தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 16

பச்சைப்புடவைக்காரி - 16

பச்சைப்புடவைக்காரி - 16


ADDED : ஜூலை 30, 2026 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 07:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஞானமே வரம்

அலுவலகத்தில் என் முன் அமர்ந்திருந்த தொழிலதிபர் ராமலிங்கம் ஐநுாறு கோடிக்குச் சொந்தக்காரர். எளிமையான தோற்றம். ஆனால் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை தாங்க முடியவில்லை.

“கையில இருக்கற காசெல்லாம் போட்டு கழுத்து வரைக்கும் கடன் வாங்கி ஓசூர்ல பேக்டரி கட்டிக்கிட்டிருக்கேன். எல்லாம் முடியற நேரம். அரசு அனுமதி கிடைக்க தாமதம் ஆகிட்டிருக்கு.”அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

“பேங்கில் இருந்து மொத்தக் கடனையும் கொடுத்துட்டாங்க. அதுக்கு ஒரு நாளைக்கு வட்டி மட்டும் இருபது லட்சம் ஆகுது. இன்னும் ரெண்டு மாசம் லேட்டாச்சின்னா என் கதை முடிஞ்சிரும். நிஜமாகவே எனக்கு இது வாழ்வா சாவா பிரச்னை. நானும் முடிஞ்ச அளவுக்குப் போராடி பாத்துட்டேன்.

என் மொத்த செல்வாக்கையும் பயன்படுத்திப் பாத்துட்டேன். ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. இது மனுஷ முயற்சியால முடியாது சார். பச்சைப்புடவைக்காரிதான் மனசு வைக்கணும். கொஞ்சம் எனக்காகப் பிரார்த்தனை பண்ணிக்கங்க”

சொல்லிக் கொண்டே வந்தவர் உடைந்து போய் அழத் தொடங்கினார். அறுபது வயது மனிதர் அழுவதைப் பார்க்கச் சகிக்கவில்லை.

குறிப்பிட்ட பிரார்த்தனைகள் கூடவே கூடாது என பச்சைப்புடவைக்காரி கட்டளையிட்டதையும் மீறி ராமலிங்கம் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட வேண்டும் என வேண்டினேன். அன்று மாலையே விமானத்தில் சென்னை செல்ல வேண்டியிருந்தது. விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே கண் அயர்ந்து விட்டேன். சென்னை விமான நிலையத்தில் இறங்கி நடக்கும் போது அலைபேசி ஒலித்தது. ராமலிங்கம்தான்.

“உங்ககிட்ட ஏதோ சக்தியிருக்கு சார். அரசாங்கத்திலிருந்து வர வேண்டிய அனுமதியெல்லாம் வந்திருச்சி. வர வெள்ளிக்கிழமை பேக்டரிய ஆரம்பிக்கறோம். நீங்க அவசியம் வரணும்”

உலகத்தையே படைத்தவள், இந்த மனிதப் புழுவின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்துவிட்டாளே! பச்சைப்புடவைக்காரிக்கு நன்றி சொன்னேன்.

ராமலிங்கம் கட்டியிருந்த பிரமாண்டமான தொழிற்சாலையின் ஆரம்ப விழா கோலாகலமாக நடந்தது. ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. அன்று காலை அலைபேசி மூலம் வந்த செய்தி என்னை அலற வைத்தது. ராமலிங்கத்தின் ஒரே மகன் அமெரிக்காவில் எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டானாம். “சார் மனசை தேத்தவே முடியல. கொஞ்சம் உடனே வாங்க” - ராமலிங்கத்தின் உதவியாளர் கதறினார். நான் கிளம்பினேன்.

“சார், உங்களை கேப்டன் கூப்பிடறாங்க”

காதருகே விமானப்பணிப்பெண்ணின் குரல் கேட்ட பிறகு தான் அதுவரை நான் கண்டது வெறும் கனவு தான் எனத் தெரிந்தது.

“என்னையா? நீங்க தப்பான ஆள...'' என் பெயரையும் மற்ற விவரங்களையும் சொன்னாள் அவள்.

“உங்கள அவங்களுக்குத் தெரியுமாம். ஏதோ அவசரமாம். உடனே வரச் சொன்னாங்க”

அவள் பின்னால் ஓடினேன். விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானத்தின் கேப்டனாக இருந்தது ஒரு பெண். என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். அவள் யார் என புரிந்து கொண்டு அவளை வணங்கினேன்.

அவள் முன்னால் இருந்த பல விசைகளை எனக்குச் சுட்டிக் காட்டினாள். பல வண்ணங்களில் விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

“ஏதாவது ஒரு விசையை அழுத்து”

நான் என் கையை நீட்டினேன். சுள்ளென்று என் கையில் அடி விழுந்தது.

