ADDED : நவ 14, 2024 01:32 PM

ராம் பிரசாத் பிஸ்மில்
உத்தரபிரதேச மாநிலம், ஷாஜஹான்பூர் மாவட்டம் முரளிதர், முல்மதி ராஜ்புத் தம்பதிக்கு ஜூன் 11, 1897ல் ராம் பிரசாத் பிஸ்மில் பிறந்தார். உருது, ஹிந்தியை கற்ற அவர் ஆரிய சமாஜத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் 18ம் வயதில் எழுதிய 'மேரா ஜன்ம்' (என் பிறப்பு) என்ற கவிதை குறிப்பிடத்தக்கது. பரமானந்தர் என்ற ஆன்மிகத் தலைவருக்கு ஆங்கிலேய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக இது அமைந்தது.
விடுதலை உணர்வு உள்ளத்தில் ஊறியதால் திலகர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பங்கேற்க நண்பர்களுடன் லக்னோ சென்றார். ஆனால் பேரணிக்குத் தடை விதித்தது ஆங்கிலேய அரசு. அதனால் வேதனையும், கோபமும் கொண்டார் ராம்பிரசாத். மக்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் திருப்ப அஞ்ஞாத், ராம் என்ற புனைப்பெயர்களில் எழுதினார்.
அகிம்சை வழியைப் புறக்கணித்து நேரடித் தாக்குதல் மூலம்தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும் எனக் கருதினார். இதற்காக 'மாத்ரிவேதி' (தாய் நாட்டின் பலிபீடம்) என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.
தன் புத்தகங்களால் இளைஞர்களிடையே சுதந்திரக் கனலை மூட்டுகிறார் என அரசு குற்றம் சாட்டியது. ஆகவே ராம்பிரசாத் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவரையும் கைது செய்ய காத்திருந்தனர் அதிகாரிகள். இதற்கிடையில் புத்தகங்களை உத்தர பிரதேச கிராமங்களுக்கு சென்று வழங்கினார். இதை அறிந்த அதிகாரிகள் மக்கள் மீது அடக்குமுறையை ஏவினர். கண்மூடித்தனமாக மக்கள் மீது குண்டு மழை பொழிந்தனர். அப்போது அதிகாரிகளிடம் சிக்கி விடக் கூடாது என்ற உறுதியில், ராம்பிரசாத் யமுனை ஆற்றில் குதித்து, நீருக்குள்ளேயே பல கி.மீ., தொலைவு நீந்திச் சென்று டில்லியை அடைந்தார். தலைமறைவான ராம்பிரசாத் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மறைந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தால் தம் இயக்கத்திற்கு நிதி திரட்ட முடியாததால் ஆங்கிலேயர்களிடம் கொள்ளை அடிக்க முடிவு செய்தார். ஆயுதம், பணத்தை ரயில் மூலம் அதிகாரிகள் கொண்டு செல்வர். அப்படி கருவூலம் (பணம்) ஏற்றிச் செல்லும் ரயில் பெட்டிக்குள் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டார் ராம்பிரசாத். அதைப் பாதுகாக்க காவலர்கள் இருந்தனர். கூடவே மக்களும் பயணித்தனர். இதில் பல காவலர்களோடு, பயணி ஒருவரும் பலியானார். லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்த சூட்கேஸ்களைக் கைப்பற்றினர் புரட்சியாளர்கள்.
புரட்சியாளர்களைத் தேடும் வேட்டையை துரிதப்படுத்தியது ஆங்கில அரசு. ராம்பிரசாத் உள்ளிட்ட அனைவரும் போலீசாரிடம் சிக்கினர். விசாரணைக்குப் பின் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
டிச.19, 1927ல் தண்டனை நிறைவேற்றும் முன் இவரைப் பார்க்க வந்த தாய் முல்மதி, ''உன்னை பெற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். பாரதத் தாயின் கைவிலங்கைத் தகர்த்தெறிய லட்சக்கணக்கான இளைஞர்களை உருவாக்கி இருக்கிறாயே'' என மனம் நெகிழ்ந்தார்.
ராம்பிரசாத் பிஸ்மில் 'ஜெய்ஹிந்த்' என கர்ஜித்தபடி மரணத்தைத் தழுவினார்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695