ADDED : ஜன 16, 2025 01:38 PM

அன்பே போதும்
“என் பொண்ணுக்கு புத்தி கலங்கிப் போச்சு. நீங்கதான் அவள நல்ல வார்த்தை சொல்லித் திருத்தணும்” என வருத்தப்பட்டார் ராமநாதன்.
மாநிலத்தின் பெரிய தணிக்கை நிறுவனத் தலைவரான ராமநாதனுக்கு முன் நான் அமர்ந்திருந்தேன். அவரது மனைவி, மகன், மகள் எல்லோரும் தணிக்கையாளர்கள். அதிலும் குறிப்பாக அவரது மகள் தேவி சி.ஏ., தேர்வில் தங்கப் பதக்கம் வாங்கியவள்.
“என் மகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கேன். என் கம்பெனில பார்ட்னராச் சேரு. இல்ல, பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துல வேலைக்குச் சேரு. இல்ல, நீயே தொழில் ஆரம்பின்னு சொல்லிட்டேன்”
“தேவி எதை தேர்ந்தெடுத்தா?”
“அந்தக் கொடுமைய ஏன் சார் கேக்கறீங்க? பிளஸ்2 முடிச்சதும் சி.ஏ., சேர்ந்தா. 21 வயசுல சி.ஏ., முடிச்சிட்டா. இப்போ எம்.பி.பி.எஸ்., சேரணும்னு ஒத்தக்கால்ல நிக்கறா”
“நீங்க பேசிப் பாத்தீங்களா?”
“பேசிக்கிட்டேயிருக்கேன். அடம் பிடிக்கறா. தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது அட்வைஸ் கேளுன்னு சொல்லிட்டேன். மாட்டேங்கறா. உங்ககிட்ட மட்டும்தான் பேசுவேன்னு சொன்னா. அதான்...”
எனக்கு பயமாக இருந்தது.
“காத்துக்கிட்டிருக்கா. போய் பேசுங்க”
தேவி இருந்த அறைக்குக் கூட்டிப் போக வந்த பெண் உதவியாளர் ரகசியக் குரலில் சொன்னாள்.
“தேவி என் அடியவள். அவளுக்கு வழிமுறையில் மாறுதல் தேவை. தேவியின் தந்தைக்குத்தான் பெரிய மன மாற்றம் தேவை.”
“நான் என்ன பேசுவது...''
“பேச வைக்கிறேன்”
தேவி அழகாக இருந்தாள். அவளின் கண்களில் ஜொலித்த அறிவுக் களை என்னைக் கூசவைத்தது.
“ஆரம்பிங்க, சார். சி.ஏ., படிச்சிட்டு அதுக்கப்பறம் யாராவது எம்.பி.பி.எஸ்., படிக்கறேன்னு சொல்வாங்களா? நீங்க சொல்றதச் சொல்லுங்க. நான் ரெண்டு பிட்ட சேத்துப் போட்டு நீங்க அறிவுரை சொன்னதா அப்பாகிட்டச் சொல்லிடறேன்”
“நான் அறிவுரை சொல்ல வரல. திடீர் மாற்றதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்க வந்திருக்கேன். உன்னைப் புரிஞ்சிக்க வந்திருக்கேன்” தேவி பேச ஆரம்பித்தாள்.
“எங்ககிட்ட நிறைய சொத்து இருக்கு சார். நானும் சி.ஏ., ஆகி நிறையச் சம்பாதிப்பேன். ஆனா அடுத்த தலைமுறை பாராட்ட மாதிரி ஏதாவது செய்ய வேண்டாமா?”
“அதுக்கு?”
“நான் ஒரு பெரிய அறக்கட்டளைய ஆரம்பிச்சி இலவசமா மருத்துவச் சிகிச்சை கொடுக்கப் போறேன். அனாதையா தவிக்கற முதியோர்களுக்காக முதியோர் இல்லம் நடத்தப் போறேன். புற்று நோய் சிகிச்சைய இலவசமாத் தர ஏற்பாடு பண்ணப் போறேன்”
“சபாஷ்”
“அடிப்படை மருத்துவக் கல்வி இருந்தாத்தானே அதெல்லாம் செய்ய முடியும். எனக்கு இன்னும் வயசு இருக்கு. அஞ்சு வருஷத்துல டாக்டர் ஆயிருவேன். அப்புறம் வாழ்க்கை முழுசும் சேவை செய்ய இருக்கேன். மக்களுக்கு அன்பு காட்டக் கூடாதுன்னு சொல்லப் போறீங்களா? எங்கப்பா மாதிரி நிறையப் பணம் சம்பாதிக்கணும்னு சொல்லப் போறீங்களா?”
“ரெண்டும் இல்லம்மா. அன்பு காட்டறத ஏன் தள்ளிப் போடணும்னு கேக்கறேன்”
“புரியலையே”
“அறக்கட்டளை நடத்த மருத்துவம் படிக்கத் தேவையில்லம்மா. ஒரு காலத்துல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஆதாரம் உள்ள அறக்கட்டளையோட தலைவியா இருக்கப் போற. உன் அறக்கட்டளை பல வழிகளில் சேவை செய்யப் போகுது. எத்தனையோ எம்.டி., எம்.எஸ்., எப்.ஆர்.சி.எஸ்., படிச்சவங்க உனக்காக வேலை செய்யப் போறாங்க. நீ எதுக்கு மருத்துவம் படிக்கணும்?”
