ADDED : ஜன 23, 2025 10:05 AM

சர்தார் வல்லபாய் படேல்
'ஆயிரம் உண்டிங்கு சாதி, இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?' என்கிறார் மகாகவி பாரதியார். அந்நியர் மீதான கோபத்தைவிட, நமக்குள்ளேயே இருந்த (இருக்கும்) பாகுபாடுகள் மீதான வருத்தம்தான் அவருக்கு அதிகம். இந்த பலவீனத்தை சாதகமாக்கிக் கொண்டே ஆங்கிலேயர்கள் நம்மை 300 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
இதே சிந்தனை, ஏக்கம், ஆற்றாமை எல்லாம் சர்தார் வல்லபாய் படேலுக்கும் இருந்தன. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே அவர் இந்திய மக்களுக்கிடையே ஒற்றுமை பலப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். சுதந்திரம் வேண்டும் என பெரும்பான்மையினர் போராடிய போது, 'சுதந்திரம் வேண்டாம், நாங்கள் அடிமையாக இருந்தே சுகம் கண்டவர்கள், அப்படியே இருந்துவிட்டுப் போகிறோம்' என ஆங்கிலேயர்களுக்கு சார்பாக செயல்பட்ட கூட்டமும் இருந்தது.
இந்தியாவின் பல பகுதிகளை பாரம்பரியமாக ஆண்ட மன்னர்கள், ஜமீன்தார்கள் அனைவரும் சுயநலவாதிகளாக இருந்தனர். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதோடு, சம்பந்தமே இல்லாத ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்த கொடுமையும் அரங்கேறியது. இதை ஆதாயமாக வைத்துக் கொண்டு, உடனிருந்தே கொல்லும் வியாதியாகி, மற்ற மன்னர்களை வீழ்த்தி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர்.
இதைச் சுட்டிக் காட்டிய படேல், இந்தியர்கள் ஒற்றுமையுடன் ஆங்கிலேயர்களை அகற்றும் பணிக்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்.
குஜராத் மாநிலம் கரம்சாத் என்னும் ஊரில் அக்.31, 1875 ல் படேல் பிறந்தார். இயற்பெயர் வல்லபாய் ஜாவர்பாய் பட்டேல். சிறு வயதில் இருந்தே நல்ல உடல் பலம் மிக்கவராக இருந்தார். இதற்கு காரணம் அவரது தந்தையார்தான். தினமும் 20 கி.மீ., தொலைவில் உள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்கு அவரை நடந்தே அழைத்துச் செல்வார். அந்த நடை பயிற்சி, படேலின் உடலை கட்டுக்கோப்பாகவும், வலிமையாகவும் உருவாக்கியது. அதோடு கோயிலில் அவர் மேற்கொண்ட பிரார்த்தனையால் மனமும் உறுதியடைந்தது.
பதினாறு வயதில் திருமணம் செய்த படேல், மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி பெற்றார். இங்கிலாந்தில் வழக்கறிஞர் படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார். இவரது ஆஜானுபாகுவான தோற்றம், கூர்மையான பார்வை, கணீர் குரல் ஆகியவற்றால் வழக்கறிஞராக சிறந்து விளங்கினார்.
இவர் எவ்வளவு உறுதியான மனம் கொண்டவர் என்பதற்கு ஒரு சான்று. பம்பாய் (மும்பை) நீதிமன்றத்தில் ஒருமுறை வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது உதவியாளர் ஒரு சீட்டு கொடுத்தார். அதை படித்து விட்டு, பிறகு கோட்டுப் பையில் வைத்துக் கொண்டு குறுக்கு விசாரணையைத் தொடர்ந்தார். சில நிமிடங்களில் வழக்கில் தன் கட்சிக்காரருக்கு சாதகமாகத் தீர்ப்பை வாங்கிக் கொடுத்தார்.
