தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 18

பெண்பிள்ளை ரகசியம் - 18

பெண்பிள்ளை ரகசியம் - 18


ADDED : ஜூன் 11, 2026 10:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 10:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரிசடையைப் போலே

கிருஷ்ணவேணியும், அமிர்தமும் நீண்ட நேரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் குடும்ப விஷயத்தை இப்படி அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுண்டு.

“எங்க பக்கத்து வீட்டு ரேணுகா எதிர்த்தாப்புல இருந்து நம்மையே ரொம்ப நேரமா பார்த்துட்டே இருந்தா, இப்பதான் அவங்க கோஷ்டி எழுந்து போச்சு”

“உற்றுப் பார்த்தா தப்பு இல்லை. ஒட்டு கேட்டாத்தான் தப்பு” எனச் சிரித்தார் அமிர்தம்.

“திரிசடை போல ராவணனோட அந்தரங்கத்தையா நாம பேசினோம்? நம்ம வீட்டு விஷயத்தை தானே பேசினோம்” என்றார் கிருஷ்ணவேணி.

“ஆஹா! பெண்பிள்ளை ரகசியத்துக்குள்ள தாவிடுறீங்களே! இன்று என்ன வாக்கியம்?”

“இன்னிக்கு 'அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே' பார்க்க போறோம். ராமானுஜரும், சீடர்களும் ஆர்வமாக கேட்கத் தொடங்கினர். இந்த திரிசடை அரக்கி மூன்று சடைகளை பின்னி இருப்பாள். அதனால் தான் அவளுக்கு திரிசடைன்னு பெயர் வந்தது”

“சரி, அவள் ஏன் ராவணனுடைய அந்தரங்கத்தை சீதைக்கு சொன்னாள்”

“அசோகவனத்தில் சீதையை சமாதானப்படுத்திய மந்திரமாக அவளது வார்த்தைகள் தான் இருந்தது. விளக்கமா சொல்றேன் கேளுங்க. திரிசடை அரக்கியாக இருந்தாலும் தாயுள்ளம் கொண்டவள். ராவணனின் தம்பி விபீஷணனின் மகள். விபீஷணன் போல இவளும் நல்லவள். சீதைக்கு அசோக வனத்தில் கிடைத்த ஆறுதல் இவள் தான். இது ராமாயணம் சுந்தரகாண்டத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி. சீதையை ராவணன் சிறை பிடித்துச் சென்ற பிறகு அரக்கியரை காவலுக்கு வைத்தான். சீதையின் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதம் பெற வேண்டும் என ராவணன் அவர்களுக்கு கட்டளையிட்டான். அதற்காக எல்லா அரக்கிகளும் பலவிதமாக பேசி முயற்சி செய்தனர். ஆனால் சீதை எதற்கும் அசையவில்லை. ஒரு கட்டத்தில் அரக்கிகள் பொறுமை இழந்து மிரட்டத் தொடங்கினர்.

கணவனை பிரிந்த துயரம் ஒருபுறம், அரக்கியரின் அச்சமூட்டும் பேச்சு ஒருபுறம் தனக்கு யாரும் உதவிக்கு இல்லாத நிலை என சீதை துவண்டு போயிருந்தாள். உயிரை மாய்க்க எண்ணிய அந்த நேரத்தில் திரிசடை, தான் கண்ட கனவை அரக்கிகளிடம் சொல்வது போல சீதை இருக்கும் இடத்தை நெருங்கி வந்தாள். தான் கண்ட கனவைக் கூறி சீதைக்கு நம்பிக்கை ஏற்படுத்தினாள். ராவணன் சிவப்பு நிற ஆடையை அணிந்து, பத்து தலைகளிலும் எண்ணெய் பூசிக் கொண்டு கழுதை மீதேறி எமன் இருக்கும் திசை நோக்கி போவதாகவும் அவனின் மகன்கள், உறவினர்கள் சென்ற வழியிலேயே செல்வதாகவும் அப்படிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வராதது போலவும் கனவு கண்டேன் என்றாள்.

