sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 16

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 16

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 16

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 16


ADDED : பிப் 05, 2025 01:25 PM

Google News

ADDED : பிப் 05, 2025 01:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வ.உ.சிதம்பரனார்

சிதம்பரனாரின் வணிகத்தைக் குலைக்க ஆங்கிலேயர்கள் தங்களின் சரக்குக் கப்பலில் கட்டணத்தை வெகுவாகக் குறைத்தனர். அதேபோல அரசுக் கப்பலில் பயணக் கட்டணமும் பாதியானது. இதை அறிந்த சிதம்பரனார் தன் கப்பலில் பயணிப்பவர்களிடம், 'இது நம்மை ஏமாற்றும் தந்திரம். குறுக்கு வழிகளால் நம்மை பொருளாதார ரீதியாக வெற்றி கொண்டபின், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட வரி, கட்டாய வசூல் மூலமாக மொத்தமாக வசூலிப்பார்கள். இந்த துாண்டிலில் சிக்காதீர்கள்' என எச்சரித்தார். உண்மையை புரிந்து கொண்ட பல பயணிகள் தொடர்ந்து சுதேசி கப்பலையே பயன்படுத்தினர்.

இதனால் வெகுண்ட ஆங்கிலேயர், 'இலவச பயணம்' என இன்னொரு அதிரடியை அறிவித்தனர். அதுமட்டுமல்ல, தம் கப்பலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பயணிகள் அனைவருக்கும் இலவச பரிசுகளையும் வழங்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுப் பணியாளர்கள் யாரும் சுதேசி கப்பலில் பயணிக்கக் கூடாது; அரசு கப்பலில்தான் பயணிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

இதனிடையே கப்பல் தொழிலோடு, மக்கள் நலன் சார்ந்த தேசிய இயக்கங்களிலும் பங்கு கொண்டார் சிதம்பரனார். குறிப்பாக 1908 பிப்ரவரியில், மதுரா கோட்ஸ் எனப்படும் 'கோரல் மில்' ஆலைத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தார். தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊக்குவித்தார். தொழிலாளர்களும் அதற்கு ஒத்துழைக்க, ஒன்பது நாள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு நிர்வாகம் அடிபணிந்தது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, குறிப்பிட்ட நேரம் வேலை, ஞாயிறு விடுமுறை ஆகிய சலுகைகளைப் பெற்றுத் தந்தார். இந்தச் செய்தி உலகெங்கும் பரவ ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களும் போராட்டம், வேலை நிறுத்தம் வாயிலாக சலுகை பெற்றனர்.

ஆனால் கப்பல் தொழிலில் ஆங்கிலேயர் சலுகை, இலவசம் என அளிக்க, இதற்காகவே அலைபவர்கள் சுதேசிக் கப்பலை புறக்கணித்தனர். பின்னாளில் பாதகம் விளைவிக்கக் கூடிய சலுகைகளை அனுபவித்தவர்களில் பலர் பணக்காரர்கள். அவர்களும் இந்த அற்ப அன்பளிப்பு, கட்டணக் குறைப்புக்காகவும் ஆசைப்பட்டு ஆங்கிலேயக் கப்பலுக்கு சோரம் போனார்கள். அவர்களைப் போலவே, லாப நோக்கம் கொண்ட, அரசுக்கு எதிராகப் போய் தம் சலுகைகளை இழக்க விரும்பாத பங்குதாரர்கள் சிதம்பரனாருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

எல்லாவற்றிற்கு மேலாக சிதம்பரனாரிடம் 'ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறோம், சுதேசி கப்பல் நிறுவனத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று ஆங்கிலேயர் பேரம் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், 'இந்திய விடுதலையே என் லட்சியம். அதற்கு விலை போக மாட்டேன்' என சொன்னார் சிதம்பரனார்.

புதுப்புது உத்திகளால் ஆங்கிலேயரின் தொந்தரவு அதிகரித்தது. அவரது கப்பல் எங்கள் கப்பல் மீது மோத வந்தது என பொய் வழக்கு தொடுத்தனர். ஆனால் மிகச் சிறந்த வழக்கறிஞரான சிதம்பரனார் திறம்பட வாதாடி குற்றச்சாட்டு அர்த்தமற்றது என நிரூபித்தார். ஆனால் நாளடைவில் வருமானம் குறைந்து பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு. ஒரு பக்கம் ஆங்கிலேயரின் புதுப்புது சதிகள், மற்றொரு பக்கம் பங்குதாரர்களின் அவநம்பிக்கை, பயணிகளின் பேராசை எல்லாமாகச் சேர்ந்து கப்பலை ஒரேயடியாக வறுமைக் கடலில் மூழ்கடித்தன.

