ADDED : பிப் 13, 2025 11:30 AM

இளமை அருளும் தருண கணபதி
தருணம் என்றால் இளமை என்று பொருள். குழந்தைப் பருவத்தை அடுத்து இளமைப் பருவத்தைக் குறிப்பவர் இவர். மேல் வலக்கையில் அங்குசம், நடு வலக்கையில் கரும்பு, கீழ் வலக்கையில் விளாம்பழம், வலக்கையில் தனது உடைந்த தந்தம் ஆகியவற்றைக் கொண்டுள்ளார். மேல் இடக்கையில் பாசம், நடுக்கையில் நெற்கதிர், கீழ் இடக்கையில் நாவற்பழம், இடக்கையில் அப்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளார். வலக்காலை குத்திட்டு, இடக்காலை மடக்கி நீட்டியுள்ளார். தாமரை இருக்கையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
தியான சுலோகம்
பாசாங்குசாபூப கபித்த ஜம்பூ ஸ்வதந்த சாலீக்ஷு மபி ஸ்வஹஸ்தை: !
தத்தே ஸதா யஸ் தருணாSருணாப: பாயாத் ஸ யுஷ்மாந் தருணோ கணேச: !!
ய: - எந்த தேவனானவர்
ஸ்வஹஸ்தை: - தமது திருக்கரங்களில்
பாச - பாசம் எனும் ஆயுதம்
அங்குச - அங்குசம் எனும் ஆயுதம்
அபூப - அப்பம்
கபித்த - விளாம்பழம்
ஜம்பூ - நாவற்பழம்
ஸ்வதந்த - தனது ஒடிந்த தந்தம்
சாலீ - நெற்கதிர்
இக்ஷு - கரும்பு
அபி - ஆகியவற்றை
தத்தே - தாங்கி விளங்குகிறாரோ
தருணாS ருணாப: - நண்பகல் சூரியனைப் போன்ற மேனி நிறம் கொண்டவரோ
தருண: - இளமையானவரோ
ஸ: - அந்த
கணேச: - கணேசர் ஆனவர்
ஸதா - எப்பொழுதும்
யுஷ்மாந் - உங்களை
பாயாத் - காக்கட்டும்.
பாசம் & அங்குசம்: உயிரின் ஆணவ மலத்தை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தைக் குறிப்பது அங்குசம்.
அப்பம்: இனிப்பு. வீடுபேறான முக்தியைக் குறிக்கிறது.
நாவற்பழம்: உயிரை மூடியுள்ள பாசங்களை, இறைவன் தன் அருளால் நீக்குவதைக் குறிப்பது.
உடைந்த தந்தம்: துாய்மையையும் உறுதியையும் துணையாகக் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.
விளாம்பழம்: பிறவியாகிய பிணியைப் போக்குபவர் கணபதி என்பதை இப்பழம் காட்டுகிறது.
கரும்பு: உயிர்களின் விருப்பங்களைக் குறிக்கிறது. உயிர்கள் வேண்டுபவற்றை அருள்பவர் கணபதி என்பதை கரும்பு காட்டுகிறது.
நெற்கதிர்: வளத்தைக் குறிப்பது. கணபதி தன்னை வழிபடுவோருக்குப் பல நலன்களையும் அருள்பவர் என்பதைக் குறிப்பது.
பலன்: இவரை வழிபடுவதால் இளமை, அழகு, உடல் வனப்பு, பொலிவு, தடை நீங்கல், செயல் நிறைவேற்றம் ஆகியவை கிடைக்கும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்