ADDED : டிச 19, 2024 02:58 PM

சூழ்நிலைக் கைதி
“நான் திலீப். சாப்ட்வேர் இன்ஜினியர். நல்லா சம்பாதிக்கறேன். கல்யணம் ஆயிருச்சி. ரெண்டு குழந்தைங்க” திலீப்பிற்கு 40 வயது. அழகாக இருந்தான்.
“எங்கப்பாவுக்கு சீக்கிரம் சாவு வரணும் சார்” நான் அதிர்ந்தேன்.
“பதறாதீங்க. எங்கப்பான்னா எனக்கு உசிரு. இன்னிக்கு நான் நல்லா இருக்கறதுக்குக் காரணம் அவர்தான். அவருக்கு வயசு 75. சிறுநீரகங்கள் போயிருச்சி. டயாலிசிஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். சர்க்கரை வியாதி இருக்கு. அடிக்கடி நெஞ்சு வலி வருது. ஆஞ்சியோ பண்ண முடியாதுங்கறாங்க. நாள் பூரா எங்கப்பா வலியால துடிக்கிறாரு. அம்மா இறந்து அஞ்சு வருஷமாச்சு. வலி, வேதனையோட வாழ்றதவிட அப்பா செத்துட்டா நல்லது. எங்கப்பா இப்போ இருக்கற நரகத்திலருந்து பார்த்தா சாவு சொர்க்கமா தெரியும்''
“பிரார்த்தனை பண்றேன். உங்க நம்பரக் கொடுத்துட்டுப் போங்க”
பச்சைப்புடவைக்காரியிடம் மரணத்தை எப்படி வரமாகக் கேட்பது?
அன்று மாலை வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பூங்காக்குச் சென்ற போது ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள். கண்டும் காணாததுபோல் இருந்தேன்.
“அங்கே ஒருவன் மரண வேதனையில் துடிக்கிறான். நீ இங்கே பூங்காவில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறாயா?”
“தாயே”
“உடனே திலீப்பின் தந்தையைப் பார்க்கப் போ. கர்மக்கணக்கின் விளையாட்டு புரியும். அதை நீ விளக்கியவுடன் அந்த உயிர் பிரியும்”
தாயை வணங்கி விட்டு ஓடினேன்.
திலீப்பின் தந்தை வீட்டில்தான் இருந்தார். வலி தாங்காமல் முனகிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்து அவர் கையைப் பிடித்துக்கொண்டேன்.
“நீங்க செஞ்ச பாவத்தப் பத்திச் சொல்லப் போறேன். உங்க பையன் இருக்கலாமா?” தலையாட்டினார். சொல்ல ஆரம்பித்தேன்.
திலீப்பின் தந்தை ரகு அந்தக் காலத்தில் ஒரு தனியார் வங்கியில் காசாளர். பெரிய தொழிலதிபரான சுந்தரேசனுக்கு அந்த வங்கியில் கணக்கு இருந்தது. ஒரு நாள் சுந்தரேசன் பணம் கட்ட வந்தார். பணத்தை எண்ணிப் பார்த்து வாங்கிக்கொண்டு சலானைக் கொடுத்து அனுப்பினார் ரகு. அன்று மதியம் கணக்கை முடித்தபோது ஒரு லட்சம் கூடுதலாக இருந்தது. சுந்தரேசன் தவறாகக் கொடுத்து விட்டார் என்பதைக் கண்டுபிடித்து அவரை அழைத்து விஷயத்தைச் சொன்னார் ரகு. சந்தோஷத்தில் சுந்தரேசன் கொடுத்த பத்தாயிரம் ரூபாயைக் கூட வாங்க மறுத்து விட்டார் ரகு.
இது நடந்து ஆறு மாதம் இருக்கும். ரகுவின் ஒரு வயது மகனான திலீப்பிற்கு ஜன்னி கண்டுவிட்டது. மருத்துவமனைக்குத் துாக்கிக்கொண்டு ஓடினார்கள். மறுநாள் மாலைக்குள் பத்தாயிரம் ரூபாய் கட்டாவிட்டால் மகனைக் காப்பாற்றுவது கஷ்டம் எனச் சொல்லி விட்டனர். பதட்டத்துடன் வங்கிக்கு வந்தார் ரகு.
அன்று வங்கியில் கூட்டமாக இருந்தது. ரகுவை மதியம் வரை காசாளர் பொறுப்பில் இருக்கச் சொன்னார் மேனேஜர்.
தொழிலதிபர் சுந்தரேசனின் ஊழியன் ஒருவன் பணம் கட்ட வந்திருந்தான். அவன் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன். ரகு அவன் கொண்டு வந்த பணத்தை எண்ணிப் பார்த்தார். சலானில் எழுதியதை விடப் பத்தாயிரம் கூடுதலாக இருந்தது. சத்தம் போடாமல் சலானில் சீல் வைத்து அந்த ஊழியனை அனுப்பி விட்டு அந்தப் பத்தாயிரம் ரூபாயைத் தன் பையில் வைத்துக் கொண்டார். அவர் மகனுக்குத் தேவையான சிகிச்சை செய்தார் அவன் பிழைத்துக் கொண்டான்.