அங்கு கூடி இருந்தவர்களுக்கு அந்த சீட்டில் இருந்ததை அறிய ஆர்வம் வந்தது. ஒருவேளை வழக்கு சம்பந்தமான முக்கியமான துருப்புச் சீட்டோ? என நினைத்தனர். அமைதியாக நின்றிருந்த படேலிடம் இதைப் பற்றி கேட்டபோது, ''நான் இப்போது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அங்கே புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த என் மனைவி இறந்து விட்டாள்'' என சொல்லிவிட்டு புறப்பட்டார். அவரது தொழில் பக்தியைக் கண்டு அனைவரும் வியந்தனர்.
விடுதலைக்காக நடத்தப்பட்ட பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.
குஜராத்தில் கெடா என்னும் பகுதியில் பஞ்சம் நிலவியது. இந்நிலையில் மக்களிடம் வரியைத் தொடர்ந்து செலுத்தச் சொல்லி ஆங்கிலேய அரசு கட்டாயப்படுத்தியது. அப்போது காந்தியால் உருவான வரிகொடா இயக்கத்தில் பங்கேற்றார். படேலின் தோற்றம், தெளிவான பேச்சால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரது தலைமையில் தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என உணர்ந்து ஒன்று திரண்டனர். இதைக் கண்டு திகைத்த ஆங்கிலேய அரசு வரிவிலக்கு அளித்தது. இந்த சாதனைக்குப் பின் ஒவ்வொருவரும் தன்னை இந்தியர் என நினைத்தால் ஆங்கிலேயர் நிச்சயம் வெளியேறுவர் என்ற நம்பிக்கை படேலுக்கு ஏற்பட்டது.
பர்டோலி என்னும் பகுதியில் விவசாயிகளின் பிரச்னைக்காக சத்யாகிரகப் போராட்டத்தை நடத்தினார். இதை கண்டு ஆங்கிலேயர் கதிகலங்கினர். இந்த உழைப்புக்காக அவரை 'சர்தார்' என மக்கள் அழைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவருக்கு சிறைத் தண்டனை விதித்தனர்.
குஜராத்திலுள்ள சோம்நாதர் கோயிலை இந்தியாவுக்கே சொந்தமாக்கிய பெருமையும் படேலுக்கு உண்டு. கஜினி முகமது முதல் அவுரங்க சீப் காலம் வரை பல முறை இக்கோயிலை சூறையாடினர். ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் கோயில் கட்டப்பட்டது. 1947ல் சுதந்திரம் அடைந்த போது கோயில் இருந்த பகுதியை பாகிஸ்தானுடன் சேர்க்க துரோகிகள் சிலர் முயன்றனர். ஆனால் அதையும் மீறி இந்தியாவுடன் இணைந்தார். கோயிலை புதிதாக கட்ட அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். இக்கோயில் 1995ல் திறக்கப்பட்டது. ஆனால் அதில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
ஒருசமயம் எரவாடா மத்திய சிறையில் காந்தியுடன் படேலும் அடைக்கப்பட்ட போது இருவருக்கும் நட்பு பலமானது. அப்போது அவரது மனதில் 'ஒன்றாக இணைந்த அகண்ட பாரதம்' என்ற கனவு எழுந்தது.
இதனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் முதல் உள்துறை அமைச்சர், துணை பிரதமராக ஆனார். பிரிந்து கிடந்த சமஸ்தானங்களிடம் தொடர்ந்து பேசி இந்தியாவுடன் இணைக்க முயன்றார். சிலர் சம்மதித்தனர். மறுத்தவர்களை கட்டாயப்படுத்தி இணைத்தார். இவர் இணைத்த சமஸ்தானங்களின் எண்ணிக்கை 565. இப்படி இருந்தும் சில சமஸ்தானங்களை அவரால் இணைக்க முடியவில்லை. அந்த ஏக்கத்துடன் இந்த மூன்றாண்டு கால அரிய முயற்சியில் ஈடுபட்டிருந்த படேல் டிச.15, 1950ல் உயிர் நீத்தார்.
அந்த இரும்பு மனிதரின் உறுதியான சிந்தனை, உயரிய நோக்கம், தேசியத்தைக் கொண்டாடிய நற்பண்புகள் மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் 12 சதுர கி.மீ., பரப்புள்ள ஏரியில் 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்.31 2018ல் பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்தார். இது 'ஒற்றுமைக்கான சிலை' (Statue of Unity) எனப்படுகிறது.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695