ADDED : அக் 09, 2024 01:13 PM

ஆலமரத்தின் நிழலில்...
அலைபேசி ஒலித்தது. இரவு பத்து மணி. நரம்பியல் மருத்துவர் சுந்தரம்.
“எங்க ஆஸ்பத்திரில வேலை பாக்கற டாக்டர் தீபா தற்கொலைக்கு முயற்சி செஞ்சாங்க. காப்பாத்திட்டோம். பச்சைப்புடவைக்காரி புத்தகத்தை கொடுத்தேன். இப்போ ருத்ர தாண்டவம் ஆடுறாண்ணா. அன்பே இல்லாதவள அன்பரசின்னு எப்படி சொல்லலாம்? கல்நெஞ்சுக்காரியக் கருணைக்கடல்னு இந்தாள்தான் சொல்றாருன்னா உங்க புத்தி எங்க போச்சுன்னு கத்தறா. எனக்குப் பயமா இருக்குண்ணா. வர முடியுமா?”
தீபாவிற்கு 38 வயது. திருமணமாகவில்லை. வசதியான குடும்பம். தந்தை இல்லை. வயதான தாயும் படுத்த படுக்கையாகி விட்டாள். முன்னதாகவே மெனோபாஸ் தீபாவிற்கு வந்துவிட்டது என தெரிந்தவுடன் விஷத்தைக் குடித்து விட்டாள்.
மருத்துவமனைக்குச் சென்ற போது, தீபாவை அறிமுகம் செய்துவிட்டு ஆளை விட்டால் போதும் என ஓடி விட்டார் மருத்துவர் சுந்தரம்.
“வாங்க எழுத்தாளர் சார். ஒரு ராட்சசிய, கல்நெஞ்சுக்காரிய, அன்பரசி, கருணைக்கடல்னு புத்தகம் பூரா சொல்றீங்களே. உங்கள மாதிரி ஆளுங்கதான் எங்க மனசுல தப்பான நம்பிக்கைய உண்டாக்கி கடைசியில அது நடக்காம போனவுடனே தற்கொலைக்குத் துாண்டி விடறாங்க.”
விட்டால் தற்கொலைக்குத் துாண்டியதாக என் மீது புகார் கொடுத்துவிடுவாள் போலிருக்கிறதே
“25 வயசுலருந்து கல்யாணம் ஆகாதான்னு ஏங்கிக்கிட்டிருக்கேன். எனக்கு என்ன சார் குறைச்சல்? படிப்பு இல்லையா, அழகு இல்லையா, பணம் இல்லையா? இந்த ஆஸ்பத்திரிலேயே பெஸ்ட் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் நான்தான்னு உங்க நண்பர் சுந்தரமே சொல்றாரு”
“நம்பிக்கை இழக்க வேண்டாமே...'' என் குரலே பலவீனமாக இருந்தது.
“நம்பிக்கையா? இனிமேலுமா? இனிமே என்னால குழந்தை பெத்துக்கவே முடியாதாம். என்ன ரெண்டாம் தாரமாக்கூட யாரும் கேட்க மாட்டாங்க.”
நான் மவுனம் சாதித்தேன்.
“இப்போ யாருமில்லாத தனிமரமா நிக்கிறேன். உங்க பச்சைப்புடவைக்காரி என் கூடவந்து துணைக்கு நிற்பாளா? பெரிசா எழுத வந்துட்டாரு”
என் குரலை உயர்த்தினேன்.
“சாகற வரைக்கும் உங்களத் தனி மரமாத்தான் நிக்க வைக்கப்போறா பச்சைப்புடவைக்காரி''
அதிர்ச்சி வைத்தியத்திற்கு நல்ல பலன் இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
“தனிமரமாத்தான் நிற்கப் போறீங்க, தீபா. ஆனா பட்ட மரமா இல்ல. ஒரு பெரிய ஆலமரமா நிற்கப் போறீங்க. ஆயிரம் குழந்தைங்களுக்கு நிழல் தரப் போறீங்க. உலகமே கொண்டாடற மாதிரி பெரிய வாழ்க்கை வாழப் போறீங்க. புருஷன் பொண்டாட்டி குடும்பம்னு இருக்கற சராசரி வாழ்க்கை உங்களுக்கு இல்ல”
என்னையும் அறியாமல் ஏதோ உத்வேகத்தில் வார்த்தைகள் வந்தன. அடுத்து என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பச்சைப் புடவைக்காரியைப் பிரார்த்தித்தேன்.
“கொஞ்சம் வெளிய இருக்கீங்களா? டாக்டர் பார்க்க வாராரு” என கண்டிப்பாகப் பேசிய நர்சைப் பார்த்ததும் எனக்குக் காரணமில்லாமல் கண்ணீர் வந்தது. நான் வெளியேறியபோது என் கூடவே வந்தாள் அந்த நர்ஸ்.
“இதற்கு மேல் இப்போது பேச வேண்டாம். தீபாவை அதிர்ச்சியில் தவிக்க விடு. வெள்ளி அன்று மாலையில் வா. அதற்குள் உனக்கு என்ன பேச வேண்டும் என தன்னால் தெரியும்”
நர்ஸ் வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியை வணங்கி விட்டு வெளியேறினேன்.