மறுநாள் தொழிலதிபர் சுந்தரேசனே வங்கிக்கு வந்தார். “புதுசாச் சேர்ந்தவன் ஒழுங்கான ஆளான்னு சோதிச்சிப் பாத்தேன். வேணும்னே பத்தாயிரம் ரூபாய அதிகமா வச்சிக் கொடுத்தனுப்பினேன். அப்படியே அமுக்கிட்டான் ரகு சார். எனக்கு உங்களப் பத்தித் தெரியும் உங்ககிட்ட கூடுதலாப் பணம் கொடுத்திருந்தா உடனே திருப்பித் தந்திருப்பீங்க. நானே மறந்து போன லட்ச ரூபாய திருப்பிக் கொடுத்தவராச்சே நீங்க?”
ரகுவும் திலீப்பும் என்னையே பார்த்தனர்.“லட்ச ரூபாயில காட்டின நேர்மைய பத்தாயிரம் ரூபாயில காமிக்கலையே. அதனால என்னாச்சு தெரியுமா?”
ரகுவின் புருவங்கள் நெரிந்தன.
“சுந்தரேசன் கம்பெனியில புதுசாச் சேர்ந்தானே அவனுடைய வேலைப் போச்சு. திருட்டுப்பட்டம் வேற. அன்னிக்கு அவனுடைய ஒரு வயசுக் குழந்தைக்கும் ரொம்ப முடியாம இருந்தது. முதலாளிகிட்ட ரெண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேக்கலாம்னு நெனச்சான். அது நடக்கல. அவன் குழந்தைக்குச் சரியான சிகிச்சை கிடைக்கல. அது இறந்து போச்சு.”
ரகு என்னைப் பிடித்திருந்த பிடியை இறுக்கினார். திலீப் கரகரத்த குரலில் கேட்டான். “எங்கப்பா செஞ்ச தப்புக்கு இப்போ எப்படி பரிகாரம் செய்ய முடியும்?”
“காலம் கடந்து போச்சு திலீப். நாற்பது வருஷமாச்சு. அந்தாளு உயிரோட இருக்கானேன்னு தெரியல. நோயால தவிக்கற ஒரு ஏழை குழந்தைக்கு உதவி செய்ய முடிஞ்சா உங்கப்பாவோட அடுத்த பிறப்பு நல்லா இருக்கும்”
நான் சொல்லி முடிப்பதற்குள் தலையணைக்கு அடியில் இருந்த பேங்க் பாஸ் புக்கை எடுத்து மகனிடம் நீட்டினார் ரகு. அவரது கணக்கில் அஞ்சு லட்சம் இருந்தது.
“இத வச்சி ஏதாவது நல்லது பண்ணுப்பா”
ரகுவின் கடைசி வார்த்தைகள் அவைதான். அடுத்த கணமே அவருடைய உயிர் பிரிந்தது.
திலீப்பின் கையைப் பற்றி மவுனமாக விடைபெற்றேன்.
என் காரின் அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள்.
“ரகுவைக் கரை சேர்த்துவிட்டாயே”
“அவர் சூழ்நிலைக் கைதியாகச் செய்த தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?”
“தப்பு செய்பவர்கள் அனைவரும் ஒரு வகையில் சூழ்நிலைக் கைதிதான். தண்டனை கொடுக்காவிட்டால் எப்படி திருந்துவார்கள்?
“இருந்தாலும் ரகுவிற்குக் கொடுத்த தண்டனை அதிகமல்லவா...''
“அவருடய தவறினால் ஒரு உயிர் போய்விட்டது. குடும்பமே நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. அதைக் கணக்கில் வைத்துப் பார்த்தால் அவர் அனுபவித்த தண்டனை குறைவுதான். அவர் கடைத்தேறி விட்டார். உனக்கு என்ன வேண்டும் என்று சொல், தந்துவிட்டுப் போகிறேன்”
“தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற உங்கள் கர்ம விதியை எனக்காகக் கொஞ்சம் மாற்றுங்கள் தாயே”
“எப்படி?”
“நான் தவறு செய்ய நினைத்த மாத்திரத்திலேயே என்னைக் கடுமையாகத் தண்டித்து விடுங்கள். துன்பம், வலி வேதனை எல்லாம் என்னோடு போகட்டும். என்னால் இன்னொருவர் துன்பப்படக்கூடாது என்ற வரத்தை மட்டுமே உங்களிடம் யாசிக்கிறேன்”
“துன்பம் செய்யாமல் வாழ்வது என்பது தவம். அதை ஒரு வரமாகத் தர முடியாது. உனக்காக கர்ம விதிகளை மாற்றவும் முடியாது”
“போகட்டும். உங்களை ஒரு கணம்கூட மறவாத மனம் வேண்டும் தாயே”
“தந்தேன்”
“நீங்கள் என்னுள் எப்போதும் இருந்தால் என்னால் எப்படி அடுத்தவர்க்குத் துன்பம் கொடுக்க முடியும்?”
தாயின் சிரிப்பு பிரபஞ்சம் எங்கும் எதிரொலித்தது.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com