ADDED : அக் 09, 2024 01:16 PM

பால கங்காதர திலகர்
கணேஷ் சதுர்த்தி விழா எங்கும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதை கவனித்தார் பால கங்காதர திலகர். மக்கள் தங்களுக்குள் கொழுக்கட்டை, பலகாரங்களை பரிமாறிக் கொண்டதைக் கண்டு பெருமிதம் கொண்டார். இந்த ஒற்றுமைக்கும், பரஸ்பர அன்புக்கும் காரணம் யார்?
இதோ இந்த கணபதி தானே! அப்படியே உள்ளம் நெகிழ கணபதியை கைகூப்பி வணங்கினார். பக்தி உணர்வால் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என சிறு வயதிலேயே தீர்மானமாக நம்பினார் அவர்.
ஜூலை 23,1856 ல் திலகர் பிறந்தார். இவரின் தந்தை கங்காதர சாஸ்திரி ஒரு சமஸ்கிருத பண்டிதர்; தாய் பார்வதி பாய். சமஸ்கிருதம், கணிதப் பாடங்களை ஆர்வமுடன் கற்றார்.
ஆங்கிலேய அரசால் தலைவர்கள் கைதாகி, சிறையிலிடப்படும் அவலத்தை திலகர் அறிந்திருந்தார். நாட்டின் மீது பாசம் கொண்டிருந்ததால் சிறையில் உள்ள தலைவர்களை மீட்க வேண்டும் என எண்ணி சட்டம் படித்தார். வாதத் திறமையால் சிறையில் உள்ள பலருக்கு விடுதலை வாங்கித் தந்தார்.
தன் ஐந்து வயது முதல் இறுதி வரை குடும்பப் பாரம்பரியப்படி தலைப்பாகை, மராத்திய வேட்டி, அங்க வஸ்திரம் அணிந்திருந்தார். இதனால் பலமுறை கேலிக்கு ஆளானாலும் அதை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தார்.
இன்றும் கூட, 'கணபதி பாப்பா மோரியா...'என்ற ஆன்மிக உற்சாகக் குரல் எழுகிறதென்றால் அது மகாராஷ்டிர மாநிலத்தின் கணேஷ் சதுர்த்தி விழாவாகத்தான் இருக்கும். 'பாப்பா' என்றால் மராத்திய மொழியில் தந்தை என்று பொருள். மோரியா என்பது 14ம் நுாற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற துறவியான மோரியா கோசாவியைக் குறிக்கும். இவர் கணபதி மீது பக்தி கொண்டவர். இவரையும் சிறப்பிக்கும் வகையில் தான் 'கணபதி பாப்பா மோரியா' எனக் குரல் எழுப்பி உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவைத் தொடங்கி வைத்தவர் பால கங்காதர திலகர்தான்.
ஆன்மிகம், பக்தியில் முன்னோடியாக உள்ளது நம் பாரதம். புராதனமான நம் சனாதன தர்மம், நாத்திகம் உட்பட அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது என்ற உண்மையை திலகர் உணர்ந்திருந்தார். மக்களை தேசப்பற்று உள்ளவர்களாக மாற்றும் ஆற்றல் பக்திக்கு உண்டு; இவ்வாறு தேசிய பக்தி கொண்டவர்கள் எப்போதுமே தம் நாட்டிற்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், தங்கள் தேசத்துக்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஒருசமயம், கோலாப்பூர் மன்னர் மீது ஆங்கிலேய அரசு மேற்கொண்ட அநியாயமான நடவடிக்கைகளை, திலகர் நடத்தி வந்த 'கேசரி' பத்திரிகை விமர்சித்தது. இதற்காக அவரைக் கைது செய்தனர்.
சுதந்திரக் குரல் கொடுத்ததற்காக அடுத்தடுத்து சிறை தண்டனை பெற்றாலும், அங்கும் தன் ஆன்மிக சிந்தனைக்கு திலகர் ஓய்வு கொடுக்கவே இல்லை. அதனால்தான், சிறை வாழ்க்கையின்போதே பகவத் கீதையை ஆதாரமாக வைத்து 'கீதா ரகசியம்' என்ற நுாலை அவரால் எழுத முடிந்தது.
தெய்வீகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, அது தந்த ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும் இந்திய விடுதலைக்குப் போராடிய இந்த மகான் ஆக.1, 1920ல் மறைந்தார்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695