தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 19

தெய்வத் திருமணம் - 19

தெய்வத் திருமணம் - 19


ADDED : மார் 26, 2026 11:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 11:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுக்கிரன் - ஜெயந்தி திருமணம்

பிரம்மனின் மனதில் தோன்றிய புதல்வர்களில் ஒருவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான பிருகு முனிவர், காவ்யமாதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுக்கிரன். வடமொழிச் சொல்லான சுக்கிரன் என்பதற்கு உயர்ந்த அறிவுடையவன் அல்லது ஒளிமயமானவன் என பொருள். இவரை பார்க்கவன் என்றும் அழைப்பர். சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் சுகவாழ்வு கிடைக்கும்.

சுக்கிரன் தவ வலிமையாலும், அறிவாலும் சிவபெருமானிடம் வரங்களைப் பெற்று, தேவ உலகத்தில் முக்கிய பதவியைப் பெற முயற்சித்தார். தேவ உலகத்தில் அவருக்குத் தகுதியான இடம் தரப்படவில்லை. அதனால் கோபமடைந்த சுக்கிரன், தேவர்களுக்கு எதிராகச் செயல்பட்ட தைத்திரியர்கள், தானவர்கள் எனப்படும் அசுரர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார்.

சுக்கிரனின் ஆலோசனைப்படி செயல்பட்ட அசுரர்கள், தேவர்களைப் பல போர்களில் தோற்கடித்தாலும் அசுரர்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது. ஆனால் தேவர்கள் யாரும் இறக்கவில்லை. அதனால் கவலையடைந்த சுக்கிரன், போரில் இறக்கும் அசுரர்களை உயிர்ப்பிக்க முடிவு செய்தார்.

சிவனுக்கு மட்டுமே தெரிந்த சஞ்சீவினி வித்யா என்ற இறந்தவரை பிழைக்கச் செய்யும் கலையை, அவரிடமிருந்து கற்றால் அசுரர்களை உயிர் பிழைக்கச் செய்யலாம் என எண்ணினார். அந்தக் கலையைக் கற்கும் ஆர்வத்துடன் சிவனை வேண்டித் தவம் செய்யத் தொடங்கினார்.

அந்த தவம் பல ஆண்டுகளாக நீடித்தது. சிவனிடமிருந்து சஞ்சீவினி வித்யாவைச் சுக்கிரன் பெற்றுக் கொண்டு விடுவாரோ என அச்சமடைந்த தேவர்கள், தேவ உலகின் தலைவரான இந்திரனிடம் முறையிட்டனர்.

சுக்கிரனின் தவத்தைக் கலைப்பதற்கு இந்திரனும் பல வழிகளில் முயற்சித்தான். அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கவலைப்பட்ட போது, அங்கு அவனுடைய மகள் ஜெயந்தி வந்தாள். சுக்கிரனின் தவத்தைக் கலைக்க தான் முயற்சிப்பதாகச் சொன்னாள்.

இந்திரனும் அவளிடம், சுக்கிரனின் தவத்திற்கு உதவி செய்வது போல சென்று தவத்தை கலைக்குமாறு அனுப்பினான். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற ஜெயந்தியும் புறப்பட்டாள். சுக்கிரனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவனின் நம்பிக்கையைப் பெற்றாள்.

சுக்கிரன் தன் தவத்தை தீவிரமாக்க நினைத்தார். அங்கிருந்த மரம் ஒன்றில், தலைகீழாக தொங்கியபடி உணவு, தண்ணீரை விட்டு விட்டு, புகையை சுவாசித்துக் கொண்டு தவத்தை மேற்கொண்டார். சுக்கிரனின் தவத்தை நிறுத்த இதுதான் சரியான நேரம் எனக் கருதினாள் ஜெயந்தி. புகையை வரவழைக்க எரிந்து கொண்டிருந்த இலைகளுடன் நெடி மிகுந்த மிளகாயைச் சேர்த்தாள். காரமான புகையை சுவாசிக்க முடியாமல் சுக்கிரன், தவத்தை எப்படியும் நிறுத்துவார் என அவள் நம்பினாள். புகையின் எரிச்சலைத் தாங்க முடியாமல் சுக்கிரனின் கண்கள், மூக்கு, வாயில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. ஆனாலும் சுக்கிரன் மன உறுதியுடன் தவத்தைத் தொடர்ந்தார். அதைக் கண்ட ஜெயந்திக்கு இரக்கம் ஏற்பட்டது. தான் செய்த தவறை நினைத்து வருத்தமடைந்தாள்.

கடும் துன்பமடைந்த போதும் தவத்தைக் கைவிடாத சுக்கிரன் தவத்தில் மனமிரங்கிய சிவன் காட்சியளித்தார். அவர் வேண்டிய சஞ்சீவினி வித்யா மந்திரத்தை அருள்புரிந்தார். இறந்தவர்களை உயிர் பெறச் செய்யும் இந்த மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். சுக்கிரனும் அதற்கு ஒப்புக் கொண்டார். சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார்.

