ADDED : ஜூலை 30, 2026 07:42 AM

ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே
''இந்த காலத்துல குழந்தையை வளர்க்க ஒரே அக்கப்போரா இருக்கு. நீ பாத்துக்க, நான் பாத்துக்கன்னு பெத்த தாய்க்கும் தகப்பனுக்குமே குடுமிப்பிடி சண்டையா இருக்கு. எங்க பக்கத்து பிளாட் வச்சலா வீட்ல தினம் இதே தகராறு” என 'உச்' கொட்டினார் கிருஷ்ணவேணி.
“என்ன பண்றது! இன்னைக்கு ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க, குழந்தைகள் முன்னைக்கும் இப்ப ரொம்ப சுட்டித்தனம் செய்றாங்க. சேட்டைக்கார குழந்தையான கிருஷ்ணனை யசோதா ஒத்த ஆளா சமாளிச்சா பாருங்க, அதான் அவ சாமர்த்தியமும் பாக்கியமும்” என நெகிழ்ந்தார் கிருஷ்ணவேணி.
“நேரா பெண் பிள்ளை ரகசியத்துக்குள் போயிட்டீங்க போல”
“ஆமா! ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே என்பது தான் 24வது வாக்கியம். கண்ணனை பெற்ற பெருமை தேவகியைச் சேர்ந்தாலும் அவனை வளர்த்த பெருமை எல்லாம் யசோதைக்கே கிடைத்தது. யசோதை கண்ணை இமை காப்பது போல கண்ணனை வளர்த்து வந்தாள்.
ஒரு சமயம் அவனை குளிப்பாட்டும் பொழுது கண்ணன் தன் வாயை திறந்தானாம். என்ன ஆச்சரியம் கண்ணனின் வாய்க்குள்ளே உலகம் மூன்றையும் கண்டு இருக்கிறாள் யசோதை. ஆயர்பாடி பெண்களையும் அழைத்து காட்டினாளாம்.
சின்ன வயதில் கண்ணனின் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் அபரிமிதமாக இருக்கும். அவனை துரத்திப் பிடித்துப் பிடித்தே யசோதை மெலிந்து விட்டாளாம்.
துாளியில் கண்ணனை கிடத்தினால், அவன் உதைத்து உதைத்தே அந்த துாளியை கிழித்து விடுவானாம். சரி அவனை எடுத்து மடியில் வைத்துக் கொள்ளலாம் என்றாலும் இடுப்பை உடைக்கும் அளவுக்கு இடுப்பில் உட்கார்ந்து கொண்டு நெம்பி நெம்பி அடம்பிடிப்பானாம். சரி மார்போடு அணைத்து கொள்ளலாம் என்று ஆசையாக துாக்கினால் யசோதையின் வயிற்றில் பாய்ந்திடுவானாம். அதனால் அவனுடன் மல்லுக்கட்டியே யசோதை மலைத்து போனாளாம்.
ஆனாலும் யசோதைக்கு கண்ணன் குழந்தை இல்லையா... பாராட்டி சீராட்டியே வளர்த்தாள். யசோதை குழந்தை கண்ணனை தங்கத் தொட்டிலில் கிடத்தி தாலாட்டு பாடினாளாம். அந்த மாய கண்ணனுக்கு அழகிய ஆடைகளை உடுத்தி முடியை வாரி கொண்டை போட்டு மயிலிறகை சொருகி அவனை அழகு பார்ப்பாளாம் யசோதை.
ஒரு சமயம் குழந்தை கண்ணனை கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை அழகிய பெண் வடிவம் தாங்கி தன் முலையில் விஷத்தை தடவிக் கொண்டு வந்தாளாம். அவனுக்கு பால் கொடுத்து கொல்ல வேண்டும் என்பதுதான் அவள் திட்டம். எல்லாவற்றையும் தெரிந்த கண்ணன் அவள் பூசி இருந்த விஷத்தையும் குடித்து அவள் உயிரையும் குடித்து விட்டான்.
