sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 51

/

பச்சைப்புடவைக்காரி - 51

பச்சைப்புடவைக்காரி - 51

பச்சைப்புடவைக்காரி - 51


ADDED : பிப் 13, 2025 11:38 AM

Google News

ADDED : பிப் 13, 2025 11:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பாவின் அன்பு

“நான் ராதிகா. சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கறேன். நல்லாச் சம்பாதிக்கறேன். சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கேன்” அழகாக இருந்தாள் ராதிகா.

“இந்த உலகத்துல நான் அதிகமா வெறுக்கறது அப்பாவைத் தான். அந்தாளு ஒருதரம் கூட அன்பா பேர் சொல்லிக் கூப்பிட்டதில்ல. என்கிட்ட முகம் கொடுத்துப் பேசினதும் இல்ல”

“அப்பா கூடத்தானே இருக்க?”

“இல்ல சார். எனக்கு 17 வயசான போது படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறிட்டேன். எங்கம்மா செத்ததுக்குப் போனதோட சரி. படிப்ப முடிச்சேன். சாப்ட்வேர்ல வேலை கிடைச்சது.”

“படிப்புக்கு யாரு காசு கொடுத்தா?”

“பேங்க்ல கடன் வாங்கினேன். எங்க சித்தப்பாதான் கேரண்டி கையெழுத்து போட்டாரு”

“அப்பா எங்க இருக்காரு?”

“வீட்டுல தனியா இருக்காரு. கையில நிறைய காசு இருக்கு”

“இப்ப உங்க பிரச்னை?”

“என்னோட சித்தப்பா பொண்ணு மாலாவுக்குக் கல்யாணம் வச்சிருக்காங்க. மாலாவும், நானும் நெருக்கமான தோழிகள். எங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் கிடையாது. என் லோனுக்கு சித்தப்பாதான் கேரண்டி கையெழுத்துப் போட்டாரு. இந்தக் கல்யாணத்துக்கு நான் போயே ஆகணும். கல்யாணத்துக்கு எங்கப்பா நிச்சயமா வருவாரு. அவர நேரில் பார்த்தா கொலை பண்ணிருவேனோன்னு பயமா இருக்கு”

“இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு வர முடியுமா?”

“வர்றேன் சார்”

மதியம் வெளியே கிளம்பிய போது ஆபிஸ் வாசலில் பூக்கடை முளைத்திருந்தது.

“எப்படிம்மா அரைமணி நேரத்துக்குள்ள கடையைப் போட்டீங்க?”

“அரை மணி நேரத்திற்குள் ஆயிரம் பிரபஞ்சங்களைப் படைப்பவள் நான்”

தாயை விழுந்து வணங்கினேன்.

“ராதிகாவின் தந்தையின் மனதிலும் இதே அளவுக்கு வெறுப்பு இருக்கிறது. ராதிகா தன் தந்தையைப் பார்த்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால் இருவரின் வாழ்க்கையும் சிக்கலாகி விடும். அவளை பார்க்கும்போது உன் மனதில் தோன்றுவதைச் சொல்லி விடு”

மாலையில் என்முன் படபடப்பாக இருந்த ராதிகாவைப் பார்த்தேன்.

“நீ யாரையாவது லவ் பண்றியாம்மா?”

“உங்களுக்கு எப்படி தெரியும்.”

“கேள்விக்குப் பதில்”

“ஆமா, சார். என்கூட வேல பாக்கற ரகுவ. ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்”

“ரகுவுக்குப் பெரிய கண்டம் இருக்கு”

“ஐயையோ! உலகத்துல எனக்கு இருக்கற ஒரே உறவு ரகுதான். அவனுக்கு ஏதாவது ஆச்சின்னா தற்கொலை பண்ணி செத்திருவேன்.”

நான் மவுனமாக இருந்தேன்.

“ஏதாவது பரிகாரம்...”

“இருக்கு. ஆனா உன்னால முடியாது”

“உயிரை கொடுத்தாவது செய்யறேன்”

“அப்படின்னா உன் சித்தப்பா பொண்ணு கல்யாணத்துக்குப் போ. உங்கப்பாவும் வருவாரு. அவருட்ட நாலு வார்த்தை பேசு”

“நீங்க வேற? அந்தாள கொலை பண்ணாம இருந்தாப் பத்தாது?”

“ரகுவுக்கு ஆபத்து வந்தா பரவாயில்லையா”

“இப்ப நான் என்னதான் செய்யறது?”

“கல்யாணத்துக்குப் போ. அப்பாட்ட பேசு”

ராதிகா சென்றவுடன் நானும் கிளம்பினேன். காருக்கருகில் பூக்காரி நின்றிருந்தாள்.

“என்ன நடக்குமோ... பயமாக இருக்கிறது”

“நல்லதே நடக்கும். அங்கே பார்”

திருமணத்திற்கு முதல் நாளே சென்றாள் ராதிகா. தன் தந்தை வந்தது தெரிந்தவுடன் அவர் இருக்கும் அறையைக் கேட்டு அங்கு சென்றாள். தந்தை தனியாகத்தான் இருந்தார்.

