sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 28

/

பச்சைப்புடவைக்காரி - 28

பச்சைப்புடவைக்காரி - 28

பச்சைப்புடவைக்காரி - 28


ADDED : ஆக 22, 2024 12:24 PM

Google News

ADDED : ஆக 22, 2024 12:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரிசுக்காகப் பரிதவித்தேன்

என்னுடைய பதிப்பாளரின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.

“ஆன்மிகப் புத்தகங்களுக்கு போட்டி அறிவிச்சிருக்காங்க. முதல் பரிசு ஒரு லட்சம். இரண்டாவது ஐம்பதாயிரம், மூன்றாவது முப்பதாயிரம். 12 ஆறுதல் பரிசு, தலா பத்தாயிரம் ரூபாய். பச்சைப் புடவைக்காரியோட அன்பை பத்தி நீங்க எழுதின புத்தகத்த அனுப்பி வைக்கறேன். முதல் பரிசு உங்களுக்கே”

வானத்தில் பறக்க ஆரம்பித்தேன். ஒரு மாதம் கழித்து அழைத்தார் பதிப்பாளர்.

“15 புத்தகத்த தேர்ந்தெடுத்துட்டாங்க. அதுல உங்க புத்தகம் இருக்கு. உங்களுக்கு முதல் பரிசுதான் கிடைக்கப்போகுது . பாராட்டு விழாவ நான்தான் நடத்துவேன்”

நாட்கள் நகர்ந்தன. தகவல் எதுவுமில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை செய்தித் தாளைப் புரட்டிய எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் இருந்தன. முதல் மூன்றில் என் பெயர் வரவில்லை. சரி, ஆறுதல் பரிசாவது இருக்கும் என தேடினேன்.

12ல் கூட எனக்கு இல்லை.

போட்டியின் நடுவர் யாரென பார்த்தேன். எழுத்துலகின் பெரிய ஆளுமைகள். இவர்கள் யாருக்கும்

என் எழுத்து பிடிக்காமல் போனதே! உள்ளபடியே என் எழுத்தில் தரம் குறைந்ததோ? எழுதுவதை

நிறுத்திவிட்டால் என்ன?

“செத்து விடுவாய்” குரல் கேட்டு அதிர்ந்தேன். உருவெளிப் பாடாக உமையவள் தோன்றினாள்.

“எழுதும் வரைதான் நீ வாழ்வாய். நீயாகக் கேட்டுப் பெற்ற வரம் அது”

“ஒரு ஆறுதல் பரிசு வாங்கக் கூடத் தகுதியில்லாதவனாகி விட்டேன். எழுதினால் என்ன? இல்லை, செத்தால்தான் என்ன?”

“முட்டாள்தனமாகப் பேசாதே. போட்டியின் நடுவர்கள் யார்?”

“புகழ் பெற்ற எழுத்தாளர்கள்”

“ஒரு சமையல்காரனின் வேலைப்பாடு நன்றாக இருக்கிறது என யார் சொல்லவேண்டும்?”

“அவன் சமைத்ததைச் சாப்பிடுபவர்கள்”

“சாப்பிடுபவர் சொல்ல வேண்டுமா? இல்லை, மற்ற சமையல்காரர்கள் சொல்ல வேண்டுமா?”

“இதில் என்ன சந்தேகம்? சாப்பிடுபவர்தான் சொல்லவேண்டும்”

“எழுத்தை பொறுத்தமட்டில் நீ சமையல்காரன். போட்டியின் நடுவர்கள் உன்னைவிடப் புகழ் பெற்ற சமையல்காரர்கள். அவர்கள் எதற்காக அங்கீகாரம் கொடுக்க வேண்டும்? உன் சமையலைச் சாப்பிடுபவர்களிடமிருந்து அங்கீகாரம் வந்தால் போதாதா?” புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது.

“செய்முறை விளக்கம் தருகிறேன். அப்போதுதான் புரியும். அதுவரை நிறுத்தாமல் எழுதிக்கொண்டிரு”

தாய் மறைந்துவிட்டாள்.

நாட்கள் ஓடின. பரிசு கிடைக்காதது பற்றி பதிப்பாளர் துக்கம் விசாரித்தார். அடுத்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவை விமரிசையாக நடந்துவோம் என சமாதானப்படுத்தினார். வேண்டாம் என்றேன்.

அந்த வெள்ளிக்கிழமையை என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது. மதியம் மணி மூன்று. திடீரென என் அறைக்குள் நுழைந்தார் நரம்பியல் சிகிச்சை நிபுணர் சுந்தரம். தலைமுடி கசங்கியிருந்தது. கண்கள் சிவந்திருந்தன.

“எழுந்து நில்லுங்கண்ணா”

நடுங்கியபடியே எழுந்து நின்றேன். சட்டென காலில் விழுந்தார். அவரைத் துாக்கி நிறுத்தினேன். என்னைத் தழுவிக் கொண்டார்.

விம்மலுடன்,“இன்னும் சாப்பிட வீட்டுக்குப் போகலண்ணா. முதல்ல உங்ககிட்ட சொல்லிட்டுப் போகணும்னுதான் வந்தேன். நீங்க ஆயிரம் வருஷம் எழுதிக்கிட்டேயிருக்கணும்ணா”

“என்னாச்சு டாக்டர்?”

சுந்தரத்தின் கைகள் இன்னும் நடுங்கின. உதவியாளரை காபி வாங்கிவரச் சொன்னேன். சுந்தரம் அமர்ந்தார்.

