ADDED : ஜன 16, 2025 01:40 PM

தில்லையாடி வள்ளியம்மை
முருகப்பெருமானின் மனைவியாகிய வள்ளியின் பெயரைக் கொண்டதால் முளையிலேயே வீரம் மிக்கவராக விளங்கினார் வள்ளியம்மை. அந்நியரின் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார்.
நெசவுத் தொழிலில் ஈடுபட்ட முனுசாமி முதலியார், மங்களத்தம்மாள் இருவரும் தென் ஆப்பிரிக்கா சென்று தங்க, வைரச் சுரங்கங்களில் பணியாற்றினர். இந்தப் பணியைத் தவிர முனுசாமி, ஜோகன்னஸ்பர்க் நகரில் காய்கறி கடையும் நடத்தினார். இத்தம்பதிக்கு பிப். 22,1898ல் பிறந்தார் வள்ளியம்மை.
காய்ந்த நிலம், கட்டாந்தரை, இருண்ட கண்டம் என்றெல்லாம் பழிக்கப்பட்டதுதான் தென் ஆப்பிரிக்கா. ஆனால் அங்கு தங்கமும், வைரமும் அபரிமிதமாகக் கிடைக்கின்றன என்ற தகவல் கிடைத்ததும் பலரும் வந்து முற்றுகையிட்டனர். ஆனால் வள்ளியம்மை குடும்பத்தாரும், அங்கு வாழ்ந்த மற்ற இந்தியர்களும் பணத்தை விட, தாய்நாட்டின் விடுதலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்காவும் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது என்றாலும், தாய்நாடான இந்தியாவின் அடிமைத்தளையை முதலில் உடைத்தெறிய வேண்டும் என விரும்பினர்.
அதே சமயம் தென் ஆப்பிரிக்காவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசு, சுரங்கங்களில் பணியாற்றிய இந்தியர்களைக் கொடுமைப்படுத்துவதைக் கண்டித்து அவ்வப்போது எதிர்ப்பைக் காட்டி வந்தனர்.
விடுதலை எண்ணத்துக்கு உரம் சேர்க்கும் விதமாக காந்தி தொழில் நிமித்தமாக 1893ல் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தார். அங்கே பிரிட்டிஷ் அரசு, மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மறுத்ததை வேதனையுடன் கவனித்தார். இந்தியர்களுடைய உழைப்பில் சுகம் கண்டு வந்த ஆட்சியாளர்களை கண்டிக்கும் வகையிலும், அவர்களுடைய கொடுமைகளை உலகெங்கும் அறியப்படுத்தவும் பல போராட்டங்களை மேற்கொண்டார்.
1906ல் இந்தியர்கள் அனைவரும் தம் பெயரையும், கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியது அரசு. அவர்கள் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்துக்குப் போவதை தடை செய்தது. இதை எதிர்த்து காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேட்டாலில் இருந்து டிரான்ஸ்வாலுக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர்.
இதை எல்லாம் கேள்விப்பட்டு மனதில் சுதந்திரக் கனலை வளர்த்துக் கொண்டார் ஒன்பதே வயதான வள்ளியம்மை. இந்த வகையில் காந்தியை வழிகாட்டியாகக் கொண்டு அவர் நடத்திய உரிமை மீட்புப் போராட்டங்களில் பங்கேற்றார்.
காந்திஜியின் கவனத்தை வள்ளியம்மை ஈர்த்தது 1913ம் ஆண்டில். அப்போது தென் ஆப்பிரிக்க பிரிட்டிஷ் அரசு, அங்கே வசிக்கும் அனைவரும் கிறிஸ்தவ முறைப்படி மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற விதியை அமல்படுத்தியது. இந்தியாவை விட்டு இங்கே வந்து வசித்தாலும் சம்பிரதாயங்களில் இந்தியராகவே வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சட்டத்தால் கோபம் கொண்டனர். இதை எதிர்த்து ஜோகன்ஸ்பர்க் நகரில் அகிம்சை பேரணியை நடத்தினார் காந்தி.
அதற்கான காரணத்தை விளக்கும் வகையில், அந்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களைப் படிப்பது வழக்கம். ஆங்கிலத்தில் எழுதிய அந்த வாசகங்களை யார் படிக்க முன்வருகிறீர்கள் என காந்தி கேட்டார்.
அப்போது பதினைந்து வயதான வள்ளியம்மை பளிச்சென வந்து காந்தியிடமிருந்து அந்த தாளைப் பெற்றுக் கொண்டார். வீரம் செறிந்த குரலில் கணீரென படித்தார். சின்னப் பெண் தைரியமாகத் தன் எதிப்பைக் காட்ட முனையும் போது, நாம் ஏன் தயங்க வேண்டும் என வீறு கொண்டெழுந்த உணர்வில், 'வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்' என கோஷமிட்டபடியே திரளான மக்கள் காந்தியின் தலைமையில் அணி வகுத்தனர்.
