ADDED : நவ 21, 2024 01:29 PM

மீண்ட குரல்
கர்நாடக இசைக் கலைஞர் ஷியாமளாவின் வீட்டில் இருந்தேன். கைகூப்பியபடி வந்தாள். 35 வயது. நல்ல உயரம். நல்ல உடல்வாகு. அழகான முகம்.
ஒரு காலத்தில் இந்த பாடகியின் கச்சேரி என்றால் சபாக்கள் நிரம்பி வழியும். திரைப்படங்களில் பாடத் தொடங்கிய பின் பிரபலமாகி விட்டாள். ஆனால் கடந்த நான்கு ஆண்டாக அவளின் பெயர் அவ்வளவாக அடிபடவில்லை.
“அவங்க குரல் முன்ன மாதிரி இல்ல சார்” என ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்.
“சார்... என் கூட வாங்க” என என்னை அழைத்தாள்.
அந்த அறையில் நிறைய இசைக்கருவிகள் இருந்தன. நடு நாயகமாக பச்சைப்புடவைக்காரியின் படம் இருந்தது. அமர்ந்ததும் பாட ஆரம்பித்தாள். மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் இருந்து ஒரு பாடலை விருத்தத்தில் பாடினாள். ரசித்துக் கேட்டேன்.
“எப்படி சார் இருக்கு?”
ஸ்ருதியும் தாளமும் சரியாக இருந்தது. ஆனால் பாட்டில் கொஞ்சம்கூட பாவம் இல்லை. உண்மையைச் சொன்னால் காயப்படுவாள் எனக் கருதி, 'நல்லா இருந்துச்சே' எனப் பொய் சொன்னேன்.
“என்ன சின்னக் குழந்தைன்னு நினைச்சீங்களா? வருத்தப்படக் கூடாதுன்னு பொய் சொல்றீங்களா?”
“இல்லையே”
“கொஞ்சம் இருங்க. அஞ்சு வருஷத்துக்கு முன் இதே பாட்டை எப்படி பாடியிருக்கேன்னு தெரிஞ்சிக்கங்க”
அடுத்த நொடி அவளின் குரல் எங்கும் எதிரொலித்தது. அதில் இருந்த உணர்வுகள் என்னை அழச் செய்தன. ஐந்து ஆண்டுகளில் இத்தனை பெரிய சரிவா? என்னாயிற்று இவளுக்கு? என்றாலும் அதைச் சொல்ல மனம் இல்லை எனக்கு.
“இதுவும் நல்லாத்தானே இருக்கு? எனக்கு ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியலையே?”
“என்ன விளையாடறீங்களா? நல்ல சாப்பாட்டுக்கும் ஊசின சாப்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என் குரல் ஊசிப் போச்சு சார். இத்தனைக்கும் உயிரக் கொடுத்துத்தான் பாடறேன். தினமும் பத்து மணி நேரம் சாதகம் பண்றேன். ஆனா என்னால இதுக்கு மேல பாட முடியல. கச்சேரி வாய்ப்பு எல்லாம் குறைஞ்சு போச்சு. முப்பத்தியஞ்சு வயசுல ரிடயர் ஆறது பெரிய கொடுமை.
“பச்சைப்புடவைக்காரிக்கு என்ன குறை வச்சேன்? எப்பவும் அவ பாட்டத்தான் பாடிக்கிட்டிருக்கேன். எனக்கே இந்த நிலைமைன்னா மத்தவங்கள யோசிக்கவே பயமா இருக்கு. எனக்கு ஏன் சார் இப்படி ஆகணும்?”
எனக்கு என்ன தெரியும்? மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளச் சொல்லலாமா என யோசித்தேன். வேண்டாம் அந்த மகா மருத்துவச்சி என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம். ஷியாமளாவின் அலைபேசி ஒலித்தது.
“சபா செகரட்டரி கூப்பிடறாரு. பத்து நிமிஷத்தில வர்றேன். உங்களுக்கு காபி கொண்டுவரச் சொல்றேன். என் விஷயத்தக் கொஞ்சம் யோசிச்சிச் சொல்லுங்க சார்”
காபி வரவில்லை. விளக்குமாற்றுடன் ஒருத்தி வந்தாள்.
“கொஞ்சம் தள்ளி உக்காருங்க”
அவள் தொனியில் அதிகாரம் தெரிந்தது. நான் முறைத்தேன்.
“குப்பையை அருகில் வைத்துக் கொண்டு பெருக்க வருபவளை முறைத்தால் என்ன அர்த்தம்? பாடகிக்குப் பதில் சொல்ல வேண்டாமா?”
பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்து வணங்கினேன்.
“பாடகி தவறு செய்தாள். தண்டனை கொடுத்து விட்டேன். அவள் செய்த தவறு உனக்குத் தெரியும் என்று சொல். ஆனால் அவளிடம் கடும் வார்த்தைகளை வீசாதே. கனிவாகப் பேசு. திருந்துகிறாளா பார்க்கலாம்”
பச்சைப்புடவைக்காரி மறைந்தாள். காபி வந்தது. குடிக்கும் போது புயலைப்போல் வந்தாள் ஷியாமளா.
