தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 10

பெண்பிள்ளை ரகசியம் - 10

பெண்பிள்ளை ரகசியம் - 10


ADDED : மார் 26, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 11:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அகலிகையைப் போலே!

துாரத்தில் கண்ணுக்கு தெரிந்த கிருஷ்ணவேணி ஏதோ முணுமுணுக்கிற மாதிரி தெரிகிறதே என மனதுக்குள் நினைத்தபடியே வந்த அமிர்தம், அருகே சென்ற போதுதான் அவர் கோவிந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார் என தெரிந்தது.

திண்ணை போன்ற நாற்காலியில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணவேணி அமிர்தத்தை பார்த்ததும் ''கொஞ்ச நேரம் உட்காரப் போறீங்களா... இல்ல நடப்போமா?” எனக் கேட்டார்.

“வாங்க... நடக்க ஆரம்பிக்கலாம். முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலேன்னு பெண்பிள்ளை சொல்றா போல நாமும் முதலடியை எடுத்து வச்சு நடக்க ஆரம்பிப்போம்” என்றதும் ஒரு வெடிச் சிரிப்பு கிருஷ்ணவேணியிடமிருந்து கிளம்பியது.

''பெண் பிள்ளை ராமானுஜரிடம் சொல்லும் பத்தாவது வாக்கியத்தில் அவ குறிப்பிடும் முதல் அடி யாருடையது தெரியுமா? ராமனுடையது''

''ஆஹா! ஆரம்பமே அமர்க்களம். சொல்லுங்க கேட்போம்”

“இந்த பிரபஞ்சத்தின் படைப்புத் தொழிலை நடத்தும் பிரம்மா ஒரு பேரழகியை படைக்க விரும்பினார். அவர் படைப்புகளில் ஒவ்வொரு அழகியும் ஏதாவது ஒரு குறையுடன் இருப்பதை பார்த்தார். அதனால் விசேஷமாக அகலிகையை படைத்தார். அவள் வளர்ந்து பெரியவளானதும் அவளின் அழகை பார்த்து எல்லா உலகத்தில் இருந்தவர்களும் ஆச்சரியப்பட்டனர்.

அவளைத் திருமணம் செய்ய பலர் போட்டி போட்டனர். தேவலோகத்தில் இருக்கும் இந்திரன் சும்மா இருப்பானா? அகலிகையை திருமணம் செய்ய நினைத்தான். ஆனால் விதி பூலோகத்தில் வாழும் கவுதம முனிவருக்கு அவளை திருமணம் செய்து வைத்தது. அந்த முனிவர் குணங்களால் உயர்ந்தவர். இருவரும் நல்லபடியாக இல்லறம் நடத்தினர். ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு 'சதானந்தன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

இந்த சதானந்தன் தான் பின்னாளில் சதானந்த முனிவராகி மிதிலை மன்னனின் புரோகிதர் ஆனார். அகலிகையை திருமணம் செய்ய நினைத்தவர்கள் அனைவரும் அவள் கிடைக்காததை அடுத்து மனதை தேற்றிக் கொண்டனர். ஆனால் இந்திரன் மட்டும் வேறு விதமாக நினைத்தான். அவளை எப்படியும் அடைய வேண்டும் என சதித்திட்டம் தீட்டினான். முனிவர் இல்லாத நேரத்தில் அவரைப் போல உருவெடுத்தான். விடியும் முன்பே சேவலை கூவச் செய்தான்.

அதைக் கேட்ட முனிவர் அதிகாலை நெருங்கியதாக கருதி குடிலை விட்டு வெளியேறினார். அவர் வெளியே சென்றவுடன் இந்திரன் குடிலுக்குள் நுழைந்தான். அவன் இந்திரனாகவே சென்றிருந்தால் அகலிகை விரட்டி இருப்பாள். ஆனால் அவன் முனிவர் வடிவில் சென்றதால் தன் கணவன் திரும்ப வந்ததாக எண்ணி அகலிகை அவனுடன் சகஜமாக இருந்தாள்.

அதிகாலை புறப்பட்ட கணவன் எந்த காரணத்தினாலோ திரும்ப வந்திருக்கிறான் என நினைத்தாள். ஆனாலும் அவளுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. முனிவர் வேடத்தில் வந்த இந்திரனை கணவனாக நினைத்து வழக்கம் போல பணிவிடை செய்தாள்.

இதன்பின் பொழுது விடியாத அதிசயத்தைக் கண்ட கவுதமர் மன உறுத்தலுடன் ஆசிரமத்துக்கே திரும்பினார். அகலிகையுடன் வேறொருவர் இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான். முனிவர் வருவதை அறிந்த இந்திரன் பூனையாக மாறி வெளியேறினான். வந்திருப்பவன் தன் கணவன் இல்லை என உணராத மனைவியை கல்லாகப் போகும் படி சபித்தார் முனிவர். அகலிகை மன்னிப்பு கேட்டதும் கோபம் குறைந்து, ராமனின் பாதம் பட்டதும் என்னிடம் சேர்வாய் என்றார் முனிவர்.

இப்படியாக அகலிகை நெடுங்காலம் கல்லாக கிடந்தாள். ஒரு நல்ல நாளில் விசுவாமித்திரரின் வேள்வியை முடித்து விட்டு மிதிலைக்கு ராமன் போய் கொண்டிருந்தார். வழியில் கல்லாய் கிடந்த அகலிகை மீது அவரது பாதத்துளி பட்டதும் பெண்ணாக எழுந்தாள்.

