ADDED : நவ 14, 2024 01:32 PM

வழக்கும் விடுதலையும்
முன்னால் அமர்ந்திருந்தவருக்கு வயது 45. சோகமான முகம். “பேரு முத்து. பிசினஸ் செய்றேன். வசதிக்கு குறைச்சல் இல்ல”
அப்புறம்?
“போன வருஷம் ஒரு நாள் காலையில ரயில்வே ஸ்டஷேன்ல இருந்தேன். அப்போ ஒரு ஆளு ஓடி வந்தான். பின்னால் ஒரு ஆளு அரிவாளோட துரத்தி வந்தான். ஓடி வந்தவன் என் மீது சாஞ்சி விழுந்துட்டான். துரத்திக்கிட்டு வந்தவன் அரிவாளால அவன ஒரே போடு போட்டுட்டான். அதுக்கப்பறம் அவன் எங்க போனான்னு யாருக்கும் தெரியாது.
“போலீஸ் என்னப் பிடிச்சிக்கிட்டாங்க. வெட்டுப்பட்டவன ஆஸ்பத்திரிக்குத் துாக்கிட்டுப் போனாங்க. அவன் மரண வாக்குமூலத்துல என்னக் கொன்னது முத்துதான்னு சொல்லிட்டான். அந்த முத்து சத்தியமா நான் இல்ல, சார். போலீஸ்காரங்க என்னப் பிடிச்சி கேஸ் போட்டாங்க.
“வெட்டுப்பட்ட ஆளு மறுநாளே செத்துட்டான். சாகவும் முடியாம வாழவும் முடியாம தவிச்சிக்கிட்டிருக்கேன். கோர்ட் செலவு, வக்கீல் பீஸ்ன்னு என் பணமெல்லாம் கரைஞ்சிக் கிட்டிருக்கு. நிம்மதி இல்லாமப் போயிருச்சி. உண்மையான கொலைகாரன் பிடிபட்டாத்தான் விமோசனம். நான் இன்னும் பெயில்லதான் இருக்கேன். கேஸ் ஜவ்வா இழுக்குது.”
ஏன் இந்த துன்பம் என ஆராயும் நிலையில் நான் இல்லை.
“நல்லா யோசிச்சி வையுங்க சார். வெள்ளிக்கிழமை வந்து பாக்கறேன்”
பதில் சொல்வதற்குள் முத்து சென்றுவிட்டார்.
வெள்ளிக்கிழமை காலை. நடைப்பயிற்சி செய்தபோது பழம் விற்கும் பெண் ஒருத்தி என்னைப் பழம் வாங்க அழைத்தாள்.
மறுத்தேன்.
“முத்துவின் பிரச்னை தீர வழி சொல்லலாம் என பார்த்தால்...''
காலில் விழுந்தேன்.
“இன்று அவனிடம் பேசும்போது அவன் கர்மக்கணக்கு உனக்குப் புரியும். சொல்வதைப் பக்குவமாகச் சொல்லிவிடு”
தாய் மறைந்தாள்.
காலையில் முத்து வந்தார். வந்ததும் வராததுமாய் பச்சைப் புடவைக்காரியைப் பழிக்கத் தொடங்கினார். பொறுமை இழந்தேன்.
“ தப்பு செஞ்ச. தண்டனை அனுபவிக்கற. பச்சைப்புடவைக்காரி என்ன செய்வா?”
குரலை உயர்த்தியதும் முத்து அடங்கினார்.
“உங்க தெருவுலயே உங்க வீடுதான் பெரிசா இருந்துச்சி. அதுல உங்களுக்கு ஒரு பெருமை. உங்க அடுத்த வீட்டுல இருக்கற ராமலிங்கத்துக்கு பூர்வீக சொத்து வித்ததுல நிறையக் காசு கெடைச்சது. அத வச்சிக்கிட்டு தன்னோட வீட இடிச்சிப் பெரிசாக் கட்டினாரு. அது உங்க வீட்ட விட்ட பெரிசா, அழகா இருந்தது அது உங்களுக்குப் பொறுக்கல. நீங்க உடனே வேற வீட்டுக்குக் குடி போயிட்டீங்க.
“ராமலிங்கம் தன்னோட புது வீட்டுல நிம்மதியா வாழக்கூடாதுங்கற ஒரே நெனப்புல உங்க வீட்ட கல்யாண மண்டபமா மாத்தினீங்க. சத்தம், போக்குவரத்து நெரிசல், கூட்டம் - ராமலிங்கம் மட்டும் இல்லாம உங்க தெருவுல இருக்கறவங்க எல்லாம் அவதிப்பட்டாங்க. வீடுகள் இருக்கற இடத்துல கல்யாண மண்டபம் கட்டக்கூடாதுன்னு உங்க தெருக்காரங்க கேஸ் போட்டாங்க. நீங்க அஞ்சு வருஷமா கேச இழுத்துக்கிட்டே வரீங்க. மன உளைச்சல்ல ராமலிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியும் வீடுமா இருக்காரு. செய்யற தப்பெல்லாம் செஞ்சிட்டு பச்சைப்புடவைக்காரிமேல பழியப் போடறீங்களே!”
