ADDED : மார் 26, 2026 11:22 AM

நீதி வழங்கியவள்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு நீதிபதியின் அறையில் அமர்ந்திருந்தேன். என் முன்பு கம்பீரமாக உட்கார்ந்திருந்த பெண் நீதிபதியின் முகத்தில் கவலை ரேகை. “எனக்கு வழிகாட்டுதல் வேண்டும்” நிலுவையில் உள்ள ஒரு வழக்கை பற்றிச் சொன்னார் நீதிபதி.
ரகுவும் பிரியாவும் ஒற்றுமையான தம்பதி. ரகு மிக அழகானவன். அவன் இளைஞனாக இருந்த போது பல பெண்கள் அவனை விரும்பினர். ஆனால் அவனோ பிரியாவையே விரும்பினான். அவர்களின் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பிரியா அரசுப் பள்ளி ஆசிரியையாக இருந்தாள். நல்ல சம்பளம். ரகு ஒரு தனியார் கம்பெனியில் சாதாரண வேலையில் இருந்தான். வெளிநாட்டில் படித்து விட்டு வந்தால் எனக்கு நல்ல வேலை கிடைக்கும் வசதியாக வாழலாம் என்றான் ரகு. இதை ஏற்ற பிரியாவும், அவளின் பரம்பரை வீட்டை விற்று ரகுவை படிக்க வைத்தாள். நன்றாகப் படித்து பல லட்சம் சம்பளத்தில் பெரிய வேலையில் அவனும் சேர்ந்தான். பணம், பதவி வந்தவுடன் ரகுவின் மனம் அலைபாய்ந்தது. பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
பிரியாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினான். வழக்கு பல வருடங்கள் நீடித்த பின், விவாகரத்து ஆனது. பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு ரகுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசுப்பணியில் இருந்ததால் பிரியாவுக்கு ஜீவனாம்சம் தரப்படவில்லை. பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை எனக்குத் தர வேண்டும் என பிரியா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தாள்.
“வழக்கை நன்றாகப் படித்து விட்டேன். இரு பக்க வாதங்களையும் உன்னிப்பாகக் கேட்டேன். பிரியாவின் பக்கம்தான் நியாயம் இருக்கிறது. ஆனால் ரகுவின் பக்கம் சட்டம் இருக்கிறது. அவர்களின் மகன், 'அப்பாவிடம்தான் இருப்பேன்' என அடம் பிடிக்கிறான். அவனுக்கு வயது 14 என்பதால் அவனது விருப்பத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்”
“இதில் உங்கள் குழப்பம் என்ன?”
“ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தலாம். சட்டப்படி அதுதான் சரி. ஆனால்...” என் பார்வையை கேள்விக்குறியாக்கினேன்.
“பிரியா பக்கம்தான் தர்மம் இருக்கிறது. நான் சட்டப்படி தீர்ப்பு எழுதினால் அவள் தன் கணவன், மகனை இழந்து விடுவாள். ஏற்கனவே அந்த நன்றி கெட்டவனுக்காக பரம்பரை வீட்டையே இழந்து விட்டாள்''
“மகனை வளர்க்கும் பொறுப்பை பிரியாவிடம் கொடுக்க முடியாதா?”
“அவன் அப்பாவிடம்தான் வளர்வேன் என அடம் பிடிக்கிறானே! பணவசதியை காட்டி மகனின் மனதை மயக்கி விட்டான் ரகு. அவன் ரகுவிடம் வளர்ந்தால் செல்லம் கொடுத்தே கெடுப்பான். மேலும் ரகு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்”
அப்போது ஊழியர் ஒருவர் உள்ளே வந்து, நீதிபதியிடம் ரகசியக் குரலில் பேசிச் சென்றார்.
உடனே என்னிடம் நீதிபதி, “எனக்காக பத்து நிமிடம் வெயிட் பண்ணுங்க. 'சீப் ஜஸ்டிஸ்' கூப்பிடறாரு. வந்துடறேன். உங்களுக்கு காபி வாங்கி வரச் சொல்லியிருக்கேன்”
காபி கொண்டு வந்த பெண்ணை பார்த்தேன். தானாக என் கண்களில் கண்ணீர் வரவே, சட்டென எழுந்து நின்றேன். நீதிபதிக்கே தீர்ப்பு எப்படி எழுத வேண்டும் என சொல்லித் தரப் போகிறாயா என்ன?”
'தாயே' என கதறியபடி அவளின் காலில் விழுந்தேன்.
“உங்களைப் பார்க்காமல் என் கண்கள் பூத்து விட்டன! எப்படி பிள்ளையை விட்டுப் பிரிய மனம் வந்தது?”
