sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 34

/

பச்சைப்புடவைக்காரி - 34

பச்சைப்புடவைக்காரி - 34

பச்சைப்புடவைக்காரி - 34


ADDED : அக் 04, 2024 08:50 AM

Google News

ADDED : அக் 04, 2024 08:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோயை தீர்த்தவள்

வருமான வரி அலுவலகத்தில் காத்திருந்தபோது ஒரு பெண் கண்ணீர் மல்க என்னைப் பார்த்துக் கை கூப்பினாள்.

“என் பேரு பரிமளா. இங்கதான் வேலை பாக்கறேன். தற்கொலை செஞ்சிக்கலாமாங்கற அளவுக்குப் பெரிய பிரச்னை சார்.”

“என்ன?”

“என் பையனுக்கு 12 வயசு சார். ஏழாவது படிக்கிறான். போன மாசம் திடீர்னு காய்ச்சல் வந்தது. டாக்டர்கிட்ட போனேன். ஊசி போட்டாங்க. மருந்தெல்லாம் கொடுத்தாங்க. காய்ச்சல் குறையலை. கால்கள் விளங்காம போச்சி. கால்ல உணர்ச்சியே இல்ல”

“பிரார்த்தனை பண்றேம்மா. ஏதாவது தெரிஞ்சா சொல்றேன்”

“என் பையன வந்து பாக்கக்கூடாதா?”

பதில் சொல்வதற்குள் இன்னொரு பெண் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டாள்.

“சார், கமிஷனர் உங்கள அவசரமாப் பாக்கணுமாம்”

அவள் பின்னால் ஓடினேன். மாடி ஏறி அங்கே இருந்த ஒரு தனியறைக்குள் நுழைந்தாள். அங்கே யாரும் இல்லை.

“கமிஷனர் கூப்பிட்டதா...''

“கமிஷனர் கூப்பிட்டால் தான் வருவாயோ? இந்தக் காமாட்சி கூப்பிட்டால் வர மாட்டாயோ?”

பச்சைப் புடவைக் காரியை விழுந்து வணங்கினேன்.

“பரிமளா பாவம்”

“நான் என்ன செய்ய வேண்டும்?”

“முதலில் இங்கே உன் வேலையை முடி. இடைப்பட்ட நேரத்தில் பரிமளா துடிதுடித்துப் போய் விடுவாள். அதில் அவர் கர்மக்கணக்கில் இருக்கும் மிச்ச சொச்சம் எல்லாம் தீர்ந்து விடும். நீ அதிகாரியின் அறையைவிட்டு வெளியே வரும்வரை அவள் உலாவிக் கொண்டிருப்பாள். நான் சொல்வதை அப்படியே

அவளிடம் சொல்”

அவ்வளவு பெரிய பிரச்னைக்கு இவ்வளவு எளிய தீர்வா என ஆச்சரியப்பட்டேன்.

“அவளை அனுப்பிவிட்டு என்னை பார்”

நான் வந்த வேலையை முடிக்க அரை மணி நேரமானது. பரிமளா தாழ்வாரத்தில் உலாவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ஓடி வந்தாள். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டோம்.

“பச்சைப்புடவைக்காரிய முழுசா நம்பறீங்களா?”

“வேற யாரையுமே நம்பலை சார்”

“உங்க கணவர் எங்க?”

“எங்களுக்குள்ள ஒத்து வரல. விவாகரத்து ஆகப்போகுது. அநேகமா நாளைக்கு தீர்ப்பு வந்திரும். மகன வளர்க்கற பொறுப்பு என்கிட்டதான் வரப்போகுது. அம்மாகிட்டதான் இருப்பேன்னு பையன் கோர்ட்டுல சொல்லிட்டான். நல்ல ஜீவனாம்சம் கிடைக்கும்னு வக்கீல் சொல்றாரு. எப்படியும் பையன வளர்த்து ஆளாக்கிருவேன். ஆனா இப்படி கால் விளங்காமப் போனா...''

“அப்படின்னா நீங்க தனியாளா வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் ஓடிக்கிட்டு இருக்கீங்க. ஆபீஸ் வேலையும் பாத்துக்கிட்டு இருக்கீங்க”

“வேற வழி?”

“உங்க பையனுக்கு கால் நடக்க முடியாமப் போயிருச்சின்னு கணவரிடம் சொன்னீங்களா?”

“வக்கீல்கிட்ட சொன்னேன். தீர்ப்பு வர நேரத்துல இந்த தகவலச் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு. அப்புறம் குழந்தைய யாரு வளர்க்கறதுங்கறது பெரிய கேள்வியாயிரும். உங்க மகன் உங்களுக்கு கிடைக்கமாட்டான்னு பயமுறுத்திட்டாரு”

“நீங்க இந்த வழக்குல ஜெயிக்கணும். அது மட்டும்தானே உங்க நோக்கம்? வாழ்க்கையில தோத்துட்டாப் பரவாயில்லையா?”

“என்ன சார் சொல்றீங்க” பரிமளா அழுதாள்.