முத்துவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“கல்யாண மண்டபம் கட்டினது தப்பா? அதுக்காகவா பச்சைப்புடவைக்காரி என்ன கொலைக் கேஸ்ல மாட்டிவிட்டா?”
“நீங்க வருமானத்துக்காக கல்யாண மண்டபத்தக் கட்டலையே! மண்டபத்தோட பராமரிப்புச் செலவுல பாதிகூட வருமானம் வரல. ஆனா ராமலிங்கம் இன்னும் வேதனையில துடிச்சிக்கிட்டுதான் இருக்காரு. அவரு கஷ்டம் அதிகமாக ஆக உங்க கஷ்டமும் அதிகமாகும். ஒருவேளை உங்கமேல கேசை அழகா ஜோடிச்சி கோர்ட் நீங்க தான் கொலைகாரர்ன்னு தீர்ப்பு சொல்லிருச்சின்னா நிச்சயம் ஆயுள் தண்டனை கெடைக்கும். குடும்ப மானமே கப்பலேறிடும்.”
“தற்கொலை பண்ணிக்கறதுதான் வழியா?”
“இன்னொரு வழி இருக்கு. ராமலிங்கத்திடம் மன்னிப்பு கேளுங்க. மண்டபத்த மூடுங்க. அதை ஒரு நல்ல குடும்பத்துக்கு வாடகைக்கு விடுங்க. ராமலிங்கம் பட்ட கஷ்டத்துக்கு நஷ்ட ஈடா ஏதாவது கொடுங்க.”
“இதெல்லாம் செஞ்சா...”
'கேஸ்லர்ந்து தப்புவீங்கன்னு சொல்ல முடியாது. ஆனா கர்மக் கணக்கு சரியாயிரும்”
சற்று நேரம் இருந்து விட்டுக் கிளம்பினார் முத்து. அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு கிளம்பும்போது பழக்காரி வடிவில் இருந்த பச்சைப்புடவைக்காரியைப் பார்த்தேன்.
“அவனுக்கு என்னாகும் என காட்டுகிறேன்.”
ராமலிங்கம் மருத்துவமனையில் இருந்தார். முத்து தேடிப் போய் ராமலிங்கம் காலில் விழுந்து, “மன்னிச்சிருங்க. உங்கமேல இருந்த பொறாமையில நீங்க அவதிப்படணும்னு வீட்ட மண்டபமா மாத்தினது தப்பு. அதை ஒரு நல்ல குடும்பத்துக்கு வாடகைக்கு விடப்போறேன். இனி நிம்மதியா வாழலாம்”
ராமலிங்கத்துக்குப் பேச்சே வரவில்லை. சற்று நேரத்தில், “என் மாப்பிள்ளைக்கு இந்த ஊருக்கே மாத்தலாயிருச்சி. எனக்கும் வயசாயிருச்சி. உடம்பும் சரியில்ல. பொண்ணு மாப்பிள்ளை பக்கத்துலயே இருக்கணும்னு நெனக்கறாங்க. உங்க வீட்ட என் பொண்ணுக்கு வாடகைக்கு விடுவீங்களா?”
கண்ணீருடன் ஒத்துக்கொண்டார் முத்து.
“தாயே முத்துவின் வழக்கு?”
“இன்னும் பத்து நாளில் உண்மையான கொலைகாரனைக் கைது செய்துவிடுவர். முத்து விடுதலையாவான். அவனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? முத்து போன்றோரின் தவறைச் சுட்டிக்காட்டித் திருத்தும் வல்லமையைத் தரட்டுமா?”
“வேண்டாம், தாயே! அவர்கள் பிரச்னை தீர்கிறதோ இல்லையோ. எனக்கு அகங்காரம் வந்துவிடும்.”
“வேறு என்ன வேண்டும்?”
“முத்துவைப்போல் துன்பத்தில் தவிப்பவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் செய்த தவறுகளை அறிந்து அதைத் திருத்தும் வல்லமையைத் தர வேண்டும்.”
“அவர்கள் பிரார்த்தனை செய்தால் தருகிறேன்”
“என்னவென்று?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்.”
“அப்படிச் செய்தால்...”
“அவர்கள் மனதில் அன்பு நிறையும். அல்லல் மறையும். செய்த தவறு தெரியும். அதைத் திருத்தும் வழி புலப்படும்.”
“அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் தாயே”
தாயை விழுந்து வணங்கினேன். நிமிர்ந்தபோது அவள் அங்கே இல்லை.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com