ஒரு அழகிய பெண்ணாக வந்த அந்த பூதனை, தற்போது அலங்கோல வடிவம் பெற்று மலையென விழுந்தாளாம். இதைப் பார்த்து ஆயர்பாடி பெண்கள் எல்லாம் நடுநடுங்கி போனார்கள். இப்படியான வீர தீர செயல்களால் கண்ணன் ஆயர்பாடியில் ஒரு தலைவனாக உருமாறி விட்டான். ஆயர்பாடி பெண்கள் எல்லாம் அவனோடு விளையாடி மகிழ்ந்தனர்.
அவர்கள் தினசரி சேர்த்து வைத்திருக்கும் பால், மோர், தயிர், வெண்ணெய்யை எல்லாம் விளையாட்டாக திருடி தனக்கும் தன் நண்பர்களுக்கும் கொடுத்து உண்ணச் செய்தான். இதனால் ஆயர்பாடியே கலங்கியது. வெண்ணெய்யை திருடித் தின்ற கண்ணன் அந்தப் பானையை பாறையில் போட்டு உடைத்தும் விடுவானாம். இப்படியான விளையாட்டுத்தனத்தை செய்யும் கண்ணனை, ஒரு நாள் ஒரு பெண் கையும் களவுமாக பிடித்து தரதரவென யசோதையிடம் அழைத்துச் சென்றாளாம். அந்த நேரத்தில் கண்ணன் யசோதையைக் கண்டு பயந்து நின்ற காட்சியை பார்த்து அவனைப் பற்றி புகார் சொல்ல வந்த அந்த பெண் சொல்ல வந்ததை மறந்து போய் அவனை கொஞ்சி விட்டுப் போனாளாம்.
இப்படியாக ஒரு நாள் கண்ணன் தன் நண்பர்களுடன் தன்னுடைய திருமாளிகையிலேயே வெண்ணெய்யை திருடும்பொழுது தன் தாயான யசோதையிடம் வசமாக சிக்கிக் கொண்டானாம். கோபம் கொண்ட யசோதை கண்ணனை ஒரு தாம்பு கயிறு கொண்டு அடிப்பதற்காக கையை ஓங்கினாளாம்.
பரம்பொருளான கண்ணன் ஒரு குழந்தையாக இருந்த நிலையில் அம்மா அடித்து விடுவாளோ என்று ஒரு சாதாரண குழந்தையைப் போல பயந்தபடி தன் தாயைப் பார்த்தானாம். அவனுடைய வாயெல்லாம் வெண்ணெய்யும் தயிரும் சிதறி இருந்தன.
கண்ணன் அழத் தொடங்கினான். அவனை அடிக்க யசோதைக்கு மனம் வரவில்லை. தன் கையில் வைத்திருந்த தாம்பு கயிற்றை வீசிவிட்டு, அவனை ஆற தழுவிக் கொண்டாள். இது போன்ற காட்சிகளை எல்லாம் தினம் தினம் அனுபவித்த யசோதை இன்பத்தின் உச்ச நிலைக்கே சென்று மகிழ்ந்தாளாம். அப்படியான பேற்றை தான் பெறவில்லையே சுவாமி... என தன் மனக்குறையை ராமானுஜரை பார்த்து மிகப் பணிவுடன் தெரிவித்தாள் பெண்பிள்ளை” என முடித்தார் கிருஷ்ணவேணி.
“அடடா! கண்ணனை வளர்த்த யசோதைக்கு தான் என்ன ஒரு பெருமை! ஆனா இங்க பாருங்க, சைவத்தில் சிவபெருமானை வளர்த்தவர் என்று யாரும் இல்லை. ஏனென்றால் சிவபெருமானுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ஆனால் சிவன் அன்னையே என கூப்பிட்டது காரைக்கால் அம்மையாரைத் தான். ஆனாலும் தாயுமானவராய் இருந்து உபமன்யு முனிவரை அணுகியிருக்காரு”
“அப்படியா! யார் அந்த உபமன்யு முனிவர்?”