“தாயாக இருந்தாலும் பிள்ளையின் எதிர்கால வளர்ச்சிக்காக பிரியத் தானே வேண்டும். குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு வரும் தாய் ஒவ்வொருவரும் இந்தப் பிரிவுத் துயரைச் சிறிது நேரமாவது அனுபவிக்கத்தானே செய்கிறாள்?”
நான் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“மீண்டும் நீதிபதியைப் பார்த்த போது உன் மனதில் தோன்றுவதைச் சொல். பிரியா நல்லவள். நல்லதே நடக்கும்”
அம்மன் பிரசாதமாகக் கருதி அவள் கொடுத்த காபியை குடித்துக் கொண்டிருந்த போது நீதிபதி வந்தார்.
“இந்த வழக்கின் தீர்ப்பை நீங்கள் எப்போது சொல்ல வேண்டும்?”
“இந்த வாரம் சொல்லலாம் என்றிருக்கிறேன்.” என்றார் நீதிபதி.
“அப்படிச் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறதா என்ன?”
“இல்லை. கூடிய வரை சீக்கிரமாகத் தீர்ப்புச் சொல்வது என் வழக்கம்”
“தீர்ப்பை அதிக பட்சம் எத்தனை நாள் தள்ளி வைக்கலாம்?”
“இரண்டு மாதம்”
“தள்ளி வையுங்கள்.”
“அதனால் என்ன லாபம்?”
“நீதிபதிக்கு எல்லாம் நீதிபதியான என் பச்சைப்புடவைக்காரி தீர்ப்பை எழுதி விடுவாள்” என சொல்லி விட்டு கிளம்பினேன்.
வெளியே வந்த போது பச்சைப்புடவைக்காரி அதே வடிவத்தில் நின்றிருந்தாள்.
“தீர்ப்பை தள்ளி வைப்பதால் என்ன லாபம் என்ற சந்தேகம் உனக்கும் இருக்கிறதே” என்றாள் அவள்.
“தாயே” எனக் கத்தினேன்.
“நடக்கப் போவதைப் பார்.”
ஒரு மாதம் கழித்து ரகு ஒரு பல் மருத்துவரிடம் சென்றான். தாங்க முடியாத பல்வலி எனச் சொன்னான். பல மருத்துவரிடம் காண்பித்தும், கடைசியில் ஒரு மருத்துவர் பெரிய குண்டைத் துாக்கிப் போட்டார்.
“உங்க ஈறுக்கு மேல் பகுதியில புற்று நோய் வந்திருக்கு. இப்போதைக்கு அது வேற எங்கயும் பரவல. ஆனா உடனே அந்தப் பகுதியை ஆப்பரேஷன் மூலமா எடுத்துரணும். அதுல உங்க முகத்தோட ஒரு பகுதியையும் எடுக்க வேண்டி வரும்”
“ஐயையோ”
“கவலைப்படாதீங்க. அந்த இடத்துல வலை மாதிரி ஒண்ண வச்சி பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிரலாம். அப்படி ஒண்ணும் கோரமா இருக்காது. ஆனா இப்ப இருக்கிற அழகு இருக்காது”
ரகு அதிர்ந்தான்.
“ரெண்டு மூணு சர்ஜரி செய்ய வேண்டி வரும். கீமோ, ரேடியேஷன் கொடுக்கணும். உங்களப் பாத்துக்க உங்க மனைவியோ, அம்மாவோ இருக்கணும்”
விஷயத்தைக் கேள்விப்பட்டு பிரியா ஓடி வந்தாள். அவள் காலில் விழுந்து அழுதான் ரகு. நடந்த விஷயத்தை நீதிபதியிடம் சொன்னார்கள் கணவன், மனைவி சமரசமாக வாழ முடிவு செய்தனர். இதை அடிப்படையாக வைத்து நீதிபதி கண்ணீர் மல்க விரிவாக தீர்ப்பு எழுதினார்.
நீதி தேவதை எழுதிய கவிதை என அனைவரும் அதை பாராட்டினர்.
“பிரியாவைக் காப்பாற்றி விட்டேன். உனக்கு என்னப்பா வேண்டும்?”
“இனி மேலும் உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியும் எனத் தோன்றவில்லை, தாயே! நீங்கள் என்றென்றும் என்னுடன் இருக்க வேண்டும்”
“அப்படித் தானே இருக்கிறேன்? உன்னுள் நான் இருப்பதை உணரும் ஞானத்தைக் கொடுக்கிறேன். வேறு என்ன வேண்டும்?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும் என்ற வரத்தைத் தவிர வேறு எதையும் விரும்பாத மனம் வேண்டும் தாயே!”
பச்சைப்புடவைக்காரி மறைந்த பின்னும் அவளின் சிரிப்புச் சத்தம் காதில் ஒலித்தது.
- தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
