ADDED : செப் 03, 2026 11:09 AM

செப்டம்பர் 4 - கிருஷ்ண ஜெயந்தி
பொய், தந்திரம், திருட்டு என இருக்கிறாரே பகவான் கிருஷ்ணர் எனக் கேட்டார் பக்தர் ஒருவர். அவருக்கு விளக்கம் அளித்தார் காஞ்சி மஹாபெரியவர்.
''ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று நள்ளிரவில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். அப்போது இங்கு மட்டுமல்ல... தேவலோகம், பிதுர்லோகத்திலும் கூட இரவாக இருந்தது. கிருஷ்ணர் பிறந்த இடமும் இருள் நிறைந்த சிறைச்சாலை. அவருடைய பெயரும் கிருஷ்ணன். அதாவது 'கருப்பன்'. இருட்டில் அவதரித்தாலும் உயிர்களைக் காப்பாற்ற வந்த ஞானச் சூரியனாக, அழகானவராக அவர் இருந்தார்.
குழந்தை பருவத்தில் இருந்தே திருவிளையாடல் செய்து பக்தர்களை பாதுகாத்தார். எல்லாம் மாயாஜாலம் நிறைந்த நாடகம். தாய் யசோதையிடம் குறும்பு செய்யும் குழந்தை, மாடு மேய்க்கும் சிறுவன், குழலுாதும் இசை கலைஞன், மல்யுத்தம் செய்யும் வீரன், துாது செல்லும் ராஜதந்திரி, தேரோட்டி, திரவுபதியின் மானம் காத்தவன், பீஷ்மருக்கு முக்தி அளித்தவன், தன்னைக் கொல்ல வந்த வேடன் ஜரனுக்கும் அருள் செய்தவன் என அவருடைய விளையாட்டுக்கு எல்லையே இல்லை.
ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டவராக மனிதர்கள் வாழ்கின்றனர். திருடனும் இங்கு வாழ்கிறான். நல்லவனும் வாழ்கிறான். முட்டாள், அறிவாளி, கல் மனசுக்காரன், இரக்கமுள்ளவன், கஞ்சன், ஊதாரி என இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம். நல்லவனால் கெட்டவர்களை கவர முடியாது. ஏனென்றால் ஒரு திருடன் இன்னொரு திருடனை பற்றி அறியவே ஆசைப்படுகிறான். உல்லாசமாக வாழ ஆசைப்படுபவன் உல்லாசமான ஒருவனையே ரசிக்கிறான்.
நல்லவரை மட்டுமின்றி கெட்டவரையும் கவர்ந்திழுக்கவே திருடன், தந்திரசாலி என பலவிதமாக வேஷமிட்டார் கிருஷ்ணர்.
தன் திருவிளையாடல் மூலம் நல்லவர், கெட்டவர் என இரு தரப்பையும் கவர்ந்தார். அனைவருக்கும் ஞானம், மோட்சத்தை தரும் கிருஷ்ணரின் அவதாரம் முழுமையானது (பரிபூரணமானது). அவரை மனதில் நினைத்தாலே நம் வாழ்வு இனிக்கும்'' என்றார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும்.
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.
* மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவனே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