''உபமன்யு முனிவர் என்பவர் சிவ பக்தரான ஒரு முனிவர். பிரம்ம ரிஷியான வியாக்கரபாதர், ஆத்ரேயி தம்பதியின் மகன். அயோதவுமிய மகரிஷியின் சீடர். ஒருமுறை உபமன்யு தன் மாமாவின் ஆசிரமத்தில் வயிறார பால் குடித்துவிட்டு தனக்கு மேலும் பாலை அளிக்குமாறு தாயிடம் வேண்டி நின்றார். வறுமையின் காரணமாக தன் மகனுக்கு பால் கொடுக்க முடியாததால் மனம் உடைந்த அவள் அதற்கு பதிலாக அவன் விரும்பியதை அருளும் சிவனிடம் தன்னை அர்ப்பணிக்குமாறு சொல்லி இருக்கிறாள்.
உடனே அந்த சிறுவன் ஒரு கடல் அளவு பாலை கேட்டு சிவனிடம் தவம் செய்ய முடிவெடுத்தான். அவனுடைய தாயும் ஆசியளித்து அனுப்பினாள். இமயமலைக்குச் சென்று அங்கு ஒரு லிங்கத்தை கட்டி பஞ்சாட்சரத்தை உச்சரிக்கத் தொடங்கினான்.
சிறுவன் உபமன்யுவின் தவம் சக்தி மிக்கதாக இருந்தது. தேவர்கள் விஷ்ணுவிடம் இந்த தகவலை தெரிவிக்க அவர், சிவனிடம் கூறினார். உடனே சிவன் இந்திரனின் வேடத்தில் சிறுவனை சந்தித்து வரம் தருவதாக சொன்னார். சிவனிடம் பக்தி செலுத்துவதை வரமாக தேர்ந்தெடுத்தான் சிறுவன்.
இந்திரனின் வேடத்தில் இருந்தபடி, சிவனை பற்றிய இழிவான கருத்துக்களைச் சொன்னார். இதனால் கோபமடைந்த சிறுவன் உபமன்யு பஞ்சாட்சரத்தை உச்சரித்து சாம்பலை எறிந்தான். சிவன் அதை மென்மையாக அணைத்தார். பின்னர் அவர் தன் சுய உருவத்தை எடுத்தார். உபமன்யுவின் பக்தியை கண்டு மெச்சிய சிவன் தன் பக்தனுக்கு அவன் விரும்பிய பாற்கடலையும் கொடுத்து அவனுக்கு புனித சடங்குகளையும் ஞானத்தையும் வழங்கினார்.
சிவ பக்தரான இவர் சிவகணங்களின் தலைவராகவும் இருக்கிறார். சிவனை குழந்தையாக பாவித்து 'கண்ணே மணியே' என இவர் கொஞ்சி வளர்த்த கதை பெரிய புராணத்தில் உள்ளது” என்றார் அமிர்தம்.
“பக்தருக்கும் கடவுளுக்கும் இருக்கிற பிணைப்பை அன்புதான் தாங்கிப் பிடிக்கிறது. யசோதை, கண்ணன் மீது வைத்த அன்பும் சரி, சிவன் முனிவரிடம் காட்டிய அன்பும் சரி, துளியும் சுயநலம் இல்லாததால் தாய் அன்புக்கு நிகரானது. தாயான நமக்கும் இதில் பெருமைதான்” என்றார் கிருஷ்ணவேணி.
“சரி, அடுத்த வாக்கியத்தில் தந்தை அன்பு பற்றி ஏதாவது வருகிறதா கிருஷ்ணவேணிம்மா?” என ஒரு ஆர்வத்தில் கேட்டார் அமிர்தம்.
“இல்லை, அடுத்த ரகசியத்தில் விலங்கை பற்றி மட்டும் தான் சொல்கிறார் பெண் பிள்ளை”
“கை விலங்கா? கால் விலங்கா?”
“அட! ராமனின் கைபட்டதால் பெருமைப்பட்ட விலங்கு. இப்போ புரியுதா?”
“அது என்ன விலங்கு?” என யோசிக்கத் தொடங்கினார் அமிர்தம்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
