தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 23

சித்தர்களின் விளையாட்டு - 23

சித்தர்களின் விளையாட்டு - 23


ADDED : மார் 26, 2026 11:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 11:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நந்திதேவர்

“என்னது! மகேஸ்வரர் தன்னுடைய சிவகணத்தையே சிலையாக மாற்றினாரா?” என நாரதர் வியப்புடன் கேட்க, மகேஸ்வரன் இடை மறித்தார்

“என்ன நாரதரே, உங்களுக்கு தெரியாத விஷயமா? இதோ இங்கே அமர்ந்து நாம் பேசுவதையெல்லாம் மண்டியிட்டு கேட்டுக் கொண்டு இருக்கும் சிவகணங்களின் தலைவர் நந்தி தேவர்தான் அந்த சித்தர். பார்வதியின் இரக்க குணத்தால்தான் நந்தி தேவர் எம் அருகிலேயே இருக்கிறார்” என்றார் மகேஸ்வரர்.

“மகேஸ்வரரே தாங்களே தங்கள் விளையாட்டை சொல்லுங்கள்” என வேண்ட சொல்ல ஆரம்பித்தார்.

சிவமும் சக்தியும் இணைந்ததே பிரபஞ்சம். இதன் இயக்கத்திற்கு காரணம் பதி, பசு, பாசம். இதில் பாசம் என்ற ஒன்று இல்லாவிட்டால் பதியும், பசுவும் ஒன்றே. இந்த பசு பாசம் என்ற கயிறை விட்டு நீங்கினால் மட்டுமே பதியை அடைய முடியும். அதுவே பசுபதி.

விஞ்ஞானம் என்ற வட்டத்தை ஆராய்ந்து கொண்டே போனால் அது முடியும் இடம்தான் மெய்ஞானம். அதுவே ஆன்மிகம். விஞ்ஞானத்தின் தொடக்கமும் ஆன்மிகத்தின் நிறைவும் ஒரே புள்ளி தான். ஒரு கட்டத்தில் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.

ஆன்மிகத்தையும், ஞானத்தையும், தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்த சித்தர்கள் தங்களின் குரு உபதேசத்தால், பக்தியால், கடும் உழைப்பால் சித்தி பெற்றனர். அப்படி சிவனையும் பார்வதியையும் குருவாய் ஏற்று உபதேசம் கேட்டவர்தான் நந்திதேவர். அவர் பிறந்த கதையை கேளுங்கள் என்ற மகேஸ்வரர் தொடர்ந்து கூற ஆரம்பித்தார்.

சிலாதர் என்ற முனிவர் திருவையாறு அந்தணர்குறிச்சியில் வசித்தார். அவருக்கு குழந்தைபேறு இல்லை. சிறந்த சிவ பக்தரான அவர் குழந்தைப்பேறு வேண்டும் என வேண்டி அங்கிருந்த குளத்தில் அமர்ந்து தவமிருக்கத் தொடங்கினார்.

அவரது பக்தியை மெச்சிய பரமேஸ்வரர், வைரங்கள் பதித்த ஆபரணம் நிறைந்த பெட்டியில் அழகிய குழந்தையை வைத்து வரமாக அளித்தார். அந்த பெட்டிக்குக் காவலாக ஒரு காளையையும் நியமித்தார்.

தவத்தில் இருந்து கண் விழித்த சிலாதர் குளத்தங்கரையின் ஓரத்தில் காளை உழும் நிலத்தில் இருந்த பெட்டியைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். அழகிய ஆபரணம் சூடி தலையில் வைர கிரீடத்துடன் சிரித்த முகத்துடன் இருந்த குழந்தைக்கு நந்திதேவர் எனப் பெயரிட்டார்.

நந்தி தேவருக்கு ஒரு வயதில் அவரது ஜாதகத்தை கணித்த சிலாதர் முனிவர் அதிர்ச்சியடைந்தார். 12 வயதில் நந்தி தேவருக்கு மரண தோஷம் இருப்பதை அறிந்து வருந்தி அழுதார். நந்திதேவர் இதனைத் தெரிந்து கொண்டார். தன் பெற்றோரின் கவலை நீங்க ஈசனை நோக்கி நர்மதை ஆற்றங்கரையில் தவம் செய்யத் தொடங்கினார்.

காட்சியளித்த சிவனிடம், 'சிலாதர் தம்பதியருக்கு தான் புத்திர தோஷமே தவிர சிவபெருமான் பார்வதிக்கு அல்ல. எனவே தன்னை சிவன், பார்வதி தம்பதியின் புத்திரனாக ஏற்குமாறு வேண்டினார் பரமேஸ்வரனை வணங்கியதால் நந்தீசர் எனப் பெயர் பெற்று இறவா வரம் பெற்றார். மனிதர்களின் நோயைத் தீர்க்கும் 32 கற்ப மூலிகைகளை கண்டறிந்தார். பாதரசம், கந்தகம், மூலிகைகளை மருந்தாக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தார்.

