ADDED : நவ 21, 2024 01:31 PM

கொடி காத்த குமரன்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலுக்கு புகழ் பெற்றது. இதன் அருகிலுள்ள செ. மேலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி. கரடு முரடான மலைப்பாதையில் 1320 படிகள் ஏறிச் சென்று சென்னிமலை முருகனை வழிபட்டதன் பயனாக குழந்தைக்கு 'குமாரசாமி' எனப் பெயரிட்டு வளர்த்தனர். சிறு வயதிலேயே ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்க்க உறுதி பூண்டார் குமரன். சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டிய காந்திஜியின் விடாமுயற்சி கண்டு மனம் நெகிழ்ந்தார். இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட முடிவு செய்து தேசபந்து என்ற அமைப்பை ஏற்படுத்தி திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருக்கும் பல இளைஞர்களை தேசிய உணர்வுக்குத் திருப்பினார் குமரன். 1920 செப்டம்பரில் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். அதன் அடிப்படையில் திருப்பூரில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. இந்த புரட்சியால் வெகுண்ட ஆங்கிலேய அதிகாரிகள், ஊர்வலம் செல்ல உள்ள தலைவர்களை முன்கூட்டியே கைது செய்தனர்.
தலைவன் இல்லாவிட்டால் தொண்டனும் இருக்க மாட்டான், அதனால் ஊர்வலமும் நடைபெறாது என்பது அவர்களின் கணிப்பு. திருப்பூரிலும் இதே கெடுபிடி பின்பற்றப்பட்டது. குமரன் அங்கம் வகித்த அணியின் தலைவரும் கைது செய்யப்பட்டார்.
மறுநாள் ஊர்வலம் போய்த்தான் ஆக வேண்டும் என்ற வெறி குமரனின் மனசுக்குள் பரவியது. ''தலைவரைக் கைது செய்துவிட்டால், என்ன; ஆங்கிலேயரை எதிர்த்து ஊர்வலம் போவோம்'' எனக் குழுவினரை உற்சாகப்படுத்தினார். தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடி 'வந்தே மாதரம்' என்ற கோஷமிட்டபடி புறப்பட்டார். அதிகாரிகள் சரமாரியாகத் தாக்கினர். அடியைத் தாங்க முடியாத இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் குமரனோ கொடியுடன் நடக்க ஆரம்பித்தார்.
அவர்களுடைய லத்திகள் குமரனின் உடலெங்கும் ரணமாக்கின. அவர் சரிந்தார். அப்போதும் அவரை பூட்ஸ் கால்களால் காவலர்கள் மாறி, மாறி மிதித்து எழ முடியாதபடி காட்டுமிராண்டியாக நடந்தனர்.
ஆனால் குமரன் பிடித்த கொடியை விடவே இல்லை; 'வந்தே மாதரம்' என சொல்வதையும் நிறுத்தவில்லை. சரிந்து விழுந்தாலும் கொடியைப் பற்றிய கை விலகவில்லையே என கடுங்கோபம் கொண்ட அதிகாரிகள் மண்டையில் ஓங்கித் தாக்கினர். அப்படியே ரத்த ஆற்றில் மிதந்தார் குமரன். ஜன.10, 1932 அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குமரன், மறுநாளே உயிர் நீத்தார். அப்போது அவரை நாட்டின் பொது சொத்து என அறிவித்த ராஜகோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை ஆகியோர் ஜாதி, இன வேறுபாடு பார்க்காத சனாதன தர்மத்தைப் பின்பற்றி குமரனின் சகோதரர் ஆறுமுகத்துடன் இணைந்து சிதைக்கு தீ மூட்டி இறுதிச் சடங்கு செய்தனர்.
--தொடரும்
பிரபு சங்கர்
72999 68695