இதைக் கேட்ட அரக்கிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின் ராவணன் வளர்த்த யாக குண்டத்தில் அக்னிக்கு பதிலாக கரையான் புற்று வளர்வதை பார்த்ததாகவும், அவனுடைய அரண்மனை இடி தாக்கி நொறுங்குவது போலவும், பெண் யானைக்கு மதம் பிடித்தது போலவும், இடியைப் போல முரசு முழங்குவது போலவும், வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இலங்கையில் கீழே விழுவது போலவும், சூரியன் இரவில் உதிப்பது போலவும் கனவு கண்டேன். இலங்கையே அழிவது போலவும், கோட்டை, மதில்கள் தீப்பற்றி எரிவது போலவும், மங்கள கலசம் கீழே விழுந்து நொறுங்குவது போலவும், எங்கும் இருள் சூழ்ந்து பேரச்சம் ஏற்பட்டது போலவும் கனவு கண்டதாகச் சொன்னாள்.

அத்துடன் வெண்ணிற ஆடையை உடுத்தியபடி ராமன் தங்க ரதத்தில் வருவதையும், அவன் சீதையை ஒரு யானையின் மீது ஏற்றிக் கொண்டு செல்வதையும் பார்த்ததாகச் சொன்னாள். அதனால் ராமன் நிச்சயம் ராவணனை அழித்து சீதையை அழைத்துச் செல்வான். அதனால் உயிருடன் இருக்க வேண்டுமானால் சீதையிடம் சரணடைந்து மன்னிப்பு கேளுங்கள் என அரக்கியரை பார்த்து அறிவுறுத்தினாள் திரிசடை.

மற்றொரு சமயம் இந்திரஜித் ஏவிய நாக பாணத்தால் ராமன், லட்சுமணன் மயக்கமடைந்த பிறகு அரக்கர்கள் சீதையை போர்க்களத்திற்கு கூட்டிச் சென்று இருவரும் இறந்ததாக சொன்னார்கள். அதைக் கேட்ட சீதை பெரும் துன்பமடைந்து கண்ணீர் விட்டாள். உடனே திரிசடை உண்மை நிலையை சீதைக்கு புரிய வைத்தாள். ராமன், லட்சுமணன் மயக்கமடைந்து உள்ளார்களே தவிர அரக்கர்களின் பாணத்தால் இறந்து விடக் கூடியவர்கள் அல்ல என சீதையை தேற்றினாள். விருப்பமில்லாத பெண்ணை ராவணன் தொட்டால் அவனுடைய பத்து தலைகளும் வெடித்துச் சிதறும். இப்படி ஒரு சாபம் உள்ளது என ராவணனின் அந்தரங்க விஷயத்தை சொல்லி சீதை நம்பிக்கையுடன் ராமனின் வருகையை எதிர்பார்க்கும்படி வழிகாட்டினாள்.

அவளைப் போல நான் தாயாருக்கு எந்த அந்தரங்கத்தையும் சொல்லி நம்பிக்கையுடன் இருக்க வைக்க முயற்சி செய்யவில்லையே சுவாமி. அதனால் நான் போகிறேன் என்றாள் பெண்பிள்ளை” என விளக்கிய கிருஷ்ணவேணியை இடைமறித்தார் அமிர்தம்.

“கிருஷ்ணவேணிம்மா... என் மனசில இருக்கிற சங்கதியை நானும் சொல்லிடுறேனே! திரிசடை அப்பப்ப நல்ல வார்த்தை சொல்லி ராமன் வருவான் என நம்பிக்கை ஊட்டியது போல நந்தனாரை சிதம்பரம் வரவழைத்த சிவனின் நம்பிக்கையான வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வருது எனக்கு”

“நந்தியே திரும்பி சிவ தரிசனம் செய்ய வழி விட்டதாகச் சொல்வார்களே அந்த நந்தனாரா?” எனக் கேட்டார் கிருஷ்ணவேணி.

