ADDED : மார் 26, 2026 11:19 AM

பஞ்ச பூதங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் காஞ்சி மஹாபெரியவர். கொளுத்தும் வெயிலிலும் மழையை அவரால் கொண்டு வர முடியும். இது போல் பல அற்புதங்களை சுவாமிகள் நிகழ்த்தியுள்ளார்.
ஒருமுறை வெள்ளிக்கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வந்தது. அந்த பூஜையை சுவாமிகள் நடத்தினார். பூஜை முடிந்த பின் நிலாவை தரிசிக்க மடத்தை விட்டு வெளியே வந்தார். வானத்தை அண்ணாந்து பார்த்தார். அருகில் நின்ற தொண்டர், 'பெரியவா... வானம் மேக மூட்டமாக இருக்கு. சந்திர தரிசனம் செய்றது கஷ்டம்' என்றார்.
'அப்படியா' எனக் கேட்ட சுவாமிகள் உடனே வலது கையை உயர்த்தியபடி அப்படியும் இப்படியுமாக அசைத்தார். இதை பார்த்தால் துாரத்தில் நிற்கும் ஒருவரை 'அருகில் வா' என அழைப்பது போல் இருந்தது. அடுத்த விநாடி அந்த அற்புதம் நிகழ்ந்தது. சுவாமிகளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மேகம் விலக, நிலா பளிச்சென தெரிந்தது. இதைக் கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
சந்நியாசிகளுக்கு பிக்ஷை அளிப்பது புண்ணியம். அதற்காக அன்று சுவாமிகளுக்கு பிக்ஷை செய்ய காத்திருந்த பக்தர் மிகவும் சந்தோஷப்பட்டார். பவுர்ணமி பூஜை முடிந்து நிலாவை பார்த்த பின்னரே சுவாமிகள் பிக்ஷை ஏற்பார் என்பதே அதற்கு காரணம். ஒருவேளை நிலாவை பார்க்காவிட்டால் சுவாமிகள் சாப்பிட மாட்டாரே என கவலையுடன் இருந்தார் அந்த பக்தர். அவருடைய கவலையும் நீங்கியது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்.
* புண்ணிய தீர்த்தத்தை சுத்தமாக வைத்திரு.
* சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற ஆயுள் கூடும்.
* முடிந்தவரை கை, கால்களை கழுவிய பின் கோயிலுக்குள் நுழையுங்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
