
அரசியல் பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொன்னதைக் கேளுங்கள்.
'வெள்ளைக்காரனை வெளியேற்ற அஹிம்சை மூலம் நம்மவர்கள் எதிர்த்தனர். அதுவரை நமக்குள் ஒற்றுமை இருந்தது. அதன் பின் ஒற்றுமை மறைந்தது. ஜாதி, மதம், கட்சி பாகுபாடுகளால் ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டும், போட்டியிட்டுக் கொண்டும் இருக்கிறோம். விளைவு... நாட்டின் வளர்ச்சி பாழாகிறது.
சமுதாயத் தலைவர்கள் அந்தந்த சமுதாய மக்களிடம், 'உங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்' எனச் சொல்லி மற்ற சமுதாயத்தினரோடு இணக்கம் இல்லாமல் செய்கிறார்கள். ஓட்டு வாங்குவதே நோக்கம் என கட்சிகள் மாறி விட்டன. வெளியில் பார்த்தால் ஒருமைப்பாட்டு கோஷம் நடக்கிறது. ஆனால் எல்லாம் வெறும் 'ஷோ' தான்.
வெள்ளைக்காரன் என்னும் எதிரி மீதுள்ள கோபத்தால் அன்று ஒன்று சேர்ந்தோமே தவிர அன்பால் நாம் ஒன்று சேரவில்லை. இப்போது அசுரத்தனமாக நடந்து நமக்கு நாமே எதிரியாகி விட்டோம். இதன் முடிவு என்னாகுமோ தெரியவில்லை. நாட்டுக்காக பாடுபடுவதாகச் சொல்லும் கட்சித் தலைவர்கள் இந்த அபாயத்தை கண்டு கொள்வது இல்லை.
வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றினர். அது போலத் தான் இப்போதுள்ள தலைவர்களும் மெஜாரிட்டி, மைனாரிட்டி என சமுதாயத்தை பிரித்து வைத்து அரசியல் நடத்துகிறார்கள். எது வேண்டுமானாலும் செய்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள்'
இது நேற்றைக்கு யாரோ ஒருவர் பேசியதல்ல. எத்தனையோ ஆண்டுக்கு முன்பே காஞ்சி மஹாபெரியவர் பேசியது என்பதை மறவாதீர்கள். எப்பேர்ப்பட்ட தொலைநோக்கு சிந்தனை உள்ளவர் அவர்... அரசியலில் இன்று நடப்பதை அன்றே சொன்னார் மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* வாழ்வில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரத்தை தரிசிப்பது அவசியம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com