ADDED : ஜன 23, 2025 10:04 AM

தம்பியின் பாசம்
என்முன் அமர்ந்திருந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கண்கள் சிவந்திருந்தன. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.
“சின்ன வயசுலேயே எங்கப்பா செத்துட்டாரு. அண்ணனையே அப்பாவ நெனச்சி வளர்ந்தவன் நான். எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் சென்னையில இருந்துச்சு. அதை வித்துத் தர்றேன்னு என்கிட்ட நைசா பேசி தன் பேர்ல பவர் வாங்கிக்கிட்டான் அண்ணன். நிலம் இருபது லட்சத்துக்குத்தான் போச்சுன்னு சொல்லி என் பங்கு பத்து லட்சம் கொடுத்தான். அப்புறம்தான் தெரிஞ்சது நிலத்த தன் மகன் பேர்ல மாத்திக்கிட்டு அத பிளாட் போட்டு அஞ்சுகோடிக்கு வித்திருக்கான் சார்”
“வழக்கு போடலாமே?”
“வக்கீல் ஆதாரம் போதாதுன்னு சொல்றாரு. நெறையச் செலவாகும்னு சொல்றாரு”
“என்ன செய்யப் போறீங்க?”
“எங்க ஊருல இருக்கற அம்மன் கோயில்ல யாகம் செய்யப் போறேன். யாகம் முடிஞ்சவுடன் அண்ணனுக்குப் பைத்தியம் பிடிச்சிரும். சட்டையக் கிழிச்சிகிட்டு தெருவுல ஓடப்போறான், பாருங்க...”
“அம்மன் பேர்ல இப்படி நாசவேலை செய்யலாமா? அண்ணனை மன்னிக்க முடியாதா?”
“அஞ்சு கோடியத் தொலைச்சவனோட வலி உங்களுக்கு எப்படி தெரியும்? வெள்ளி அன்று வர்றேன். பச்சைப்புடவைக்காரி வேற வழி காட்டலேன்னா யாகம்தான் வழி...”
வியாழன் அன்று மாலையில் நடந்து சென்றேன். அப்போது ஒரு பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“அண்ணனால் வஞ்சிக்கப் பட்டவனுக்கு என்ன சொல்வது என யோசிக்கிறாயோ?”
“இல்லை தாயே, நீங்களே எண்ணங்களாகவும், வார்த்தைகளாகவும் மலர வேண்டும் என யாசிக்கிறேன்”
வெள்ளியன்று அலுவலகத்தில் நுழைந்த போதே எனக்காகக் காத்திருந்தான் தம்பி.
“உங்க அண்ணன் செஞ்சது பெரிய துரோகம். அதனால நீங்க சாதாரணமாக் கொடுக்கற சாபமே பலிச்சிரும். நீங்க ஒரு படி மேல போய் மந்திரம் சொல்லி, யாகம் செஞ்சி சாபம் தரப் போறீங்க நிச்சயமா பலிக்கும்”
தம்பியின் முகத்தில் கொடூரமான சிரிப்பு.
“ சாபம் பலிச்சா உங்க அண்ணனுக்குப் பைத்தியம் பிடிக்கும். ஆனா அதுனால உங்க பணம் கெடச்சிருமா என்ன?”
“அது போனா போகுது. அந்த துரோகி அணு அணுவாத் துடிச்சு சாகணும்”
“கர்மக்கணக்கு எப்படி வேலை செய்யும் தெரியுமா?”
“எப்படி?”
“உங்க யாகத்தால உங்க அண்ணன் பைத்தியமாகி செத்துருவாரு. அடுத்த பிறவியில உங்களுக்கு நெருக்கமான ஒருத்தர் உங்க மனைவியோ மகனோ மனநலம் இல்லாமல் இருப்பாங்க. அந்த பிறவி முழுசும் அவங்கள பார்த்துக்கிற கடமை உங்க தலையில விழும் பரவாயில்லையா?”
“ஏன் இப்படி பயமுறுத்தறீங்க?”
“உங்க அண்ணன் செஞ்ச துரோகத்துக்கு தண்டனை அனுபவிப்பாரு. அது பச்சைப் புடவைக்காரி பொறுப்பு. ஆனா உங்க சாபத்தாலயும் யாகத்தாலயும் அவரு தண்டனை அனுபவிச்சா அதுக்கு நீங்க பொறுப்பு. கர்மக்கணக்கு எப்படி தாக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது”
“இப்போ என்னதான் செய்யறது?”
“நான் சொல்றது கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா வேற வழியில்லை. உங்க அண்ணன்தானேன்னு விட்டிருங்க”
“அது எப்படி விட முடியும்? அஞ்சு கோடியாச்சே”
“நிலத்த அரசு கையகப்படுத்தி நஷ்டஈடு குறைச்சு கொடுத்த மாதிரி நினைச்சிக்கங்க”
“அப்படினா அரசு மீது கேஸ் போடுவேன்”
“கேஸ் முடியறதுக்குள்ள உங்க வாழ்க்கையே கூட முடிஞ்சிடலாம்?”