சிவனை வணங்கி நற்பேறு பெற்று சிவகணங்கள், 18 சித்தர்களுக்கும் முக்கிய தலைவராக விளங்கினார். ஈசனின் முக்கிய இருப்பிடமான வாரணாசியை காவல் காக்கும் பெருமை பெற்றார். அங்குள்ள நந்தீஸ்வரர் கோயிலின் சிவகணமாக பணி புரியும் பேறு பெற்றார். உடல், உயிர், பஞ்சபூதம், தத்துவம் என சிவன் பார்வதிக்கு உபதேசித்த ரகசியம் அனைத்தையும் எதிரில் இருந்த நந்தி கேட்டு ஞானம் பெற்றார்.

நந்தீசர் தன் மருத்துவ ஞானத்தை சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர், திருமூலர், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய எட்டு சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்து, எட்டு திசைக்கும் அனுப்பி வைத்தார். அவர்களே சித்த ஆயர்வேத மருத்துவத்தின் சித்தர்களாக ரிஷிகளாக உள்ளனர். ஞானம் பெறும் முறைகளை எளிமைப்படுத்தி அதன் மூலமாக சாகா வரம் பெற்று கற்ப காலம் வாழும் ஞானத்தை கண்டறிந்தார். அதனை கருக்கிடை ஞானம் என்ற நுாலில் எழுதினார்.

பார்வதிக்கு உபதேசித்த சாகாவரம், பிறவா வரம், இறவா ஞானம் பெறும் முறைகளை வெளிப்படையாக எழுதியதால் சிவன் கோபம் கொண்டார். தலைமை சிவகணமாக இருந்த நந்திதேவரை கல்லாக மாறும்படி சாபமிட்டார். குரு, சீடன் பாரம்பரியம் சிறப்பானது. குருவிற்கு அடிபணிதலும், குரு தீட்சை கிடைக்கும் வரை ஞான ரகசியங்களை பாதுகாப்பதும் சீடனின் முக்கிய பணி. இதனை மீறிய நந்திதேவர் மீது சிவன் கோபம் கொண்டது நியாயமானதே.

சிவனின் கோபத்திற்கு மாற்று உண்டா? சிவனை வணங்கியபடியே நந்திதேவர் கல்லாக மாறினார். தலைமை சீடன் கல்லாக மாறியதைக் கண்ட பார்வதி வருந்தினாள். நந்திதேவரை மன்னிக்குமாறு சிவனிடம் வேண்டினாள். பார்வதியின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத சிவன் நந்திதேவருக்கு உயிர் கொடுத்தார்.

தவறை உணர்ந்த நந்திதேவர் “எக்காலமும் சிவனின் காலடியில் வணங்கிய நிலையிலேயே இருப்பேன்” எனக் கூறி மண்டியிட்டு பணிந்தார். அனைத்து கோயில்களிலும் மண்டியிட்டு வணங்கிய நிலையில் நந்தி இருக்கிறார். பிரதோஷ காலத்தில் நந்தியை வணங்குவதால் சிவனருள் கிடைக்கும்.

நந்தி வெறும் சிவனின் வாகனம் மட்டுமல்ல, சிவனின் முதன்மை சீடர், காவலர். அவர் எப்போதும் சிவனை நோக்கியபடியே இருப்பதன் மூலம் கடவுளை நோக்கி எப்போதும் விழிப்புணர்வு, கவனத்துடன் பக்தன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நந்தி அமர்ந்திருக்கும் நிலை சிவனை அடைய நிதானமும் அடக்கமும் அவசியம் என்பதை காட்டுகிறது.

நந்தி கருக்கடை, நந்தி எட்டு, நந்தீசர் 300 போன்ற மருத்துவ ஞான நுால்களை எழுதினார். நந்தீசர் தன் நுால்களில் சிவனை தந்தையாகவும், பார்வதியை தாயாகவும் அவர்களின் அருளால் தான் சித்தராக ஆனோம் என்றும் குறிப்பிடுகிறார். வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோயிலில் முக்தி பெற்றார்.

நாரதர் வியப்புடன், “மகேஸ்வரரே! தங்களின் எதிரில் மண்டியிட்டு உள்ள நந்தியை சிவகணம் என்றே நினைத்தேன். அவரும் சித்தரின் அவதாரம் தானா. என்னே... அற்புதம் தங்களின் திருவிளையாடல்” என்றார்.

சித்தர்கள் நாடு கடந்தவர்கள். பல நாடுகளுக்கு சென்று மக்களுக்கு நன்மை செய்து பெருமை பெற்றவர்கள். அவ்வாறு ரோம் நாட்டிற்கு சென்று மக்களுக்கு மருத்துவம் கற்றுக் கொடுத்த சித்தரை பற்றி சொல்லுங்கள்” என பார்வதி கேட்க நாரதரும் ஆவல் கொண்டார்.



- விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us