ADDED : டிச 13, 2024 07:47 AM

பார்வையே போதும்
ரோஹித்தைப் பார்த்ததும் பிடித்துப் போனது. அகலக் கரை வேட்டி, கதர்ச் சட்டை அணிந்திருந்தான். நெற்றியில் திருநீறு குங்குமம். பச்சைப்புடவைக்காரியின் பக்தன் என்றே ரோஹித்தை அறிமுகப்படுத்தி இருந்தனர். அவனது மனைவி பெரிய கோடீஸ்வரரின் மகள். இவன் ஏன் வந்திருக்கிறான்?
“கல்யாணமாகி அஞ்சு வருஷம் காத்திருந்தோம் சார். இப்போதான் குழந்தை பிறக்கப் போகுது. அடுத்த வாரம் டெலிவரி. ஆணோ, பொண்ணோ, ஆரோக்கியமான குழந்தையாப் பிறக்கணும், தாயும் சேயும் நல்லா இருக்க ஆசீர்வாதம் பண்ணுங்க சார்”
அவன் கையைப் பற்றி வாழ்த்தினேன். வீட்டுக்குப் புறப்பட்டான்.
அன்று மாலை கோயிலுக்குச் செல்லும் வழியில் எதையோ தொலைத்தது போல் ஒரு பெண் பரிதாபமாக நின்றிருந்தாள்.
“எங்கம்மா போகணும்? வழி தெரியலையா?”
“வழிகாட்ட வந்தவளிடமே இப்படி கேட்கிறாயே!”
தாயின் கால்களில் விழுந்து வணங்கினேன்.
“அடுத்த வாரம் ரோஹித் அலறிக்கொண்டு உன்னைத் தேடி வருவான். அவனிடம் எதையும் மறைக்காதே. இதில் என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது”
“ஏன் அப்படி ஆரம்பத்திலேயே அபசகுனமாக சொல்கிறீர்கள்''
“எனக்கு ஏது ஆரம்பம், முடிவு எல்லாம்? நடக்க வேண்டியது எல்லாம் எப்போதோ நடந்து முடிந்துவிட்டது. அவனை நீ கவனமாகக் கையாள வேண்டும். உன் வார்த்தை தான் அவனை வாழ வைக்க வேண்டும்.”
“அந்த வார்த்தைகளை நீங்கள்தான் தர வேண்டும்.”
பத்து நாள் கழித்து பரட்டைத் தலையும் கசங்கிய ஆடையுமாக வந்தான் ரோஹித்.
“எல்லாமே போச்சு சார்”
அவனை ஆசுவாசப்படுத்திப் பேச வைத்தேன்.
“போன வெள்ளி அன்று பிரசவமாச்சு. பெண் குழந்தை பிறந்தது. எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சி. இன்னிக்குக் காலையில டாக்டர் என் தலையில குண்டத் துாக்கிப் போட்டாரு. என் மகளுக்குக் கடைசி வரைக்கும் பார்வை தெரியாதாம். பிறவிக் குறையாம். சரி செய்ய முடியாதாம்”
நான் ஒன்றும் பேசவில்லை.
“பச்சைப்புடவைக்காரி ஏன் சார் இப்படி செய்யணும்? ஒரு வேளை அவளுக்கும் பார்வை இல்லையோ? குருட்டுத்தனமா கோபத்த என் மீது காட்டுறாளோ?”
ரோஹித்தின் கடந்த காலம் புரிந்தது. கோபத்தில் கொதித்தேன். எழுந்து நின்று பலமாக அறைந்தேன். நிலைகுலைந்தான்.
“ என் தெய்வத்தப் பத்தி தப்பாப் பேசின கொலை பண்ணிருவேன்”
தன்னைச் சுதாரித்துக்கொள்ள அவனுக்கு சில நிமிடம் ஆனது. அதன்பின் வாதிட்டான்.
“எங்கப்பா அம்மா அவ்வளவு தான தர்மம் பண்ணியிருக்காங்க. எங்க மாமனார் கோடிக்கணக்குல பணத்தப் போட்டு அறக்கட்டளை நடத்தறாங்க. இப்படி ஒரு குடும்பத்துல பார்வை இல்லாம குழந்தை பிறந்தா என்ன சார் அர்த்தம்?”
கோபத்தை அடக்கியபடி சொன்னேன்.
“குழந்தையோட அப்பன் செஞ்ச பாவத்துக்கு தண்டனை கிடைச்சிருக்குன்னு அர்த்தம்”
“என்ன சார் உளறுறீங்க?”
“நான் ஒரு கதை சொல்றேன் கேட்பாயா ரோஹித்”
“சொல்லுங்க”
'' பார்வை இல்லாத ஒரு அழகான பெண் இருந்தாள். அவளுக்கு தாய் மட்டும்தான். அவளும் ஒரு மாதத்திற்கு முன் இறந்ததால் தனியாக சிரமத்துடன் வாழ்ந்தாள்.
அந்த ஊருக்கு ஒரு பணக்கார இளைஞன் வந்தான். அந்த பெண்ணைப் பார்த்ததும் அவனுக்குப் பிடித்துப் போனது. அவளின் பெண்மையைச் சூறையாட திட்டமிட்டான். அதற்கு யாரிடம் பேரம் பேசுவது என யோசித்தான்.
அந்த பெண்ணின் வீட்டருகில் ஒரு கிழவி இருந்தாள். தாயில்லாத பெண்ணுக்கு அவள்தான் எல்லாம். கிழவியிடம் தன் எண்ணத்தை சொன்னான் இளைஞன்.
“எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு தரேன். ஒருநாள் அவ கூட இருக்கணும்”
கிழவி முதலில் அதிர்ந்தாள். லட்ச ரூபாய் தருகிறேன் என இளைஞன் சொன்னவுடன் கிழவிக்கு ஆசை வந்தது. அதில் தன் மகனுக்கு ஒரு கடை வைக்கலாம் எனத் திட்டமிட்டாள். கிழவியும், இளைஞனும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினர். கிழவியும் அவளது கூட்டாளிகள் சிலரும் இளைஞனோடு அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றனர். இளைஞன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். மறுநாளே முகூர்த்தம் வைக்கலாம் என்றான்.
நாதஸ்வரம், மேளம், மக்கள் சத்தம் எல்லாவற்றையும் ஒலிப்பதிவுக் கருவி மூலம் உருவாக்கினான் இளைஞன். அந்தப் பெண்ணை ஏமாற்றி அவள் கழுத்தில் தாலி கட்டினான்.அவள் வீட்டிலேயே முதலிரவு நடத்தினான். மறுநாள் காலையில் கட்டிய தாலியைக் கழற்றிக் கொண்டு ஊரை விட்டே ஓடினான் அந்த இளைஞன்.
தான் வஞ்சிக்கப்பட்டோம் என புரிந்துகொள்ள இரண்டு நாள் ஆயிற்று. அதன்பின் தற்கொலை செய்து கொண்டாள்.
“என்னப்பா ரோஹித், கதை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா, இல்ல உன் வாழ்க்கையிலயே நடந்த மாதிரி இருக்கா?”
' அறியாத பருவத்துல செஞ்ச தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?”
“இது தண்டனை இல்ல, ரோஹித். அந்தப் பார்வை இல்லாத பொண்ண நிஜமாகவே கல்யாணம் செய்திருந்தா காலமெல்லாம் அவள வச்சிக் காப்பாத்தியிருப்ப இல்லையா? நீ என்ன செஞ்ச? கல்யாணம் செஞ்சிக்கிட்ட. சுகத்த அனுபவிச்சிட்டு ஓடி வந்துட்ட. ஒரு பார்வையில்லாத பொண்ண வாழ்க்கை பூராப் பாத்துக்கணுங்கற கடமையச் செய்யல. இதோ இப்போ ஒரு பார்வையில்லாத பொண்ண, உன் மகள, வாழ்க்கை பூரா வச்சிப் பாத்துக்கணும். அங்க செய்யத் தவறின கடமைய இங்க செய்யப் போற”
“இதிலருந்து தப்ப பரிகாரம் கிடையாதா?”
“அப்படிப்பட்ட பாவத்தையா செஞ்சிருக்க நீ? நம்பிக்கைத் துரோகம், கற்பழிப்பு, தற்கொலைக்குத் துாண்டுதல்., வஞ்சம்... இதுக்கு எந்த பரிகாரமும் கிடையாது”
ரோஹித் அழத் தொடங்கினான்.
“இதுலருந்து தப்பிக்க நெனச்சி உன் பொண்டாட்டி பிள்ளைய விட்டுட்டு ஓடினாலோ, விவாகரத்து செஞ்சாலோ இன்னும் பெரிய தண்டனை கிடைக்கும்”
“நம்பிக்கையா பேச மாட்டேங்கறீங்களே?”
“நீ வஞ்சகமா ஏமாத்தின பொண்ணுதான் உன் மகளாப் பிறந்திருக்கான்னு நெனச்சிக்கோ. அந்தப் பொண்ணுகிட்ட காட்டாத அன்ப உன் மகளிடம் காட்டு. அவ பிற்காலத்துல நாடே பாராட்டற பெரிய இசைமேதையா வருவா. அப்போ உனக்கு பெருமையா இருக்கும். அடுத்த பிறப்பு உனக்கு நல்லா இருக்கும்”
வெறித்துப் பார்த்தபடி சில நிமிடம் உட்கார்ந்து விட்டு ரோஹித் கிளம்பினான். அன்று மாலை வெளியில் சென்ற போது ஒரு பெண் என்னை வழிமறித்தாள்.
“என்னப்பா முகம் சோர்வாக உள்ளது?”
“அவன் செய்த துரோகத்திற்குச் சரியான தண்டனைதான் கொடுத்தீர்கள் தாயே! இருந்தாலும் ஒரு தப்பும் செய்யாத அவன் மனைவி அவனை விட இன்னும் அதிகமாகத் துன்பப்படுவாள் என நினைக்கும்போது...”
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்” என் முகம் வாடிவிட்டது.
“உனக்கு என்ன வேண்டும் சொல்”
“ரோஹித்தின் மனைவிக்காக வேண்டிக்கொள்கிறேன். அவளுக்கு அமைதியைக் கொடுங்கள், தாயே”
“அவள் மகளுக்கு பதினைந்து வயதாகும்போது அறுவை சிகிச்சை மூலம் பார்வை வரும்படி செய்கிறேன். அதோடு ரோஹித்தின் தண்டனைக்காலம் முடிந்துவிடும். உனக்கென எதுவும் கேட்கவில்லையே!”
“அறிந்தோ அறியாமலோ யாரையும் காயப்படுத்தாத வாழ்க்கை வேண்டும். அதைக் கேட்க உரிமையில்லாத கொத்தடிமை நான் என்பதை எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.”
தாய் மறைந்த பின்னும் அவளுடைய சிரிப்பொலி காதில் கேட்டுக் கொண்டிருந்தது.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com