின் பிரார்த்தனை. ஒரு சமயம் மன்னர் நின்ற சீர் நெடுமாறன் வயிற்று வலியால் அவதிப்பட்டார்.
இதுதான் சமயம் என உணர்ந்தாள் மங்கையற்கரசி. சிவபக்தி தழைக்க ஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு அமைச்சர் குலச்சிறையார் மூலம் அழைப்பு விடுத்தார். மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் மன்னனின் கூன், வயிற்று வலியை திருநீற்று பதிகம் பாடி குணப்படுத்தினார். கூன் நீங்கியதால் 'நின்ற சீர் நெடுமாறன்' என மன்னர் அழைக்கப்பட்டார். அது முதல் நாடு முழுவதும் சைவம் தழைக்கத் தொடங்கியது. பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்தவர் மங்கையற்கரசி. 63 நாயன்மார்களில் ஒருவராக இன்று வரை பேசப்படுகிறார்” எனச் சொன்னதும் கிருஷ்ணவேணி முகத்தில் பூரிப்பு.
“அட... இந்த இரண்டு அரசிகளும் என்ன அழகாக பக்தி செய்திருக்கிறார்கள். மண்டோதரியும், மங்கையர்க்கரசியும் மனதில் நிறைந்து விட்டனர்” என நெகிழ்ந்தார் கிருஷ்ணவேணி.
“சரி, அடுத்த வாக்கியத்தில் யார் பற்றி சொல்வீங்க'' எனக் கேட்டார் அமிர்தம்.
“அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்திரரைப் போலே' என்பது. கோபத்திற்கு பெயர் பெற்ற விஸ்வாமித்திர முனிவர் பற்றி பேசப் போறோம்” என்றார்.
“அவர் கோபம் அவருடனே இருக்கட்டும். அடுத்த சந்திப்பில் அவரைப் பற்றி தெரிந்து கொள்கிறேன்” என அமிர்தம் சொன்னதும் சிரித்தபடியே விடை பெற்றனர்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
