ADDED : டிச 19, 2024 02:59 PM

மங்கள் பாண்டே
உத்தர பிரதேச மாநிலத்தின் சில கிராமங்களில் ஆங்கிலேய அதிகாரிகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்பட்டது.
அவர்கள் அந்த கிராமங்களைச் சுற்றிப் பார்க்க வரவில்லை; அங்கிருக்கும் சொத்துகளைத் தட்டி பறித்துச் செல்லவும் இல்லை. குறிப்பாக வயல்வெளிகளில், தோட்டங்களில், காடுகளில் பணியாற்றும் இளைஞர்களை அவர்கள் நோட்டம் விட்டார்கள். ஆமாம், தங்களுக்காகப் பணியாற்ற, ஆட்கள் தேர்வைத்தான் அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
பொதுவாகவே உத்தர பிரதேச மக்கள் வலுவான உடல் வாகு கொண்டவர்கள். அங்கு வசிக்கும் மூதாதையர், தம் பிள்ளைகளுக்கு அவர்கள் காலத்திய இளைஞர்களைப் பற்றி விவரிக்கும்போது, 'அவன் ஒன்பதடி உயரம் இருந்தான் தெரியுமா' என்றெல்லாம் சொல்லி பிரமிப்பூட்டுவார்கள். அது மிகைதான் என்றாலும், அந்த கிராமங்களின் இளைஞர்கள் ஆஜானுபாகுவாக, எத்தகைய கடினமான வேலையையும் வெகு எளிதாக செய்து முடிக்கக் கூடியவர்களாக விளங்கினார்கள்.
ஆங்கிலேய அரசுக்கு அவர்கள் வேண்டும். அவர்களைத் தங்களது ராணுவத்தில் சேர்த்துத் தங்களுடைய பலத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்!
பொதுவாகவே பிரிட்டிஷாரின் ராணுவத்தில் ஆங்கிலேயர்கள் அதிகம் பேர் இருந்தார்கள் என்றாலும், அவர்கள் அனைவரையும் இங்கிலாந்திலிருந்தே வரவழைக்க வேண்டியிருந்தது. இந்திய காலநிலை அவர்களுக்கு ஒவ்வாததாகப் போய் அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட, அதனால் மீண்டும் இங்கிலாந்திற்கே அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது. ஆகவே அந்த வெற்றிடத்தை நிரப்பிட அவர்கள் இந்தியர்களையே தேர்ந்தெடுத்தார்கள்.
இதில் அவர்களுடைய ஆணவமும் புத்துயிர் கொண்டது. அதாவது பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ராணுவத்தில் தலைவர்களாக ஆங்கிலேயர்கள் இருப்பார்கள்; அவர்களுடைய கட்டளைகளை நிறைவேற்றும் அடிமைகளாக இந்தியர்கள் இருப்பார்கள்! வேலை வாய்ப்பு, மாதச் சம்பளம், சில வசதிகள் என்று வழங்கி, தம் ராணுவத்தில் அவர்கள் சேர வலை வீசினார்கள். குறிப்பாக, சராசரிக்கும் மேலான உயரம், கட்டுமஸ்தான தேகம் கொண்டவர்களையே பெரிதும் தேர்ந்தெடுத்தார்கள். தாம் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் எந்தப் பகுதியிலாவது ஏதேனும் பிரச்னை, குழப்பம் என்றால் அதை அடக்க இந்தியர்களைக் கொண்ட ராணுவத்தையே பயன்படுத்தினால், அது ஒட்டு மொத்த இந்தியர்களை பலவீனப்படுத்தும் ஓர் உத்தி என்றும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
அப்படிச் சிக்கியவர்களில் ஒருவர் உத்தர பிரதேச மாநிலம் நாக்வா கிராமத்தில் பிறந்தவர் மங்கள் பாண்டே. 1827, ஏப்ரல் 8ம் தேதி பிறந்த இவர் தம் குடும்ப சம்பிரதாயங்களில் அதிகம் ஊறிப்போனவர்.
அவருடைய குடும்பத்தை அணுகிய ஆங்கிலேய அதிகாரிகள், ராணுவத்தில் பாண்டேக்கு சிப்பாய் பணி அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். ஆங்கிலேய அதிகாரி ஒருவரே நேரில் கோரிக்கை விடுத்தது பெற்றோருக்கு ஆச்சர்யம் தந்தது.
மங்கள் பாண்டே 22வது வயதில் (1849) ஆங்கிலேயர் வங்காள ராணுவப் படையில் சிப்பாயாகப் பணியேற்றார். அவருக்கு பணி முகாமாக கல்கத்தா அமைந்தது. ஆனால் சில நாட்களுக்குள்ளாகவே பாண்டேக்கு அதிகாரிகளின் போக்கு பிடிக்கவில்லை. அடிமைகளாக நடத்துவதை அவரால் சகிக்க முடியவில்லை.
அதோடு துப்பாக்கிகளில் நிரப்பப்படும் ரவைகள் (குண்டுகள்) பசு, பன்றி கொழுப்பு தடவியதாக இருந்தது. இதை அறிந்ததும் சனாதன சம்பிரதாயங்களில் ஊறிப்போன பாண்டே, கோபித்தார். அவர் குழுவில் பணியாற்றிய இஸ்லாமிய சிப்பாய்களும் கோபம் கொண்டனர்.
ஹிந்து சிப்பாய்கள் பசு வதையை எதிர்த்த அதே வேளையில் பன்றிக் கொழுப்பு தடவிய குண்டுகளால் தம் மத நம்பிக்கையை ஆங்கிலேயர்கள் அவமதிப்பதாக இஸ்லாமியர்களும் உணர்ந்தார்கள்.
