sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 16

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 16

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 16

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 16


ADDED : அக் 04, 2024 08:51 AM

Google News

ADDED : அக் 04, 2024 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 குறுக்குத்துறை முருகன்

தென்காசியில் இருந்து வந்த பயண களைப்பில் துாங்கிக் கொண்டிருந்தான் பேரன் யுகன். பாட்டிக்குத் தான் நேரம் போகவில்லை. யுகனை எதிர்பார்த்து காத்திருந்தார். அதுவரை கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி இருந்தார்.

ஒரு வழியாக வந்தான் யுகன். நான்கு நாள் கழித்து யுகனை பார்க்க அன்பு பொங்கியது பாட்டிக்கு.

“என்ன யுகா... ஏதாவது சாப்பிட்டாயா?”

“தேவந்திகிட்ட காபி மட்டும் கேட்டிருக்கேன். மதியம் சாப்பிட்டுக்குறேன்”

“சரி, பயணம் நல்லபடி இருந்ததா? காலையில நாலு மணிக்கு வந்துடுவேன்னு சொன்னாங்க. ஆறு மணி ஆயிடுச்சே ஏன் அவ்வளவு நேரம்?”

“நாங்க தென்காசியில் இருந்து ரயில் ஏற வரும் போது ஒரே பதட்டமாயிடுச்சு பாட்டி. வழியில் ஒரு விபத்து. எதிரில் வந்த வேற ரெண்டு வண்டிங்க நல்லா மோதிடுச்சு. நேத்து கொஞ்ச நேரம் தவறி இருந்தா அது எங்க வண்டி மேல மோதி இருக்கும். நல்ல வேளை. ஒரு வழியா நேரத்துக்கு ரயில் ஏறிட்டோம்”

“யாருக்கும் ஒன்னும் ஆகலையே யுகா”

“ எங்க யாருக்கும் ஒன்னும் இல்ல பாட்டி. பாவம் எதிரில் வந்தவங்களுக்கு தான் அடி பலமா விழுந்துச்சு. கடவுள் தான் காப்பாத்தணும்.”

“ ஒரு ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோ.

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

இந்த திருப்புகழ் பாடலை முருகனை நினைத்து சொன்னால் விபத்து ஏற்படாது. நீங்கள் எல்லாம் தினமும் வெளியே போயிட்டு வர்றவங்க. அதனால இதை பாடலாமே யுகா”

“நிச்சயமா. ஏறு மயிலேறி... திருப்புகழ் பாட்டு எனக்கு மனப்பாடமா தெரியுமே. குளிச்சு முடிச்சதும் பாடிடலாம் பாட்டி”

“இலஞ்சி முருகனை பார்த்துட்டு வந்தியே... என்ன சொன்னார் இலஞ்சி முருகன்?”

“ம்... உன் வீட்டுக்கு நான் அனுப்பி இருக்க பாட்டிய பத்திரமா பாத்துக்கோ. திருப்பி அனுப்பிடாதேனு சொன்னார்” என்றான் யுகன்.

சிரித்தபடி “ அட, அப்படியா சொன்னான் முருகன்! சரி சரி கோயில் எப்படி இருந்துச்சு?”

“ இடமும் கோயிலும் அருமையா இருந்துச்சு. தென்காசி பயணம் ரொம்ப நிறைவா இருந்தது. ஒரே கல்லில் மூணு மாங்கா அடிச்சா மாதிரி''

“இன்னும் நீ குறுக்குத்துறை முருகன் கோயிலையும் தரிசிச்சிட்டு வந்திருந்தா ஒரே கல்லில் நாலு மாங்கா அடிச்சி இருக்கலாம்”

“ அட மாங்கா போச்சு பாட்டி” என சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான் யுகன். காபியை கொண்டு வந்து கொடுத்த தேவந்தியும் இவர்கள் சிரிப்பில் ஐக்கியமானாள்.

“ யுகா கேட்டுக்கோ. திருச்செந்துார் போன பலனை இந்த குறுக்குத்துறை முருகன தரிசிச்சாலும் கிடைக்கும். ஆனா அவரை பார்க்க நமக்கு நேரம் இருந்தாலும் வருஷத்துல பாதி நேரம் அவர் தண்ணிக்குள்ளே தான் இருப்பார். அதனால அவர அங்க போய் பார்த்து தரிசிக்கறதே புண்ணியம் தான்.”

“ ஏன் பாதி நேரம் தண்ணிக்குள்ள இருக்காரு?”

“திருவுரு மாமலை எனப்படும் குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் இருப்பதால் வெள்ளம் வரும் போதெல்லாம் கோயிலும் மூழ்கிப் போகும். அதனால் கோயில் எப்போ திறந்திருக்குமோ அப்பதான் தரிசிக்க முடியும். அவன் அருள் இருந்தால் மட்டுமே குறுக்குத்துறைக்குப் போக முடியும்”

“சரி பாட்டி, அது என்ன திருவுருமாமலை? வித்தியாசமாவும் புதுசாவும் இருக்கே”