“ஆமா, அவரே தான். அது நடந்தது திருப்புன்கூரில். சோழநாட்டில் ஆதனுாரில் பிறந்தவர் நந்தன். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சிவனை பக்தியுடன் வணங்கியவர். குலத்தின் பெயரால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. ஒரு சமயம் திருப்புன்கூரில் இருக்கும் சிவனை தரிசிக்க நந்தனுக்கு ஆசை இருந்தது. கோயிலுக்கு வெளியே நின்றபடி கருவறையை எட்டி பார்த்தார் நந்தன். நந்தி மறைத்தது.

இதை கண்டதும் 'அப்பனே உன்னைக் காண முடியாமல் மாடு குறுக்கே நிக்குதே' என கலங்கினார். அதிசயமாக நந்தி சற்று விலகி தரிசிக்க வழி விட்டது. இன்று வரை திருப்புன்கூரில் நந்தி விலகியே நிற்கிறது. அதே போல சில நாள் கழித்து 'நந்தா நீ சிதம்பரம் வா' என வானில் மேகங்கள் ஒன்றாக திரண்டு சிவலிங்கமாக காட்சி தந்து அழைத்தார் சிவன்.

சிதம்பரம் போக வேண்டி முதலாளியிடம் பணம் கேட்டார். அவரோ பக்தியை பயன்படுத்தி வேலை வாங்கினாரே தவிர பணம் தரவில்லை. எப்போது கேட்டாலும் நாளை தருகிறேன் என்றார். அது முதல் நந்தனை யாராவது எப்போது சிதம்பரம் போவாய் எனக் கேட்டால் நாளை போவேன் என பதில் சொன்னார். அதனாலேயே அவருக்கு திருநாளைப்போவார் என பெயர் வந்தது. பொறுமை இழந்தார் நந்தன். ஒருநாள் முதலாளியிடம் உதவி செய்யப் போகிறீர்களா இல்லையா என வாக்குவாதம் செய்தார். 'என் நிலத்தை பயிர் செய்து அறுவடை செய்த பிறகு பணம் தருவேன்' என்றார் முதலாளி.

இதைக் கேட்டு வயலுக்குச் சென்ற நந்தன் மயங்கி விழ, சிவன் அற்புதம் நிகழ்த்தி அறுவடைக்கு தயாராக வைத்தார். அதைக் கண்ட முதலாளி பணம் கொடுத்து சிதம்பரம் அனுப்பி வைத்தார். சிதம்பரத்தில் ஊருக்கு வெளியே தங்கினார் நந்தன். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் நடராஜர் தோன்றி, 'என் அடியவன் திருநாளைப் போவார் வந்துள்ளார். அவரை மரியாதையுடன் அழைத்து வாருங்கள்' என்றார். மறுநாள் நந்தனை கோயிலுக்குள் அழைத்து வரும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர், அக்னியில் இறங்கித் திரும்பினால் அழைத்துச் செல்லுங்கள் என உத்தரவிட்டார். அக்னியில் இறங்க சம்மதித்தார் நந்தன். கொழுந்து விட்டு தீ எரிந்தது. கவலையின்றி திருச்சிற்றம்பலம் என சொல்லியபடி இறங்கினார். குளத்தில் இருந்து எழுந்தது போல அழகிய தோற்றத்துடன் வெளிப்பட்டார் நந்தனார். கோயிலுக்குள் இருந்து மணியோசை, 'உள்ளே வா' என நந்தனாரை அழைப்பது போல் இருந்தது. நடராஜரை தரிசித்த பின் தீப்பிழம்பு ஒன்று தோன்றியது. நந்தனார் ஜோதியாக சிவனுடன் ஐக்கியமானார்.

ஒவ்வொரு உயிருக்கும் நம்பிக்கையான வார்த்தை மிக முக்கியம். நந்தனாருக்கு சிவபெருமானைப் போல சீதைக்கு திரிசடை இருந்திருக்கிறாள். அந்த நேரத்தில் சீதைக்கு திரிசடையே கடவுள்” என முடித்தார் அமிர்தம்.

சரி வாங்க, நம்மைப் பார்த்து எப்பவும் கருகும் ரேணுகாவைப் பார்த்து நாலு நல்ல வார்த்தை சொல்லுவோம்” என கிருஷ்ணவேணி வேகமாக நடந்தார்.

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us