ADDED : டிச 13, 2024 07:50 AM

உத்தம் சிங்
பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டம் சுனாம் கிராமத்தில் டிச.26 1899 ல் பிறந்தவர் உத்தம்சிங்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த போதிலும் தேசபக்தி கொண்டவராக திகழ்ந்தார். ஆதரவற்றோர் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட இவர் 19 வயதில் மெட்ரிகுலேசன் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.
ஏப்.13, 1919 அன்று ஜாலியன்வாலா பாக் வளாகத்தில் ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். அவர்களுக்குக் குடிநீர் வழங்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டார் உத்தம்சிங். திடீரென அங்கு வந்த ஆங்கிலேய சிப்பாய்கள் கண்மூடித்தனமாக கூட்டத்தினர் மீது குண்டுமழை பொழிவதைக் கண்டு திடுக்கிட்டார். மக்கள் உயிரிழந்தும், காயமுற்றும் அப்படியே வீழ்ந்ததை கண்டு மனம் நொந்தார். துக்கத்துடன் பொற்கோவிலுக்குச் சென்று 'நான் இந்த அவலத்தை அரங்கேற்றிய கொடியவனைக் கொல்வேன், இதுவே என் லட்சியம்' என சூளுரைத்தார்.
இந்த லட்சியத்திற்கு வலு சேர்க்க விரும்பி, 1924ல் அமெரிக்கா சென்றார். அங்கு வசித்த இந்தியர்கள் தாய்நாட்டு விடுதலைக்காக சேவை புரிவதை அறிந்தார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங், சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ் பிஹாரி போஸ் போன்றோர் அமெரிக்காவில் உருவாக்கியிருந்த கதர்க்கட்சியில் இணைந்தார். இந்தக் கட்சி வெளிநாடு வாழ் இந்தியர்களால் சுதந்திரப் போராட்டத்துக்கு நிதி திரட்ட உருவாக்கப்பட்டது.
அங்கே மூன்றாண்டு தங்கி விடுதலைக்காக சொற்பொழிவாற்றி நிதி திரட்டினார். 1927ல் பகத்சிங் அழைத்ததால் தாயகம் திரும்பினார்.
அதே காலகட்டத்தில், அனுமதி இன்றி ஆயுதம் வைத்திருந்ததற்காகவும், கதர்க்கட்சியின் பிரசுரங்களை விநியோகம் செய்ததற்காகவும் ஆங்கிலேய அரசு கைது செய்து நான்கு ஆண்டு தண்டனை விதித்தது.
மனதிற்குள் ஜாலியன் வாலாபாக் சம்பவம் அழிக்க முடியாத சோகமாக உறைந்து விட்டதால், அதற்குக் காரணமான ஜெனரல் மைக்கேல் டயரை கொன்று பழி தீர்க்க வேண்டும் என்ற வெறி மிகுந்தது உத்தம் சிங்குக்கு.
ஆகவே அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் துாவி விட்டு 1933ம் ஆண்டு காஷ்மீர் போய் அங்கிருந்து ஜெர்மனிக்குத் தப்பினார். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக ஓராண்டுக்குப் பிறகு லண்டனை அடைந்தார். பொறுமையாகக் காத்திருந்தார். டயரின் முகம் அவருக்கு லேசாக நினைவிருந்ததால், அவன் இந்தியாவை விட்டு வந்து அங்கேதான் வசிக்கிறான் என்பதை உறுதிப்படுத்த லண்டனிலேயே தங்கினார்.
ஆங்கிலேயரைப் போல உடை, தொப்பி அணிந்து முகச்சவரம் செய்தார். உத்தம் சிங் தினமும் தன் நாட்டின் மகா மோசமான எதிரியைத் தேடும்முயற்சியில் ஈடுபட்டார். சரியாக 21 ஆண்டுகள் கழித்து அதே மார்ச் 13 அன்று உத்தம் சிங்கிற்கு எதிரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆமாம், கேக்ஸ்டன் ஹால் என்ற அரங்கில் கிழக்கிந்திய கம்பெனி, மத்திய ஆசிய சங்கம் இணைந்து நடத்தும் கருத்தரங்கம் நடந்தது. அதில் மைக்கேல் டயர் ஒரு பேச்சாளராகப் பங்கேற்பதாக தகவல் கிடைத்தது.