“உங்க பையன் உங்க புருஷனுக்குத்தானே பிறந்தான்?”

“சார்” கோபமாகக் கத்தினாள் பரிமளா.

“பதட்டப்படாதீங்க. பையனோட வாழ்க்கையே தடம் புரளப்போகுது. அப்படி ஒரு வியாதி வந்திருக்கு. அதப் புருஷன்கிட்ட சொல்வது கடமை இல்லையா? டைவர்ஸ் ஆனா உங்க பையனுக்கு அப்பா இல்லன்னு ஆகாதே! உடனே அவருக்குத் தெரியப்படுத்துங்க”

“தெரிஞ்சவங்க மூலமா சொல்றேன்”

“நீங்க தனியா வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலையறதா சொல்லுங்க. நீங்க காலையில பையனோட ஆஸ்பத்திரில இருந்தா சாயங்காலம் உங்க புருஷன் வந்து இருக்கணும்னு சொல்லுங்க”

“அப்புறம் பையன் அப்பாதான் வேணும்னு சொல்லிட்டான்னா?”

“அதுக்காக நீங்க, தனியா கஷ்டப்படற விஷயத்த மறைக்கறது தப்பு”

“டைவர்ஸ் கேஸ்...''

“தீர்ப்பு நகல் கைக்கு வர டயம் ஆகும். அதுக்குள்ள என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்?”

“நீங்க சொல்றபடி செஞ்சா பையனுக்கு...''

“அது எனக்குத் தெரியாதும்மா. நம்பிச் செஞ்சா நல்லது. நான் வரேன்”

பதிலுக்குக் காத்திருக்காமல் வேகமாக படியேறிச் சென்றுவிட்டேன். மேல்படியில் பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள்.

“உனக்கே இந்த தீர்வின்மேல் நம்பிக்கை இல்லை போலிருக்கிறதே! நடக்கப் போவதைக் காட்டுகிறேன் பார்”

உறவினர் மூலமாக கணவனுக்கு செய்தி அனுப்பினாள் பரிமளா. பதறியடித்து வந்தான் கணவன். மகனைப் பார்த்து கண்ணீர் விட்டான். மகனின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

“ராத்திரி நீங்க ஆஸ்பத்திரியில இருங்க. நான் காலையில வரேன்” பதிலுக்குக் காத்திருக்காமல் பரிமளா ஓடி விட்டாள்.

காலை எட்டு மணிக்குப் பரிமளா வந்த போது ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பத் தயாராக இருந்தான் கணவன்.

“ஆறு மணிக்கு வந்துடறேன்” சொல்லி விட்டுப் போய்விட்டான்.

இப்படி பல நாட்கள் நடந்தது. ஒரு நாள் டாக்டர் பரிசோதனை செய்ய வந்ததால் பரிமளா கிளம்ப இரவு 9 மணியாகிவிட்டது.

“சாப்பிட ஏதாவது வாங்கி வரட்டுமா?” என கணவன் கேட்டான். சுரத்தில்லாமல் தலையாட்டினாள். அவளுக்குப் பிடித்த உணவை வாங்கி வந்து கொடுத்தான்.

மகன், “ஒரு மாதிரியா இருக்கும்மா. நீங்களும் இங்கேயே இருங்களேன்”. அவளும் சம்மதித்தாள். நாட்கள் ஓடின. பரிமளாவும், கணவனும் இயல்பாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். பரிமளா வரும் போது கணவனுக்கு உணவு செய்து கொண்டு வந்து கொடுத்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்தே கேண்டீனில் சாப்பிட்டனர்.

திடீரென ஒருநாள் அவர்களுடைய மகன் கால்களை அசைக்கத் தொடங்கினான். மருத்துவர்கள் பிசியோ தெரப்பி சிகிச்சை கொடுத்தனர். ஒரே மாதத்தில் நடக்கத் தொடங்கினான். கணவனும் மனைவியும் அவனைக் கட்டிக்கொண்டு அழுதார்கள்.

“நம்ப முடியவில்லை தாயே! என்னாயிற்று”

“அவர்கள் மகனுக்கு வியாதியெல்லாம் ஒன்றும் இல்லை. தாயும் தந்தையும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற அதிர்ச்சியை தாங்க முடியாமல் கால்கள் செயலிழந்தன. பின் அவர்கள் இணக்கமாக இருப்பதைப் பார்த்தவுடன் அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதில் அவன் கால்கள் தானாக குணமாகி விட்டன. உனக்கு என்ன வேண்டும் கேள்”

“மனதில் அன்பு குறைந்தால் அது எப்படி நெருக்கமானவர்களைப் பாதிக்கிறது என அறியும்போது பயமாக இருக்கிறது தாயே. என் உயிரையே இழக்க நேர்ந்தாலும் என் மனதில் இருக்கும் அன்பை எந்தக் காலத்திலும் இழக்கக்கூடாது”

தாயின் சிரிப்பு அந்தக் கட்டடம் எங்கும் எதிரொலித்தது.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us