1908ல் சிதம்பரனாரின் செல்வாக்கு இழக்கச் செய்யும் வகையில் அவரை கைது செய்தனர். இதற்கு அவர் பங்கேற்ற விடுதலைப் போராட்டங்களை ஆதாரமாகக் காட்டி, 'தேச துரோக' வழக்கு பதிந்தனர். முதலில் சிதம்பரம் அடுத்து கண்ணனுார் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர். கைது செய்ததும், தீர்ப்பு வழங்கியதும் என்னவோ அரசியல் காரணமாகத்தான். ஆனால் அவரை அரசியல் கைதியாக அல்லாமல், பெருங்குற்றம் செய்த, ஆயுள் தண்டனை பெற்ற கைதியாக நடத்தினர். அது மட்டுமல்ல அவருக்கு அளிக்கப்பட்ட வேலைகளும்

மிகக் கடுமையாக இருந்தன. 'எங்களுக்கே சவால் விட்டாய்' என்பது போல அவரைப் பெரிதும் வருத்தினர்.

நுகத்தடியை சிதம்பரனார் கழுத்தில் பூட்டி, அவரை செக்கு இழுக்க வைத்தனர். கை கொட்டி பரிகாசமும் செய்தனர். சிதம்பரனார் புன்னகை மாறாதவராக, பாரதத்தாயாக அந்த செக்குக் கொப்பரையை கருதினார். ஆனால் இதுபோன்ற தண்டனையால் அவரது உடல் நலிவுற்றது. குரூர சந்தோஷிகளான ஆங்கிலேயர்கள் அவருக்கு அந்த தண்டனைகள் போதும், எனக் கருதி 1912ல் விடுதலை செய்தனர்.

இதில் வேதனை என்னவென்றால், சிறைக்குள் அவர் நுழையும் வரை கூடவே வந்து ஆதரவு அளித்த யாரும், விடுதலையான பிறகு வரவேற்க வரவில்லை என்பதுதான். அவருடைய இனிய நண்பரான சுப்ரமணிய சிவா மட்டும் வந்தார்.

இதற்குள் 1911ல் அவருடைய சுதேசி கப்பல் நிறுவனம் கலைக்கப்பட்டது. எஸ்.எஸ். காலியா கப்பல் பிரிட்டிஷ் நிறுவனத்துக்குச் சொந்தமானது. பிற அசையா சொத்துகள் எல்லாம் ஏலம் விடப்பட்டு கடனாளிகளுக்கும், பங்குதாரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

இந்த உண்மையை அறிந்த மனவலியுடன், தன் சொந்த ஊருக்கே போனால் புதுத்தெம்பு பெறலாம் எனக் கருதினார். ஆனால் விடுதலை பெற்ற பிறகு திருநெல்வேலிக்குப் போகக் கூடாது என ஆங்கிலேயர் தடை விதித்தனர். அவருக்கு இப்போது சென்னையே தஞ்சமளித்தது. 1920ல் மனைவி, இரண்டு மகன்களுடன் வந்த சிதம்பரனார் வாழ்வாதாரத்துக்காக, மளிகைப் பொருட்கள், மண்ணெண்ணெய் விற்பனைக் கடையை ஆரம்பித்தார்.

நடுவே, 1915 - 1920 வரை காந்திஜியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார் சிதம்பரனார். இவருக்கு உதவுவதற்காக தென்னாப்பிரிக்க இந்தியர்கள் பணம் சேகரித்து காந்திஜி மூலமாக அனுப்பி வைத்தனர். ஆனால் அந்தத் தொகை சிதம்பரனாரை வந்தடையவில்லை என்றும் அந்தப் பணம் எங்கே போயிற்று என்ற மர்மம் தெரியவில்லை. இதனால் வரவேண்டிய தொகை, வராமலேயே வந்ததாகக் கணக்கில் காட்டப்படும் கள்ளத்தனத்தை 'காந்தி கணக்கு' என சொல்ல ஆரம்பித்தனர்.

ஆனால் 1916 பிப்.2 அன்று தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், 'ரூ.347, அணா 12, ஸ்ரீமான் காந்தியிடமிருந்து வந்துள்ளது' எனக் குறிப்பிட்டிருக்கிறார் சிதம்பரனார். பிறகு 1929ல் துாத்துகுடிக்கு வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டார்.

அங்கே தமிழ்க் கட்டுரைகள் பல எழுதியதோடு அவற்றைப் புத்தகங்களாகவும் வெளியிட்டார். 1935ல் திருக்குறளில் அறத்துப்பால் பகுதிக்கு உரை எழுதினார். ஆனால் 2008ல்தான் அந்த உரை புத்தகமாக வெளியானது.

வருமானம் வெகுவாகக் குறைந்து போக, வறுமை அவரை ஆட்கொண்டது. அதே சமயம் பாரதம் விரைவில் சுதந்திரம் பெற்று விடும் என ஆவலுடன் காத்திருந்தார் சிதம்பரனார். ஆனால், அதற்கு முன்பாக நவ.18, 1936ல் அன்று துாத்துகுடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் ஆங்கிலேய எதிர்ப்புத் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த போது மரணம் அவரைத் தழுவியது.

ஆங்கிலேயரை எதிர்ப்பதில் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்திய சிதம்பரனார், பகையாளியான ஆங்கிலேயரால் மட்டுமல்லாமல், பங்காளிகள் போன்ற உறவுகள், பேருக்கு அன்பு காட்டும் நட்புகள், அற்ப ஆதாயத்துக்காக தர்மத்தை விட்டு நழுவிய அயோக்கியர்களால் அநியாயமாக வஞ்சிக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.



- அடுத்த வாரம்: மதன்லால் திங்கரா

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us