...
கடைக்குச் சென்று சற்றே பருமனான ஒரு புத்தகத்தை வாங்கினார். வீட்டிற்குத் திரும்பி, அந்தப் புத்தகத்தின் முதல் சில பக்கங்களுக்குப் பிறகு ஒரு பக்கத்தின் மேல் தன் கைத்துப்பாக்கியை வைத்து அதைச் சுற்றிக் கோடு போட்டு அதன் வெளி எல்லையை வரைந்தார்.
அடுத்து, அந்தக் கோடுகளின் வழியே கத்தியால் துப்பாக்கியின் பருமனுக்கு, பக்கங்களை வெட்டி எடுத்தார். கடைசியில் சில பக்கங்களை விட்டுவிட்டார். இப்போது அந்தப் புத்தகத்தின் நடுவில் கைத்துப்பாக்கியைப் பதித்து வைக்கலாம். முன், பின் அட்டைகளிலிருந்து சில பக்கங்களை விட்டுவிட்டு இவ்வாறு பள்ளம் வெட்டியிருப்பதால், வெளிப்பார்வைக்கு அது சாதாரண புத்தகமாகத்தான் தெரியும், உள்ளே பதுங்கியிருக்கும் துப்பாக்கி தெரியாது!...
மறுநாள் அரங்கத்துள் சென்றார் உத்தம் சிங். கூட்டம் ஆரம்பித்தது. சுவர் ஓரமாக நின்றிருந்த அவர், தக்க தருணத்துக்காகக் காத்திருந்தார். டயர் இருக்கையிலிருந்து எழுந்து, பேசுவதற்காக மேடையை நோக்கிச் சென்றான். துப்பாக்கியை எடுத்து டயரை நோக்கி இருமுறை சுட்டார் உத்தம் சிங். சுருண்டு விழுந்து செத்தான் டயர். லட்சியத்தை அடைந்துவிட்ட திருப்தி காரணமாக உத்தம் சிங் தப்பியோட முயற்சிக்கவில்லை. அதனால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, ''அவன் கொல்லப்பட வேண்டிய கொடூரன். அதைச் செய்ததில் எனக்கும், என் நாட்டு மக்களுக்கும் பரம திருப்தி. நான் வணங்கும் கடவுள் இதற்காகவே என்னை விசேஷமாக ஆசிர்வதிப்பார்'' என தைரியமாக பதிலளித்தார்.
அதே ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் துாக்கிலிடப்பட்டார்; அவருடைய உடலும் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
உத்தம் சிங் மரணத்திற்கு 34 ஆண்டுக்குப் பிறகு, 1974ல் சாதுசிங் திண்ட் என்ற சுல்தான்பூர் லோதியின் வேண்டுகோளுக்கிணங்க, இந்திய அரசு எடுத்துக் கொண்ட முயற்சியால் அவரது சவப்பெட்டி பஞ்சாபுக்கு வந்தது.
காங்கிரஸ் தலைவர் சங்கர்தயாள் சர்மா, பஞ்சாப் முதல்வர் ஜெயில் சிங், பிரதமர் இந்திரா ஆகியோர் மரியாதை செய்ய, பிறகு உத்தம் சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டு, அஸ்தி சட்லஜ் நதியில் கரைக்கப்பட்டது.
அந்நியனை எதிர்த்தவர் அவன் தேசத்திலேயே அடக்கம் செய்யப்படுவது முறையல்ல, தன் தாய் மண்ணுக்குதான் சொந்தம் என்பதை நிரூபிப்பதுபோல இருந்தது இந்த இறுதிச் சம்பவம்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695