ஊர்வலம், பொதுக் கூட்டம் என 56 நாட்கள் நீடித்ததைக் கண்டு பிரிட்டிஷ் அரசு அதிர்ந்தது. இதற்கு காரணமான காந்தியை சுட்டுக் கொல்ல தீர்மானித்தது. காவலர் துப்பாக்கியை ஏந்தியபடி அவர் முன் வந்தார். அப்போது சட்டென குறுக்கே புகுந்த வள்ளியம்மை ''முதலில் என்னைச் சுட்டு வீழ்த்தி விட்டு, பிறகு எங்கள் தலைவரைச் சுடு'' என கர்ஜித்தார். காவலர் தயங்கினர்.
எதிர்பார்த்ததுபோல போராளிகள் அனைவரையும் கைது செய்தனர். அற்பச் சிறுமி ஒருத்தி தங்களை அல்லாட விட்ட வெறுப்பால் குமைந்தனர் ஆங்கிலேயர்கள். அவரைப் பற்றிய விவரங்களைப் பதிந்த போது வள்ளியம்மை, தான் இந்தியாவைச் சேர்ந்தவள் என தெரிவித்தார்.
உடனே அதிகாரிகள், ''இந்தியா என்ற நாடே கிடையாது. அதை அடையாளம் காட்ட கொடி கூட இல்லையே'' என சிரித்தனர்.
உடனே வள்ளியம்மை தன் சேலையின் ஒரு பகுதியைக் கிழித்து, ''இதோ, இதுதான் எங்கள் கொடி'' என காட்டினார். கோபம் கொப்பளித்தது அதிகாரிகளுக்கு. உடனே வள்ளியம்மையைச் சிறையிலிட்டு, உணவளிக்காமல் கொடுமைப்படுத்தினர். உடல் நலம் குன்றியது வள்ளியம்மைக்கு. சிறு தொகையை அபராதமாகக் கட்டி விட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அவரை விடுவித்து விடுவதாக அதிகாரிகள் கூறினர். ''மன்னிப்பு கேட்பது என் நாட்டிற்கே அவமானம். சிறைச்சாலையிலேயே இறக்கவும் தயார்'' என்றார் வள்ளியம்மை.
ஓரிரு நாளில் காந்திக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே சில தற்காலிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதனால் வள்ளியம்மையும், பிற கைதிகளும் விடுதலை பெற்றனர். நடக்கவே தெம்பில்லாமல் இருந்த வள்ளியம்மையை காந்தி தோளில் சுமந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார். ''சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இவள் பெயர் நிச்சயம் இடம் பெறும்'' என நெகிழ்ந்து சொன்னார் காந்தி. அது மட்டுமல்ல, பின்னாளில் இந்தியாவுக்கு தேசியக் கொடி உருவாக்கிய போது, வள்ளியம்மை கிழித்துக் கொடுத்த துணியின் நிறம் கொடியில் இடம் பிடித்தது.
தென் ஆப்பிரிக்காவில் தான் நடத்தி வந்த இந்தியன் ஒபினியன் (குஜராத்தி, தமிழ், ஆங்கிலம்) பத்திரிகையில் காந்தி இப்படி எழுதுகிறார்: 'அந்தப் பதினாறு வயது சிறுமியிடம், 'சிறைக்குப் போனதற்காக வருந்துகிறாயா அம்மா?' எனக் கேட்டேன். 'வருத்தமா? இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டாலும் சிறைக்குச் செல்லத் தயார்' என்றாள். உடல் நலக் கோளாறால் அவள் குரல் பலவீனமாக இருந்தாலும், அதில் இருந்த உறுதி என்னை உலுக்கியது. 'அதனால் நீ இறக்க நேர்ந்தால்...?' எனக் கேட்டேன். 'அதைப் பற்றி கவலைப்படவில்லை. தாய்நாட்டிற்காக இறக்க விரும்பாதவர் யாரேனும் உண்டா?' என பதிலளித்து என் மனதில் பல மடங்கு உயர்ந்தாள்'' என்கிறார்.
சிறையில் ஏற்பட்ட உடல் நலிவு குணமாகாமலேயே அந்தப் பதினாறு வயது சிறுமி, 1914ம் ஆண்டு, தான் பிறந்த அதே பிப்.22ல் உயிர் நீத்தார். இன்றளவும் தென்ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு ஒரு வீராங்கனையாக திகழ்கிறார். அந்த நாட்டின் எல்லா குழந்தைகளுக்கும் இவரது வரலாறு கற்பிக்கப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம் தரங்கம்பாடி தாலுகா, தில்லையாடி கிராமத்தில் வள்ளியம்மை நினைவு மண்டபம் அவரது பெருமையைப் போற்றுகிறது. தில்லையாடி வள்ளியம்மை நகர், அவர் பெயரில் உயர்நிலைப் பள்ளி, சென்னை கைத்தறி ஜவுளி விற்பனையாளர் கூட்டுறவு விற்பனை மையம் ஆகியன அவரது புகழைப் பறைசாற்றுகின்றன. 2008ல் அவரது அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695