“உனக்கு விமானம் ஓட்டத் தெரியுமா? ஏதாவது ஒன்றை அழுத்தினால் என்னாகும் தெரியுமா? பறந்து கொண்டிருக்கும் விமானம் கீழே விழுந்து சிதறி விடும். இல்லை, திசை மாறிச் செல்லும். இல்லை உள்ளே காற்றழுத்தம் குறைந்து பயணிகள் மூச்சு விட முடியாமல் திணறுவர்”

“தாயே! நீங்கள்தானே விசையை அழுத்தச் சொன்னீர்கள்?”

“உன் மரமண்டைக்குச் சில விஷயங்களைப் புரிய வைக்கவே அப்படி சொன்னேன்”

பச்சைப்புடவைக்காரி என்ன சொல்ல வருகிறாள் என எனக்கு புரியவில்லை.

“ராமலிங்கம் நல்லவன். என் அடியவன். அவனது கர்மக் கணக்கின்படி இந்த வயதில் அவன் தன் பிள்ளையை இழந்து புத்திர சோகத்தில் தவிக்க வேண்டும் என்பது விதி. அதை அவனால் தாங்க முடியாது என எனக்குத் தெரியும். அதனால் அவனுக்குத் தொழிலில் பெரிய கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறேன். அவன் தாங்க முடியாத துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இந்த துன்பம் இன்னும் ஒரு வருடம்தான்.

அதன்பின் அவனுக்குத் தேவையான எல்லாம் கிடைத்து விடும். அவன் கட்ட வேண்டிய வட்டியின் பெரும்பகுதி தள்ளுபடி செய்யப்படும். அந்த தொழில் அமோகமாக நடக்கும். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அவனுடைய மகன் வந்து தொழிலை மேலும் வளர்ப்பான்.

நடுவில் நீ குறுக்கே வந்துவிட்டாய். அவனுக்கு அரசு அனுமதி கிடைக்க வேண்டும் என கேட்டாய். அதை மட்டும் நான் கொடுத்திருந்தால் விளைவு என்னவாகும் என கனவில் காட்டினேனே புரிந்ததா?

“ஞானிகள் எப்போதும் அடுத்தவரின் கர்மக் கணக்கில் மூக்கை நுழைக்க மாட்டார்கள். யார் எந்த துன்பத்தில் இருந்தாலும் சரி, உன்னிடம் வந்து கதறிக் கதறி அழுதாலும் சரி உன் பிரார்த்தனை, 'அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்' என்பதைத் தாண்டி இருக்க கூடாது புரிந்ததா?

ராமசாமியின் கடன் தொல்லை தீர வேண்டும். சாமிநாதனின் நோய் குணமாக வேண்டும் என வேண்டிக் கொள்வதெல்லாம் விமானத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவன் கண்ணை மூடிக் கொண்டு ஒரு விசையை அழுத்துவதை போன்ற முட்டாள்தனம். புரிந்ததா?”

என் கண்கள் நிறைந்து விட்டன.

“இந்த ஒரு முறை மன்னிக்கிறேன். அடுத்த முறை இதே தப்பைச் செய்தால் உன் கர்மக் கணக்கு சொதப்பலாகி விடும். சரி, உனக்கு என்ன வேண்டும் சொல்?”

அவளைப் பார்த்து கைகூப்பினேன். கண்ணீர் மல்க கரகரத்த குரலில் பிரார்த்தித்தேன்.

“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும். நான் வறுமையில் வாடினாலும் சரி, உயிர் போகும் அளவிற்கு வலியால் துடித்தாலும் சரி, வேறு எந்த பிரார்த்தனையும் எந்தக் காலத்திலும் என் மனதில் வந்து விடக் கூடாது என்ற ஞானத்தை உங்களிடம் வரமாக கேட்கிறேன்”

சென்னை விமான நிலையத்தில் இறங்கி நடந்த போது அலைபேசி ஒலித்தது. ராமலிங்கம்.

“அனுமதி வர்றதுக்கு இன்னும் ஆறு மாசம் ஆகுமாம். 36 கோடி நஷ்டமாயிரும் சார். என்னால தாங்க முடியாது போலிருக்கே”

“பச்சைப்புடவைக்காரி நமக்கு ஒரு கஷ்டத்தை கொடுத்தா அதத் தாங்கிற சக்தியையும் சேர்த்தேதான் கொடுப்பா. அது சரி, உங்க மகன் இப்போ எங்க இருக்கான்?”

“லீவுக்காக வந்திருக்கான். என் படிப்பே போனாலும் சரி, இதை முடிச்சிக் கொடுத்துட்டுத்தான் அமெரிக்கா போவேன்னு சொல்லிட்டான். அவன்தான் சார் எனக்கு இப்போ எனக்கு ஒரே ஆறுதல்”என்னையும் அறியாமல் என் கண்கள் பொங்கிவிட்டன.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us