தந்தையின் தோற்றத்தைப் பார்த்த மாத்திரத்தில் ராதிகாவின் மனதில் இருந்த கோபம் போய் விட்டது. அவருக்கு எழுபது வயது கூட ஆகியிருக்கவில்லை. ஆனால் மிக தளர்ந்து போயிருந்தார். நரைத்த முடி, ஒல்லியான தேகம், ஒட்டிய கன்னம், ஆடிக் கொண்டேயிருந்த தலை - ராதிகாவின் மனதில் ஒரு ஊமை வலி ஏற்பட்டது.

'அப்பா' மிக மென்மையாகத்தான் அழைத்தாள் ராதிகா. அது அவளது தந்தையின் காதில் கேட்டு விட்டது. திரும்பிப் பார்த்தார் திடுக்கிட்டார். எழுந்து நிற்க முடியவில்லை. கீழே விழப் போனவரை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள் ராதிகா. இருவரும் அழுதார்கள்.

“என்ன மன்னிச்சிரு கண்ணு. நான் உங்கம்மாவுக்குச் சரியான புருஷனா இல்ல... உனக்குச் சரியான அப்பனா இல்ல. ஏன் நான் ஒரு மனுஷனாவே இல்ல.

“எனக்கு சின்ன வயசுலே சுகர் வந்திருச்சி. லிவர்ல பிரச்னை. ஒற்றை தலைவலி வேற. பொண்டாட்டியோட உறவு சரியில்ல. நான் வேலை செஞ்ச இடத்துல ஆயிரம் பிரச்னை. என்னை பெரிய கேஸ்ல மாட்டிவிடப் பாத்தாங்க. அதில தப்பிச்சி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி. வாழ்க்கையே வெறுத்துப் போச்சி கண்ணு. அதில உன்னைப் பலி கடா ஆக்கிட்டேன்மா. உன்ன மாதிரி ஒரு தேவதைக்கு அப்பனா இருக்கற தகுதி இல்லாத இந்தப் பாவிய மன்னிச்சிரும்மா. உன் காலத் தொட்டு மன்னிப்பு கேட்டாத்தாம்மா மனசு ஆறும்.”

அப்பா அப்பா என அலறினாள் ராதிகா. உணர்வுகள் கொஞ்சம் சமன்பட்டதும் தந்தையின் காலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு தன் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னாள். ராதிகாவின் தலையைப் பாசத்துடன் தடவிக் கொடுத்தபடி கேட்டுக் கொண்டிருந்தார் தந்தை. ரகுவைப் பற்றிச் சொல்லவே சந்தோஷப்பட்டார் தந்தை.

“உங்கம்மாவோட நகைகள், வீடு, எனக்குச் சொந்தமான நிலம் எல்லாம் எனக்கு அப்புறம் உனக்குத்தான் சேரணும்னு உயில் எழுதி வச்சிட்டேம்மா. வக்கீல் சங்கரன்கிட்ட எல்லா விவரமும் இருக்கு. உன் கல்யாணத்த ஊரே மெச்சற மாதிரி பண்ணுவோம்மா”

ராதிகாவால் அதற்கு மேல் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“ஒரு நிமிஷம் வந்துடறேம்ப்பா” பாத்ரூமுக்கு ஓடினாள். பத்து நிமிடம் விம்மி விம்மி அழுதாள். பின் முகத்தைக் கழுவிக் கொண்டு தந்தை இருந்த அறைக்குத் திரும்பினாள். அங்கே கூட்டமாக இருந்தது. ராதிகாவின் தந்தை கீழே விழுந்து கிடந்தார்.

அவரை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அவர் இறந்து கால் மணிநேரமாகி விட்டது என்றார் டாக்டர்.

“ராதிகா மனதில் இருந்த வெறுப்பு, கோபம் அவளை அழித்துவிடும். அவள் தந்தையின் மனமும் ஒரு நிலையில் இல்லை. இந்த சந்திப்பு நடக்காமல் அவர் இறந்திருந்தால் அவரது அடுத்த பிறப்பு சிக்கலாகி விடும். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது. உனக்கு என்ன வேண்டும் சொல்''

“என்னை எத்தனையோ பேர் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். சிலர் நெஞ்சில். பலர் முதுகில் அவர்கள் மீது எல்லாம் வெறுப்பு இருக்கிறது. அது அன்பாக மாறவேண்டும். அவர்கள் எல்லோரும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ வேண்டும்”

ஏன் பேசி கொண்டே போகிறாய்... நான் சொல்லிக் கொடுத்த பிரார்த்தனை நினைவில் இல்லையா?”

“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”

கண்ணீர் மல்கக் கை கூப்பினேன்.



--அடுத்த வாரம் முற்றும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us