ADDED : ஜூன் 11, 2026 10:50 AM

நல்லதே நடக்கும்
அவர் என்னைப் பார்க்க வருவதற்கு முன்பே அவரைப் பற்றிய செய்திகள் வந்துவிட்டன. பெயர் மகேஸ்வரன். வயது 55. பெரிய தொழிலதிபர். கோடீஸ்வரர். நாட்டின் சக்தி வாய்ந்த தொழிலதிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர். அவர் ஏன் என்னைப் பார்க்க வர வேண்டும்?
மகேஸ்வரன் கம்பீரமாக இருந்தார். நல்ல நிறம். நெற்றியில் திருநீறும் குங்குமமும் அவரது நம்பிக்கையை அழுத்தமாகச் சொன்னது. கூடவே வந்த உதவியாளர்களை வெளியில் போகச் சொல்லி விட்டு ரகசியக் குரலில் பேசினார்.
“அடுத்த வாரம் எங்க சங்கத்தின் தேசியத் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருது. நான் களத்துல இருக்கேன். எனக்கு நிறைய ஆதரவு இருக்கு. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஆளு சங்கத் தலைவராகி 30 வருஷமாச்சு. அதுக்காக மட்டும் நான் தேர்தல்ல நிக்கல. ஏதோ என்னால முடிஞ்ச நல்லதை செய்யலாம்னு இருக்கேன். தலைவர் பதவி ரொம்ப சக்தி வாய்ந்தது. மத்திய அமைச்சர்களக்கூட சுலபமா பார்க்கலாம்'' எனப் பேசிக் கொண்டே போனார்.
“இதுல நான்...''
“பச்சைப்புடவைக்காரிகிட்ட எனக்காக மனசாரப் பிரார்த்தனை பண்ணிக்கங்க. நான் தலைவராயிட்டா நீங்க கையக் காட்டற அறக்கட்டளைக்கு அஞ்சு கோடி நன்கொடை தர்றேன். உங்களுக்குத் தனியா ஒரு கோடி தர்றேன். உங்க மனசுக்குப் பிடிச்ச நல்ல காரியத்த நீங்க சுதந்திரமா செய்யலாம்ல? எந்த கோயிலுக்கு எத்தனை கோடிக்குத் திருப்பணி செய்யச் சொல்றீங்களோ செய்யறேன். நான் தலைவராகணும் சார்.”
மகேஸ்வரன் சென்றுவிட்டார். என் மனம் ஒரு நிலையில் இல்லை. அவர் தரப்போகும் பணத்தை எந்த அறக்கட்டளைக்குக் கொடுக்கலாம் என்பது வரை யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அன்று மாலை பச்சைப்புடவைக்காரியின் கோயிலில் அருமையான தரிசனம். வெளியே வரும்போது ஒரு பிச்சைக்காரியைப் பார்த்தேன். விலகிச் செல்ல முயன்றேன்
“ஏதோ பிரச்னை போல் தெரிகிறதே!” தாயே எனக் கதறியபடி காலில் விழுந்தேன்.
“கவலைப்படாதே! நல்லதே நடக்கும்”
தாய் மறைந்து விட்டாள். அன்றிரவே மகேஸ்வரனுக்குப் போன் செய்து பச்சைப்புடவைக்காரி பச்சைக் கொட்டி காட்டிவிட்டாள் என்றேன். ஒரு வாரம் ஒரு நிமிடத்தில் ஓடிவிட்டது. வெள்ளி அன்று மாலை என் அலைபேசி அலறியது.
“நம்ப வச்சிக் கழுத்தறுத்திட்டா” மகேஸ்வரன் கத்தினார்.
“தோத்துட்டேன் சார். அதுவும் ஒரு ஓட்டு வித்தியாசத்துல. என்னோட ஆதரவாளர்கள் ரெண்டு பேரு ஓட்டு போடறதுக்காக டில்லிக்கு பிளைட்டுல வரதா இருந்தது. அவங்க பிளைட் ஆறு மணி நேரம் லேட். அதுக்கப்பறம் அவங்க டில்லி டிராபிக்ல தேர்தல் நடக்கற இடத்துக்கு வரதுக்கு முன்னால எல்லாம் முடிஞ்சிருச்சி. அவங்க நேரத்துக்கு வந்திருந்தா ஜெயிச்சிருப்பேன். இது பச்சைப்புடவைக்காரி திட்டமிட்டுச் செஞ்ச சதி” திகைத்தேன்.
“நீங்க ஒரு டுபாக்கூரு. உங்க பச்சைப்புடவைக்காரி உங்களவிடப் பெரிய டுபாக்கூரு. உங்கள நம்பினேன் பாருங்க...'' நான் பதில் சொல்வதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அன்று பட்டினி கிடந்து கோயிலுக்குச் சென்றேன்.