“என்கூட மெடிக்கல் காலேஜ்ல படிச்சவனோட அக்கா கீதாவுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. பயங்கர உடம்பு வலி. முக்கிக்கிட்டு முனகிக்கிட்டு இருந்தாங்க. அவங்க உடம்புல ஏற்கனவே இருக்கற வியாதிகளுக்காக அவங்களுக்கு இம்யூனோ சப்ப்ரசண்ட் ட்ரக்ஸ், நோய் எதிர்ப்புச் சக்தியக் குறைக்கற மருந்த கொடுத்துக்கிட்டிருக்கேன்.

“எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தோம். ப்ளேட் லெட்ஸ் - ரத்தத் தட்டுகள் ரொம்பக் குறைஞ்சிருச்சி. ஒன்றரை லட்சம் இருக்க வேண்டிய இடத்துல இருபதாயிரம்கூட இல்ல. சாவோட விளிம்புக்குப் போயிட்டாங்க. சாதாரண ஆளா இருந்தா அவங்கள தீவிரச் சிகிச்சைப் பிரிவுல சேர்த்து சிகிச்சை அளிக்கலாம். ஆனா அவங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சமும் இல்லையே. ரத்தத்துல வெள்ளை அணுக்களோட அளவு ரொம்பக் குறைஞ்சிருச்சி. அந்தச் சூழ்நிலையில அவங்கள ஐசியூவ வைக்கறது பெரிய ஆபத்து”

“ஏன்?”

“தீவிரச் சிகிச்சைப் பிரிவுல இருக்கறவங்க எல்லாம் பெரிய பெரிய நோயோட போராடுறவங்க. யாருக்கு எந்த மாதிரி தொற்று இருக்குன்னு தெரியாது. கீதா அங்க போனா அரை மணி நேரத்துல செத்திருவாங்க. அங்க போகலேன்னா சிகிச்சை ரொம்ப சிக்கலாகிச் செத்திருவாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலண்ணா. என்னுடைய படிப்பு, அனுபவம், அந்தக் கார்ப்பரேட் ஆஸ்பத்திரில இருக்கற வசதிகள், நோயாளி குடும்பத்துல இருக்கற பணம் - இது எதுனாலயும் கீதாவக் காப்பாத்த முடியாதுன்னு தெரிஞ்சி போச்சிண்ணா. ரூம்ல கதவப் பூட்டிக்கிட்டு அரை மணிநேரம் அழுதேண்ணா. பச்சைப்புடவைக்காரி படத்தைப் பாத்தேன். வழி காட்டிட்டாண்ணா.

கீதாவவோட தங்கையக் கூப்பிட்டுச் சொன்னேன். “இனிமே உன் அக்காவ மனுஷ முயற்சியால காப்பாத்த முடியாது. பச்சைப்புடவைக்காரிதான் காப்பாத்தணும். அவ ஓன்னு அழ ஆரம்பிச்சிட்டா.இப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி இதுதாம்மான்னு சொல்லி பச்சைப் புடவைக்காரி புத்தகத்த கொடுத்தேன்.

உங்கக்காகிட்ட உக்காந்து இந்தப் புத்தகத்த சத்தம் போட்டுப் படிச்சிக் காமி. புத்தகத்துல இருக்கற ஒவ்வொரு வார்த்தையும் அக்கா காதுல விழணும். அவங்க கண்ணீர் விட்டு அழணும்.

'இந்தப் புத்தகத்தப் படிச்சா அழுகை எல்லாம் வருமா என்ன?'ன்னு கேட்டாண்ணா. படிச்சிப்பாருன்னு சொல்லிட்டேன்.

மூணு நாள். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் விடாமப் படிச்சா தங்கை. நாலாவது நாள் பயந்துக்கிட்டே டெஸ்ட் பண்ணினோம். ப்ளேட்லெட்ஸ் ஒன்றரை லட்சத்துக்கு மேல வந்திருச்சி. நார்மலாயிருச்சி. அப்படி ஒரு எழுத்த உங்களுக்குக் கொடுத்திருக்காளே.. பச்சைப்புடவைக்காரி அவளைச் சொல்லணும்ணா. உயிரக் காப்பாத்தறதுக்குன்னே நான் படிச்ச மருத்துவத்துக்குக்கூட இல்லாத சக்தி உங்க எழுத்துக்கு இருக்குண்ணா. கிளம்பறேன்”

என்னால் அதற்கு மேல் அங்கே உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவசரம் அவசரமாக அறையைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன். காருக்கருகில் தள்ளுவண்டியில் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். யார் இவள்?

“என்னப்பா பரிசு பிடித்திருந்ததா?”

இருப்பது தெருவென்றும் பாராமல் அவள் கால்களில் விழுந்தேன்.

“நான் அன்பு வடிவானவள். என்னை பற்றி எழுதும்போது உன் எழுத்தில் என் அன்பு இறங்கிவிடுகிறது. அதனால்தான் உன் எழுத்து அவளின் உயிரைக் காப்பாற்றியது. வேறு என்ன பரிசு வேண்டும் சொல் தருகிறேன்”

“உங்களிடம் பரிசு கேட்கும் அளவிற்கு முட்டாள் இல்லை நான். உங்களையே பரிசாகக் கேட்கும் உங்கள் கொத்தடிமை நான். நான் எழுதும்வரை வாழவேண்டும். என் எழுத்தில் உங்கள் அன்பு என்றென்றும் வாழவேண்டும் தாயே. வேறு எந்தப் பரிசையும் எதிர்பார்க்காத மனம் வேண்டும்”

கலகலவென சிரித்தபடி காற்றோடு கலந்தாள் கனகாம்பிகை.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us