மகிழ்ச்சி அடைந்த சுக்கிரன், மரத்திலிருந்து கீழே இறங்கினார். எரியும் இலைகளுடன் மிளகாயைக் கலந்த தன்னைச் சுக்கிரன் தண்டிப்பார் என எண்ணி ஜெயந்தி பயந்தாள். ஆனால் சுக்கிரன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

பின்னர் ஜெயந்தியிடம் எரியும் இலைகளுடன் மிளகாயைக் கலந்து என் தவத்தைக் கடுமையாக்கிச் சிவனை மனமிரங்கச் செய்து சஞ்சீவினி வித்யா மந்திரத்தை கிடைக்கச் செய்து விட்டாய் என அவளுக்கு நன்றி தெரிவித்தார்.

தவத்தைக் கலைக்க வந்த தனக்கு தண்டனை அளிக்காமல், நன்றி தெரிவித்த சுக்கிரனின் பண்பைக் கண்டு வியந்தாள். 'என்னுடைய தவத்திற்கு உதவியாகப் பல ஆண்டுகள் பணிவிடை செய்தது மட்டுமின்றி, வேண்டுதல் நிறைவேற உதவி செய்த உன்னை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றார்.

அசுரர்களின் குருவான சுக்கிரனிடம் தீய எண்ணம் தான் இருக்கும் என எண்ணிய அவளுக்கு, அவரின் செயல்பாடுகள் பெரும் ஆச்சரியத்தை அளித்தன. அவளையும் அறியாமல் சுக்கிரன் மீது அன்பு ஏற்பட்டது. திருமணத்திற்கு சம்மதித்தாள்.

தவத்தைக் கலைக்க அனுப்பிய மகள், சுக்கிரனின் பேச்சில் மயங்கி அவரை மணம் செய்வதை அறிந்த இந்திரன் கோபமடைந்தான். தேவர்களுக்கு எதிரான அசுரர்களின் குருவான சுக்கிரனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என சொல்லிப் பார்த்தான்.

ஆனால், ஜெயந்தி சுக்கிரனைத் திருமணம் செய்து கொண்டாள். அதன் பின்பு, சுக்கிரனுடன் சேர்ந்திருந்து அசுரர்களின் வெற்றிக்கு உதவியாக இருந்தாள்.

சுக்கிர நீதி

அசுரகுருவான சுக்கிராச்சாரியார் அசுரர்களுக்குக் கூறுவதாக அமைந்த நுால் சுக்கிர நீதி. ஐந்து அத்தியாயம் கொண்ட சுக்கிர நீதியில், முதல் அத்தியாயத்தில் 35 தலைப்புகளில், 387 சுலோகங்கள், இரண்டாம் அத்தியாயத்தில் 20 தலைப்புகளில் 433 சுலோகங்கள், மூன்றாம் அத்தியாயத்தில் 12 தலைப்புகளில் 322 சுலோகங்கள், நான்காம் அத்தியாயம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தமாக 88 தலைப்புகளில் 1229 சுலோகங்கள், ஐந்தாம் அத்தியாயத்தில் பொது நீதி என்னும் ஒரேயொரு தலைப்பில் 88 சுலோகங்கள் என்று மொத்தமாக 2459 சுலோகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த நுாலில் நிர்வாக முறைகள், நீதி பரிபாலனம், போர் முறை, கட்டடக்கலை, சிற்பம், அரசர், அமைச்சர் பல்வேறு வகையான அலுவலர்களின் குணநலன்கள், பணியாட்களின் குணநலன்கள் உள்ளிட்ட தகவல்கள் விரிவாக உள்ளன.

இதில் பணியாளருக்குக் கொடுக்கும் வேதனம் (ஊதியம்) பற்றியும் உள்ளது. ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுமந்து செல்வது போன்றதொரு வேலையைச் செய்வதற்கான ஊதியத்தை காரியமானம் என்றும், தொடர்ச்சியாகச் செய்யப்படும் வேலைக்காகக் கால அடிப்படையில், வாரம் அல்லது மாதம் அல்லது ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் தொகை காலமானம் என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்குத் தருவதாக ஏற்பாடு செய்து கொண்ட கூலியினைக் காரிய காலமானம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

காரிய காலமானம் என்பதைத் தற்கால ஒப்பந்த அடிப்படையிலான வேலை என்று கொள்ளலாம். இதே போல அரசனிடம் நாற்பது ஆண்டுகள் வரை பணிபுரிந்த ஒருவருக்கு அரசர் செய்ய வேண்டிய செயல்கள் (தற்கால ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள்) போன்றவைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us