கோயில் வாசலில் அதே இடத்தில் பிச்சைக்காரி வடிவில் நின்ற பச்சைப் புடவைக்காரி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“என் மேல் கோபமா?”
“கொத்தடிமைக்குக் கோபித்துக் கொள்ளும் உரிமை கிடையாது. அதே சமயத்தில் நீங்கள் வாக்குத் தவறவும் கூடாது”
“நான் வாக்கு தவறினேனா?”
“ஆமாம். அன்று நல்லதே நடக்கும் எனச் சொன்னீர்கள். நீங்கள் சொன்னதை அந்த மனிதரிடமும் சொல்லிவிட்டேன். இப்படியாகி விட்டதே”
“அவன் தேர்தலில் வெற்றி பெறுவான் என சொன்னேனா?”
“தேர்தலில் தோற்பது நல்லதா என்ன?”
“மகேஸ்வரன் நல்லவன். அவனுக்கு நல்லதைத் தான் கொடுத்திருக்கிறேன். பதவி ஆசையில் மூழ்கி இருந்ததால் அவனுக்குப் புரியவில்லை. அவனை விடு, உனக்கு என்ன கொள்ளை எனக் கேட்கிறேன். அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும் என்பதைத் தாண்டி வேறு பிரார்த்தனையே வேண்டாம் என உனக்குத் தெரியாதா? அவன் காட்டிய கோடிகளில் மயங்கி அவன் வெற்றிக்காகப் பிரார்த்தித்தாய். இப்போது அவனைப் போலவே என்னிடம் கோபப்படுகிறாய்”
கதறியபடி அவள் கால்களில் விழுந்தேன்.
“அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு நல்லது செய்யலாம் என்று...”
“அதை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் மூலம் கோடிகள் கொடுக்கப்பட்டால் உனக்கு அகந்தை வந்து விடும்” கண்ணீர் மல்க கை கூப்பினேன்.
“ஒரு வருடம் கழித்து நீ அவனைச் சந்திப்பாய். அப்போது என்ன நடக்கும் எனக் காட்டுகிறேன் பார்”
சென்னையில் ஒரு பெரிய மனிதர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மணமக்களுக்குப் பரிசு கொடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தேன். என்னை நோக்கி மகேஸ்வரன் வந்தார்.
“பச்சைப்புடவைக்காரி தெய்வம், சார். புத்தி கெட்டதனமா என்னல்லாமோ பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க. ப்ளீஸ்...'' அவரைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போனேன்.
“நான் எவ்வளவு பெரிய கண்டத்துலருந்து தப்பிச்சிருக்கேன் தெரியுமா? தொழிலதிபர்கள் சங்கத்துல பெரிய அளவுல ஊழல் நடந்திருக்கு. போன வருஷம் நான் தலைவராயிருந்தா என்மேல சி.பி.ஐ., கேஸ் வந்திருக்கும். என் பேரு நாறியிருக்கும். என்னைத் தேர்தல்ல தோக்கடிச்சானே அவன் ஒரு மாசம் ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கான் சார். இன்னும் எத்தனை வருஷம் அந்த கேஸ் நடக்கப் போகுதோ தெரியல. பாவம், அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. நான் தலைவராகியிருந்தா அதெல்லாம் எனக்கு நடந்திருக்கும். பச்சைப்புடவைக்காரி என்னைப் பெத்த தாய், சார். இல்லாட்டி அந்த தேர்தல்ல என்னைத் தோக்க வச்சிக் காப்பாத்தியிருப்பாளா?” என நெகிழ்ந்தார் மகேஸ்வரன்.
“அவன் நல்லவன். அதனால்தான் அவனுக்குத் தற்காலிக வெற்றியைக் கொடுக்கவில்லை. நிரந்தரமான நிம்மதியைக் கொடுத்தேன். உனக்கு என்ன வேண்டும்?”
“வெற்றி, தோல்வி, வலி, வேதனை, இன்பம், துன்பம் என நீங்கள் எதைக் கொடுத்தாலும் அதை நன்றியுடன் ஏற்கும் மனம் வேண்டும். யாருக்காகவும் எப்போதும் எதையும் கேட்காத மனம் வேண்டும் தாயே” என்றேன்.
“ஆசையைப் பாரேன்! ஆயிரம் பிறவிகள் தவம் செய்து பெற வேண்டிய வரத்தை வெறும் வாய் வார்த்தையால் பெறலாம் என நினைக்கிறாயோ?” என்றாள் பச்சைப்புடவைக்காரி.
“அந்த தவத்தை இந்தக் கணமே தொடங்குகிறேன். என்னை வாழ்த்துங்கள் தாயே!”
கையில் இருந்த பிச்சை பாத்திரத்தால் என் தலையில் தட்டி விட்டு மறைந்தாள் பச்சைப்புடவைக்காரி.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