“ அதுவா... இங்குள்ள பாறைகள் தெய்வ வடிவங்களை செதுக்க ஏற்றதாக இருந்ததால் சிற்பிகள் பாறைகளை செதுக்கி உருவம் கொடுத்தார்கள். அதனால் 'திருவுரு மாமலை' என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள பாறையில் தான் திருச்செந்துார் மூலவர் செய்யப்பட்டார். அதே சிற்பி மற்றொரு சிலை செய்ய எண்ணி பாறை ஒன்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன் சிலையை செதுக்கத் தொடங்கினார். ஆனால் அது முழுமை பெறாமல் இருந்தது. பின்னாளில் திருப்பணி செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதினம் மூலம் கும்பாபிஷேகம் நடந்தது”

“உண்மையிலேயே திருச்செந்துார் போன்றே சிற்பம் இருக்கா பாட்டி”

“ ஆமாம்பா செந்துார் முருகனைப் போல குறுக்குத்துறை முருகனும் இருக்கிறார். வலது மேல் கையில் வஜ்ராயுதம், வலது கீழ் கையில் மலர், இடது மேல் கையில் ஜபமாலை, இடது கீழ் கையை தொடையில் வைத்த நிலையில் நின்றபடி இருக்கிறார். அடிக்கடி வெள்ளம் சூழும் இந்த கோயிலின் அமைப்பு சிறப்பானது.

இங்கு ராஜகோபுரம் சிறியதாக இருந்தாலும் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.

அதன் வழியாக நுழைந்தால் மணிமண்டபம் உள்ளது. இங்கு பலிபீடம், கொடிமரம், அலங்கார மண்டபம் என ஆற்றின் நடுவில் இருப்பது அழகு. இந்த மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழையும் போது தென்புறம் விநாயகரும் வடபுறம் முருகனும் காட்சி தருவர். அவர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். அதன் நடுவில் மயிலும் நந்தியும் உள்ளனர். இது தவிர நெல்லையப்பர், காந்திமதி ஐம்பொன் வடிவில் உள்ளனர்''

“ சரி பாட்டி. வெள்ளம் சூழ்ந்தால் கோயிலை அப்படியே விட்டுட்டு வருவாங்களா என்ன?”

''இல்லைப்பா, இங்கே இருக்கிற உற்ஸவரை மேல கோயிலில் கொண்டு போய் வழிபடும் வழக்கம் இருக்கு. அதனால வெள்ளம் சூழும் நிலை வந்தால் மேலக்கோயிலில் இருந்து முருகன் அருள்பாலிப்பார்”

''சரி... உண்டியல், நகைகள், கோயிலில் உள்ள முக்கிய பொருட்கள் எல்லாம் இருக்குமே. இவற்றையெல்லாம் அங்கேயே விட்டுட்டு போயிடுவாங்களா எப்படி?”

“நல்ல மழை பெஞ்சு வெள்ளம் வரும்னு தெரிஞ்ச உடனே இங்குள்ள உண்டியல், நகைகள், சப்பரம், உற்ஸவர் திருமேனி அனைத்தையும் மேலக்கோயிலுக்கு கொண்டு போயிடுவாங்க. அதனால ஒரு பிரச்னையும் இல்லை. நிலைமை சீரானதும் வெள்ளமெல்லாம் வடிஞ்சு போனதும் மறுபடியும் கோயிலை சுத்தப்படுத்தி வழிபட தொடங்குவாங்க”

“சரி பாட்டி, அப்பப்ப நீருக்குள்ள மூழ்கிடுதே... இந்த கோயில் பாதிக்கப்படாதா? ஆச்சரியமா இருக்கே''

“இந்த குறுக்குத்துறை கோயில் 17ம் நுாற்றாண்டில் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது 300 வருடங்களுக்கும் மேலாக பல வெள்ளப்பெருக்கை சந்தித்திருக்கு. வெள்ளம் வரும் போது நீர் வெளியேறுவதற்கு போதுமான இடைவெளி இருப்பதால் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. அத்துடன் இந்த கோயிலில் சுவர் படகின் முன் பகுதியைப் போல கூர்மையாக இருப்பதால் எத்தகைய வெள்ளமும் கோயிலை பாதிப்பதில்லை. தற்போது ரசாயன கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை போக்கத்தான் பராமரிப்பு செய்ய வேண்டிய அவசியம் நேர்கிறது.”

“அடுத்த முறை தென்காசிக்கு போனா கண்டிப்பா குறுக்குத்துறை முருகனை தரிசிக்கணும் பாட்டி”

“ கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும். திருச்செந்துார் போக முடியாதவர்கள் கூட குறுக்குத்துறை வருகிறார்கள். செவ்வாய் தோஷ பரிகாரத் தலமும் கூட. வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு தங்க அங்கி சாத்துவாங்க. தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகையும் விமர்சையாக இருக்கும்.

தோரணமலை முருகனும் இலஞ்சி முருகனும் தரிசனம் குடுத்தா மாதிரி குறுக்குத்துறை முருகனும் கூப்பிடுவாரு. நீ வேணா பாரு யுகா... நிச்சயம் நடக்குதா இல்லையான்னு” தலையாட்டியபடி ரசித்தான் யுகன்.

“சரி யுகா, அடுத்த வாரம் வாலாஜால ஒரு கல்யாணம் இருக்கு இல்லையா... போகும் போது அப்படியே இளையனார் முருகனை தரிசனம் செய்யலாமா?”

“யோசிச்சு சொல்றேன் பாட்டி, அன்னைக்கு வேற வேலை ஏதாவது இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றேனே” என சொல்லிவிட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அமுதனை தேடிச் சென்றான் யுகன்.



-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us