“மருத்துவ சேவை செய்யறதுக்கு மருத்துவக் கல்வி வேண்டாமா?”
“மனசுல அன்பு இருந்தால் போதும். பெரிய அளவுல சேவை செய்யணும்னா உனக்கு நிர்வாகத் திறமைதான் நிறைய இருக்கணும். சட்டதிட்டம் பத்தி நல்லாத் தெரியணும். அதுக்கு உன் சி.ஏ., படிப்பே ஜாஸ்தி. ரெண்டு, மூணு வருஷம் பெரிய அறக்கட்டளையில வேலைக்குச் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கோ. உங்கப்பாவே அதுக்கு உதவி செய்வாரு”
“எங்கப்பா உதவி செய்வாரா?”
“எம்.பி.பி.எஸ்., படிக்கற யோசனையை விடு. உங்கப்பாவ ஒத்துக்க வைக்க நானாச்சு”
சட்டென்று என் காலைத் தொட்டு வணங்கினாள் தேவி.
ராமநாதனின் அறை. அவருடைய பதட்டத்தைப் பார்க்க பாவமாக இருந்தது.
“வெற்றின்னு சொல்லுங்க”
“பெரிய வெற்றி. எம்.பி.பி.எஸ் படிக்கப் போறதில்லன்னு தேவி சொல்லிட்டா.”
“வயித்துல பால வாத்தீங்க.”
“ஆனா அவ அறக்கட்டளை ஆரம்பிக்கப் போறா. நிறைய நல்ல காரியம் செய்யப்போறா. கல்யாணம் குடும்பம்னு சாதாரண வாழ்க்கை வாழப்போறதில்ல”
“நான் ஒத்துக்க மாட்டேன்”
“அவ வீட்ட விட்டுப் போயிருவா. பரவாயில்லையா?”
“ஏன் என்ன சித்ரவதை பண்றீங்க?”
“சித்திரவதை பண்ணது நீங்க. அதுனாலதான் இப்படி நடக்குது”
“வாய்க்கு வந்தபடி பேசாதீங்க''
“நீங்க தொழில் ஆரம்பிச்ச புதுசுல ஒரு பொண்ணு அறக்கட்டளை ஆரம்பிக்கணும்னு உங்ககிட்ட வந்தா. நீங்களும் பண்ணிக் கொடுத்து பீஸ் வாங்கிக்கிட்டீங்க. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது ஏதோ தப்பு பண்ணிட்டீங்க. அபராதம் விதிச்சி நோட்டீஸ் வந்தது. எல்லாம் உங்க தப்புதான் காரணம். உங்க தப்ப ஏத்துக்கிட்டு அபராதத்த நீங்களே செலுத்தறேன்னு சொல்லியிருக்கணும். குறைஞ்ச பட்சம் அந்தத் தப்பச் சரி செய்ய பீஸ் கேட்டிருக்கக் கூடாது. ஆனா நீங்க ஒரு பெரிய தொகைய பீசாக் கேட்டீங்க. அத அந்தப் பொண்ணால தர முடியல. அந்த வருமான வரி விவாகரத்துல அந்த அறக்கட்டளையே முடங்கிப் போச்சு. அந்தப் பொண்ணும் மனசுடைஞ்சி செத்துட்டா. நீங்க செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கு. தேவிக்கு வேணுங்கற உதவியை செஞ்சி கொடுங்க”
“இருந்தாலும் கல்யாணம் குடும்பம் இதெல்லாம் இல்லாம தனியாளா... பாவம் அவ...''
“கல்யாணம் செஞ்சி வச்சாலும் நிலைச்சு நிக்காது. தேவிய அவ வழியிலேயே போகவிடுங்க. இப்போ ராமநாதன் மகள் தேவின்னு உலகம் பாக்குது. இன்னும் இருபது வருஷம் கழிச்சி தேவியோட அப்பா ராமநாதன்னு உலகம் பாராட்டும். சொல்றதச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்”
வெளியே வந்தவுடன் ராமநாதனின் உதவியாளரைப் பார்த்தேன்.
“அப்பா, மகள் இருவரையும் திருத்தி விட்டாய். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனச் சொல். இதுவே உன் கடைசிப் பிறவியாக இருக்கும் வரத்தைக் கொடுக்கட்டுமா?”
“அது உங்கள் இஷ்டம் தாயே. இன்னும் ஆயிரம் பிறவிகளைக் கொடுங்கள். ஒவ்வொரு பிறவியிலும் மனம் நிறைய மனித நேயத்தைக் கொடுங்கள். நிறைய அறிவு, பணத்தை கொடுத்து அனைத்தையும் பொதுநலனுக்கு பயன்படுத்தும் மனதைக் கொடுங்கள்”
அழகான புன்னகையுடன் அடுத்த கணமே மறைந்தாள் அகிலாண்டேஸ்வரி.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com