“நான் சாதாரண மனுஷன் சார். என்னால அப்படியெல்லாம் நினைக்க முடியாது”
“யாகத்த ரெண்டு வாரம் தள்ளிப் போடுங்க. ரெண்டு வாரம் ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்க. கோயிலுக்குப் போய் அண்ணனுக்கு நல்ல புத்தி வரணும்ணு வேண்டுங்க. அப்படியும் கோபம் குறையலேன்னா யாகத்தைச் செய்யுங்க”
தம்பி போய் விட்டான். எனக்குத்தான் மனம் ஆறவில்லை. அவனுக்காகவும், அவன் அண்ணனுக்காகவும் இரண்டு வாரம் விரதம் இருந்து கோயிலுக்குப் போவது என தீர்மானித்தேன். பதினான்காவது நாள் விரதம் இருந்து கோயிலுக்கு நடந்தேன். அருமையான தரிசனம். பொற்றாமரைக் குளக்கரை படிகளில் உட்கார்ந்தபோது பட்டுப்புடவை அணிந்த ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள்.
“பிரசாத கடையில வாங்கிய வடை, அப்பம் மிச்சமாகி விட்டது. பிரசாதத்தை துாக்கிப் போட வேண்டாமேன்னு...''
என்னை என்ன குப்பைத் தொட்டியாக நினைத்து விட்டாளா?
“நல்லசேதி சொல்லி உன் விரதத்தை முடித்து வைக்க வந்தால் முறைக்கிறாயே”
தாயே எனக் கதறியபடி கால்களில் விழுந்தேன்.
“ நீ தம்பியிடம் எளிதாகச் சொல்லி விட்டாய். ஆனால் அவனால் அண்ணனை மன்னிக்க முடியவில்லை. அவன் மனதில் இருந்த கோபமும் வெறுப்பும் அவனை அழித்து விடும் நிலைக்குப் போய்விட்டது. ஒரு கட்டத்தில் யாகம் செய்ய ஊருக்குக் கிளம்ப தீர்மானித்தான். அப்போதுதான் அவனுக்காக நீ விரதம் இருக்கத் தொடங்கினாய். அந்த சூழ்நிலையில் தான் தம்பியின் மனம் படிப்படியாக மென்மையானது. அவன் மனதில் இருந்த வெறுப்பு மறைந்து அன்பின் அளவு கூடியது.
அண்ணனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என நினைக்கும் அளவிற்கு வந்து விட்டான். யாகம் வேண்டாம் என தீர்மானித்தான். அவனுடைய விரதத்தின் நிறைவு நாளில் அர்ச்சகர் யார் பேருக்கு அர்ச்சனை செய்யட்டும் எனக் கேட்ட போது அண்ணனின் பெயரைத்தான் தம்பி சொன்னான்''
“கோடிக்கணக்கில் இழந்துவிட்டானே தாயே!”
“ஒருவன் அன்பின் பக்கம் வந்து விட்டால் பணம் தன்னைப் போல் அவனைத் தேடி வரும். இது கடவுளின் விதி”
“என்ன ஆயிற்று”
“பதினைந்து ஆண்டுக்கு முன் தம்பி தன் நண்பனுக்கு முப்பது லட்சம் கடன் கொடுத்திருந்தான். அதை நண்பனால் தர முடியவில்லை. தன் பெயரில் ஊருக்கு வெளியில் இருந்த நிலத்தை எழுதிக் கொடுத்தான். அன்று அதன் விலை 20 லட்சம். ஆனால் இன்று ஏழு கோடிக்கும் மேல். அண்ணன் திருடியது இரண்டரை கோடிதான். தம்பியின் மனதில் இருந்த அன்பு அவனுக்கு அதை விட மூன்று மடங்கு சம்பாதித்துக் கொடுத்தது. உனக்கு என்ன வேண்டும் சொல்”
“எத்தனையோ பேர் துரோகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் மீது எனக்கு இன்னும் கோபமும் வெறுப்பும் இருக்கிறது. அது அழிய வேண்டும். அனைவரும் குறை இல்லாமல் வாழ வேண்டும்”
“ஓஹோ! இப்படி வேண்டினால் உனக்கும் கோடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறாயா?”
“சத்தியமாக இல்லை தாயே! அந்தக் கோடிகளை அவர்களுக்கே கொடுங்கள். எனக்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே... கோடிகள் எதற்கு?” அன்னையின் சிரிப்புச் சத்தம் சங்கீதமாகக் கேட்டது. அவள் மறைந்து விட்டாள்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com