உலகத்தில் நாளும் அபலைகள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர் இல்லை. அவர்களை ஏற்று புது வாழ்வு தர வேண்டும் என ராமாயணம் உணர்த்துகிறது. அகலிகையை தாயாக போற்றினார் ராமர். மீண்டும் கவுதமரை அடைந்தாள் அகலிகை. இப்படி ராமனின் பாதம் பட்ட அகலிகை போல நானும் அவரிடம் தொடர்பு பெறவில்லையே என ஏக்கத்துடன் ராமானுஜரிடம் கூறினாள் பெண் பிள்ளை”

''திருக்கோளூர் பெண் பிள்ளை சாதாரண பெண்ணா தெரியல. இதுவரை கேட்ட பத்து ரகசியங்களே அவளுக்கு பல விஷயத்தில ஞானம் இருக்குன்னு தெரியுது. அதனால தான் ராமானுஜர் அசந்து போய் கேட்டார் போல. ம்... அகலிகையோட சாபத்தை பத்தி கேட்டதும் இந்திரனின் வாகனமான வெள்ளை யானை சாபம் பெற்று கருப்பு யானையா மாறியதுதான் ஞாபகம் வருது”

''இங்கயும் இந்திரன் வறாரா? வெள்ளை யானை ஐராவதத்திற்கு ஏன் சாபம் ஏற்பட்டது”

''முன்பு விருத்தாசுரன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன். அதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அது சிவனால் நீங்கப் பெற்றதும் தேவேந்திரன் இந்திரலோகம் திரும்பினான். அங்கு தேவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சிவபெருமான் தனக்கு அளித்த மணம் மிக்க தாமரையை இந்திரனுக்கு பரிசாக கொடுத்தார் துர்வாசர். இந்திரன் அதை வெள்ளை யானை மீது அலட்சியமாக வைத்தான். வெள்ளை யானையும் ஆணவத்துடன் துதிக்கையால் மலரை எடுத்து காலில் நசுக்கியது. துர்வாசருக்கு கோபம் வந்தது. ''இந்திரா... எதிர்காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் சக்கரப்படையால் உன் தலை சிதறும். தாமரை மலரை நசுக்கிய யானை கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறும்'' என சபித்தார்.

பின்னர் துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டதால் தலையளவு கொடுத்த தண்டனையை முடியளவாக குறைக்கிறேன் என மாற்றினார். அறிவிழந்த வெள்ளை யானை காட்டு யானையாகி, சிவனின் கருணையால் தேவ லோகம் அடையட்டும் எனச் சொல்லி புறப்பட்டார். காட்டு யானையாக மாறிய ஐராவதம் நுாறாண்டு பூலோகம் எங்கும் சுற்றியது. கடைசியாக கடம்ப வனத்திற்குள் புகுந்தது.

இறுதியில் பொற்றாமரை குளத்தையும், சொக்க நாதரையும் தரிசித்தது. தான் யார் என்பதை அறிந்து பொற்றாமரை குளத்தில் நீராடிய போது மீண்டும் வெள்ளை யானையாக மாறியது. பொற்றாமரை தீர்த்தத்தை முகர்ந்து சொக்க நாதருக்கு அபிஷேகம் செய்தது. மகிழ்ந்த சொக்கநாதர் அதன் சாபத்தை நீக்கவே இந்திரலோகம் சென்றது” என மகிழ்ச்சியுடன் முடித்தார் அமிர்தம்.

''ஓ! வெள்ளையானை நுாறு வருஷமா கருப்பு யானையா வாழ்ந்ததா? இது பற்றி நான் கேள்விப்பட்டதில்லை, உங்களால தெரிஞ்சுகிட்டேன். சாபம் தான் எவ்வளவு கொடியது” என உச் கொட்டினார் கிருஷ்ணவேணி.

''பொதுவா நம் ஆன்மிக நம்பிக்கையில் பிறருக்கு சாபம் விடுவது எல்லாம் அவருக்கு தீங்கு நினைப்பது போல தானே. உண்மை இல்லாத பட்சத்துல அது நம் பக்கமே திரும்பும்னு சொல்லுவாங்க. சாபம் கொடுப்பதாலும் தேவையில்லாத கர்மா, பாவம், மன அழுத்தம் ஏற்படும். அந்த காலத்துல சாபம் என்ற வார்த்தைக்கு அப்படி பயப்படுவாங்க”

''கடவுளே! சாபம் கொடுக்கவும் வேண்டாம், வாங்கவும் வேண்டாம். யாருக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்வோம். சரி, பெண்பிள்ளை ராமானுஜருக்குச் சொன்ன பதினோராவது ரகசியத்தை சொல்லுங்க”

“இந்தக் கதை பெரும்பாலான மக்களுக்கு பரிச்சயமான கதை”

“அப்படியா! சொல்லுங்க, தெரியுதான்னு பார்ப்போம்”

“மார்கழின்னதும் நமக்கு சட்டுனு ஞாபகத்துக்கு வரும்”

“குளிரா?”

குபீரென சிரித்த கிருஷ்ணவேணி “அதே யோசனையில இருங்க. அடுத்த சந்திப்புல சொல்றேன்” என வேகமாக நடையைக் கட்டினார்.

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us