இது மட்டுமல்லாமல், கர்னலின் மனைவி, ராணுவப்படையைப் பார்வையிட அவ்வப்போது வருவார். அவருக்கும் கர்னலுக்கு ஒப்பாக மரியாதை செலுத்த வேண்டும் என்று மறைமுகமாக நிர்ப்பந்தம் செய்யப்பட்டபோது அதை சிப்பாய்கள் ஏற்கவில்லை.
போதாக்குறைக்கு அந்த அம்மையார் பைபிள் புத்தகங்களை சிப்பாய்களுக்கு விநியோகம் செய்ய, அவர்களுடைய வெறுப்பு, வன்மமாக வளர்ந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த பைபிள் புத்தககங்கள் ஹிந்தி மொழியில் அச்சிடப்பட்டிருந்ததுதான்! அந்த அம்மையாருக்கோ, கர்னலுக்கோ சுத்தமாக ஹிந்தி மொழி தெரியாது என்பது பாண்டே உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனாலும் நமக்குத் தெரிந்த மொழியில் பைபிளை அச்சிட்டுக் கொடுப்பதால் நாம் இளகி விடுவோம், இணங்கி விடுவோம் என்று நினைக்கிறார்களே என்றும் தன்மான உணர்வு சிப்பாய்களைத் தகித்தது.
அந்த காலகட்டத்தில் இந்திய சமஸ்தான மன்னர்கள், தங்களுக்கிடையே உள்ள பகை, கோபத்தை தீர்த்துக் கொள்ள பிரிட்டிஷாரின் துணையை நாடுவதும், அதனால் தன்மானமிழந்து கப்பம் கட்டுவதுமாக பயந்து வாழ்ந்து வந்தனர். கேள்வி கேட்டவர்களும், எதிர்த்தவர்களும் ஆங்கிலேயர்களால் பதவியில் இருந்து துாக்கி எறியப்பட்டனர். இந்தக் கொடுமையை எண்ணி பாண்டே மனம் நொந்தார்.
ஆங்கிலேயரை விரட்ட நான் ஏதேனும் செய்ய வேண்டும் என துடித்தார். அதன் விளைவாக, அவர் தன் ரெஜிமென்டைச் சேர்ந்த பிற சிப்பாய்களுடன் ரகசியமாக, ஆங்கிலேயர் மீதான வெறுப்பைப் பகிர்ந்து கொண்டார். பலரும் தன்னைப் போலவே தேசிய உணர்வு கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தார்.
ஒரு கட்டத்தில், பாண்டேயின் நடத்தை குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, சிலர் பாண்டேயிடம் நட்பாகப் பழகுவது போல நடித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தக்க தருணத்திற்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள். ஒரு சமயம், 'ஆங்கிலேயர்களை துப்பாக்கியால் சுட்டு பழி தீர்க்க வேண்டும்' என பாண்டே தெரிவித்ததை மேஜர் ஜேம்ஸ் ஹவ்ஸன் கவனித்து விட்டான். உடனே அந்தக் குழுவில் ஜமேதாரான ஈஸ்வரி பிரசாத் என்பவரிடம் பாண்டேயை கைது செய்ய உத்தரவிட்டான். அவரோ அதை செய்ய மறுத்தார்.
ஓரிரு நாளில் குதிரையில் வந்த துணை லெப்டினன்ட் ஹென்றி பாக் மீது பாண்டே துப்பாக்கியால் சுட்டார். ஆனால் குறி தவறி குதிரை மீது பாய்ந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான முதல் துப்பாக்கி குண்டு தாக்குதல் இது. (1857) இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான் ஹவ்ஸன். தன் குழுவிற்குள்ளேயே எதிரிகள் உருவாவதைப் புரிந்து கொண்டான்.
பாண்டே மட்டுமல்லாமல் மொத்த ரெஜிமென்டையுமே தண்டனைக்குள்ளாக்க வேண்டும் எனக் கறுவினான்.
ஆனால் அக்குழுவின் சிப்பாய் ஒவ்வொருவரிடமும் துப்பாக்கியும், குண்டுகளும் இருந்தன. அவர்களுக்குள்ளேயே குழப்பத்தை உண்டு பண்ணி, அவர்களில் சிலரையாவது வளைத்துப் போட்டுக் கொண்டு, ஒட்டு மொத்த ரெஜிமென்ட்டையும் ஒடுக்கி விடலாம் என்று திட்டமிட்டான் ஹவ்ஸன். இந்த கட்டத்தில் ஷேக் பல்டு என்ற சிப்பாய் பாண்டேயைப் பிடித்துக்கொள்ள, ஒரு அதிகாரி பாண்டேயைக் கைது செய்ய வந்தான். இதைப் பார்த்த பிற சிப்பாய்கள் பல்டு மீது கற்களையும், காலணிகளையும் வீசினார்கள். பாண்டேயும் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தினார்.
அச்சமயத்தில் ஜெனரல் ஹியர்ஸி என்பவன் இரு அதிகாரிகளுடன் அங்கே வர, பாண்டே தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை அதிகாரிகள் கைது செய்தார்கள்.
ஒரு வாரத்துக்குப் பிறகு பாண்டே மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தன் செய்கைக்கு யார் தூண்டுதலும் காரணமில்லை, என் சொந்த எண்ணப்படிதான் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தார் பாண்டே.
ஹவ்ஸன் உத்தரவுப்படி இவரைக் கைது செய்ய மறுத்த குற்றத்துக்காக ஈஸ்வரி பிரசாத் முதலில் துாக்கிலிடப்பட்டார்; அடுத்த பதின்மூன்றாவது நாள், 1857, ஏப்ரல் 21 அன்று பாண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
இந்திய விடுதலை வேள்வியில் தியாகச் சுடராகக் கலந்தார் மங்கள் பாண்டே.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695