“இந்த அக்கிரமத்தக் கேட்டீங்களா, சார்? இந்த சீசன்ல எனக்கு பகல் ஒரு மணிக் கச்சேரிதான் தருவாங்களாம். கடந்த பத்து வருஷமா சாயங்காலம் ஆறு மணி ஸ்லாட்ல பாடிக்கிட்டிருந்தவ நான். இப்போ கத்துக்குட்டிகளுக்குக் கொடுக்கற ஸ்லாட்ட எனக்குக் கொடுக்கறாங்க. பச்சைப்புடவைக்காரி இரக்கமேயில்லாத பேயா?”
எவ்வளவோ முயன்றும் எனக்குக் கோபம் வந்துவிட்டது. இருந்தாலும் மென்மையாகத்தான் பேசினேன்.
“பச்சைப்புடவைக்காரியோட இரக்கத்தப் பத்தி அப்புறம் பேசுவோம். அதுக்கு முன்னால உங்ககிட்ட இல்லாத ஒழுக்கத்தப் பத்திப் பேசலாமா?”
ஷியாமளாவின் முகம் வெளிறியது.
“நீங்க ரொம்ப உத்தமி போலவும் பச்சைப்புடவைக்காரி அநியாயமா உங்க குரல பிடுங்கிக்கிட்ட மாதிரியும் பேசுறீங்க? நீங்க என்ன செஞ்சீங்கன்னு சொல்லட்டுமா?”
அவளின் கண்களில் கண்ணீர்.
“பெரிய சங்கீத சபா உங்களுக்கு பத்து லட்ச ரூபாய் பணமும் ஒரு பெரிய விருதும் கொடுக்கறதா இருந்தாங்க. ஆனா அந்த சபா செகரட்டரி கொஞ்சம் சபலப் பேர்வழி. தன்னோட ஒரு நாள் தங்கினாத் தான் பணமும் விருதும் கிடைக்கும்னு சொல்லிட்டாரு. விருது வாங்கணும்ங்கற ஆசையில நீங்களும் ஏத்துக்கிட்டீங்க.
“உங்க கணவருக்குத் துரோகம் செஞ்சிட்டீங்க. கடைசி வரைக்கும் உங்க கணவர் உங்களைச் சந்தேகப்படல. உங்க கணவர மாதிரி ஒரு நல்ல ஆத்மாவ பார்க்கவே முடியாதும்மா. ஒரு பிரபலத்துக்குக் கணவனா இருக்கறது லேசுப்பட்ட வேலையில்லை. நீங்க கச்சேரிக்காக ஊர் ஊராச் சுத்திய போது அவர்தான் வீடு, குழந்தைங்களப் பாத்தாரு. உங்களுக்கும் உதவியா இருந்தாரு. அந்த மனுஷருக்கு மனசார துரோகம் செஞ்சிட்டு நீங்க பச்சைப்புடவைக்காரியப் புகழ்ந்து பாடினா விடுவாளா? அதான் உங்க பாட்டப் பறிச்சிக்கிட்டா. நீங்க ஒரு சாதாரண மனுஷியாக்கூட நடந்துக்கலையே! உங்களுக்கு எதுக்கு தெய்வீகமான இசைன்னு நெனச்சிட்டா”
அழ ஆரம்பித்தாள் ஷியாமளா.
“இப்போ என்னதான் செய்யறது?”
“உங்க கணவரத் தனியா கூட்டிக்கிட்டுப் போய் நடந்ததை எல்லாம் அவர்கிட்ட சொல்லுங்க. அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க. இதனால விவாகரத்து நடக்கவும் வாய்ப்பிருக்கு. அப்படி நடந்தா உங்க ரெண்டு பொண்ணுங்களும் உங்க புருஷன்கூடப் போயிருவாங்க. ஆனா இப்போதைக்கு வேறு வழியில்ல. ஒருவேளை உங்க கணவர் உங்கள மன்னிச்சி ஏத்துக்கிட்டா நல்லது. உங்க இசை திருப்பிக் கிடைக்க நெறைய வாய்ப்பிருக்கு. ஆனா எந்த உத்தரவாதமும் கெடையாது.”
“இப்படிப் பிடி கொடுக்காமப் பேசினா என்ன சார் அர்த்தம்?”
“பிடிகொடுக்கற மாதிரிக் காரியங்கள நீங்க செய்யலேன்னு அர்த்தம்.”
நான் கிளம்பி விட்டேன். வாசலில் துடைப்பத்தோடு நின்றிருந்தாள் பச்சைப்புடவைக்காரி.
“அவள் கணவன் அவளை மன்னித்து விடுவான். அவள் குரல் வளம் அவளுக்குக் கிடைத்துவிடும். இசை உலகில் இன்னும் புகழ் பெறுவாள். அவளை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்.
“தன் கணவனுக்குத் துரோகம் செய்தவளையே கனிவோடு பார்த்துக்கொள்ளும் நீங்கள் என்னைப் பார்த்துக்கொள்ள மாட்டீர்களா என்ன? சொர்க்க போகத்தில் திளைத்தாலும், நரகத்தீயில் வெந்தாலும் நான் உங்கள் கொத்தடிமை என்ற நினைப்பு மனதை விட்டு அகலக்கூடாது.”
கையில் இருந்த துடைப்பத்தால் என் தலையைத் தொட்டாள். என் ஆவி சிலிர்த்தது.
--தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com