வியாழன் அன்று மாலை. என் நண்பர் சந்திரன் வந்திருந்தார்.
“எனக்கு ஒரு மகன் இருந்தான்னு உங்களுக்குத் தெரியுமா?”
''தெரியாது. உங்களுக்கு இரண்டு மகள்கள் மட்டும்தானே''
“அதைப் பத்தி சொல்றேன். கூலித் தொழிலாளியாத் தான் வாழ்க்கைய ஆரம்பிச்சேன். என் மகனுக்கு அஞ்சுவயசு இருக்கும்போது காய்ச்சல் வந்தது. ஆஸ்பத்திரிக்குக் துாக்கிக்கிட்டு ஓடினோம். பேருக்கு வைத்தியம் பாத்தாங்க. பையன் செத்துட்டான். அதுக்கப்பறம் வெறித்தனமா உழைச்சி இந்த ஐநுாறு கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினேன்.
“எனக்கு ஒரு பெரிய கனவு இருக்கு சார். ஒரு ஏழையோட குழந்தைக்கும் கார்ப்பரேட் ஆஸ்பத்திரில கிடைக்கிற எல்லா வசதிகளும் இலவசமா கிடைக்கணும். ஒரு பெரிய அறக்கட்டளைய உண்டாக்கணும். எல்லா வசதிகளும் உள்ள குழந்தைங்க ஆஸ்பத்திரியக் கட்டணும். ஏழைங்ககிட்ட பணம் வாங்கக் கூடாது. பணக்காரங்ககிட்ட நியாயமா கட்டணம் வாங்கணும். இடம் வாங்கிட்டேன். ஆஸ்பத்திரியக் கட்ட ஐம்பது கோடி ரூபாய் பணம் தயாரா இருக்கு.” என்றார் சந்திரன்.
மேலும் அவர், “சேவை மனப்பான்மை இருக்கற ஒரு டாக்டர் வேணும். சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கணும். தனியாளா இருந்தா நல்லது. அந்த டாக்டரும் இதுல ஒரு ட்ரஸ்ட்டியா இருப்பாரு. ஆஸ்பத்திரிய ஒட்டி அவங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்துடறேன். எல்லா வசதிகளையும் செஞ்சி தரேன். நிறைய சம்பளம் தரேன். ஆனா அர்ப்பணிப்பு உணர்வோட அவங்க வேலை பார்க்கணும். அப்படி ஒரு ஆளத்தான் தேடிக்கிட்டிருக்கேன்”
“கையக் கொடுங்க, சார். அப்படி ஒரு ஆளு கைவசம் இருக்காங்க. எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்க”
வெள்ளிக்கிழமை மாலை மருத்துவர் தீபாவைப் பார்க்கச் சென்றிருந்தேன்.
“வழக்கம் போல அவள் பச்சைப்புடவைக்காரியை திட்டினாள். பொங்கிய கண்ணீரை மறைத்துக்கொண்டு உறுதியாகப் பேசினேன்.“ ரெண்டு வழி இருக்கு தீபா.
ஒன்னு இந்தப் பாட்டில்ல உள்ள துாக்க மாத்திரையை சாப்பிடுங்க. வலியில்லாத மரணம் நிச்சயம். ஆனாலும் அடுத்த பிறவியிலும் துன்பம் தொடரும். இதுவே பச்சைப்புடவைக்காரியின் நியதி''
தீபா அதிர்ச்சியுடன், “ரெண்டாவது வழி என்ன?” எனக் கேட்டாள்.
நண்பரான சந்திரன் தொடங்க உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை பற்றியும், குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கும் பொன்னான வாய்ப்பைப் பற்றியும் சொன்னேன்.
“அப்பவும் தனிமரமாத்தான் இருப்பீங்க, தீபா. ஆனா ஆயிரம் குழந்தைங்களுக்கு நிழல் தர ஆலமரமா இருப்பீங்க. நாடே உங்களத் தலை வணங்கப்போகுது”
என் கைகளை பிடித்தபடி அழுதாள்.
அவளிடம் விடைபெற்று வெளியே வந்ததும் நர்ஸ் வடிவில் நின்ற பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன்.
“உங்களை தீபா பழித்தபோது உணர்ச்சி வசப்பட்டு தனிமரம், ஆலமரம் என எதையோ பேசினேன். ஆனால் சந்திரனின் மனதில் நல்ல எண்ணத்தை விதைத்து தீபாவை வாழ வைத்து விட்டீர்களே”
“உன்னை அப்படி பேச வைத்ததும் நான்தான். உனக்கு என்ன வேண்டும் சொல்? உன்னையும் ஒரு ஆலமரம் ஆக்கட்டுமா?”
“வேண்டாம், தாயே. பச்சைப்புடவைக்காரி என்ற ஆலமரத்தின் வேரில் ஒட்டியிருக்கும் மண் துகளாக இருக்கும் வரத்தையே வேண்டுகிறேன்.
கலகலவென சிரித்தபடி தாய் மறைந்தாள்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com