ADDED : ஜூலை 30, 2026 07:45 AM

ஒரு ஊரில் ராமநாதன் என்ற பணக்காரர் வாழ்ந்தார். தற்பெருமை கொண்ட அவருக்கு, தன்னை விட தர்மம் செய்பவர் யாரும் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. 'இந்த ஊரில் என்னை விட நல்லவர் யாருமில்லை' என சொல்லி பெருமைப்பட்டார்.
ஒரு முறை அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்து அறுசுவை உணவு அளித்தார்.
பின்னர், ''சுவாமி, நான் இந்த ஊர் கோயில் திருப்பணிக்கு நன்கொடை கொடுத்தேன். மாதம் தோறும் பிரதோஷ பூஜையை என் சொந்த செலவில் நடத்துகிறேன். தேவார தல யாத்திரைக்கு பலரையும் அழைத்துச் செல்கிறேன். தினமும் கோயிலில் அன்னதானம் செய்கிறேன். என்னைத் தேடி வருவோருக்கு தேவையான உதவிகளை செய்கிறேன். என் ஆன்மிகப் பயணத்தின் அடுத்த கட்டம் என்ன?'' என பெருமிதத்துடன் கேட்டார்.
துறவி புன்னகைத்தபடி, ''இன்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து செல். உன் நிழலை தொட முடியுமா என்று பார். அதுவே உன் பயணத்திற்கான அடுத்த கட்டத்திற்கான வழி'' எனச் சொல்லி புறப்பட்டார்.
அதன்படியே ராமநாதன் அன்று மதியம் வீட்டுக்கு வெளியில் வந்தார். தலைக்கு நேராக சூரியன் உக்கிரமாக இருந்தது. தரையில் விழுந்த நிழலைத் தொட முயற்சி செய்தார். அவருடைய காலுக்கு அடியிலேயே நிழல் மறைந்திருந்தது.
மாலையில் துறவியை சந்தித்த ராமநாதன், ''சுவாமி, நிழல் என் காலுக்குள் மறைந்து கிடப்பதை பார்த்தேன். இதில் என்ன ஆன்மிக பயணத்திற்கான வழி இருக்கிறது?'' எனக் கேட்டார்.
துறவி அமைதியாகச் சொன்னார். ''நீ செய்த தர்மம், உன் ஆன்மிகப் பெருமை எல்லாம் அந்த நிழலைப் போன்றது. 'நான் செய்கிறேன்' என்ற தற்பெருமை எண்ணம் இருக்கும் வரை உனக்கு ஆன்மிக வளர்ச்சி ஏற்படாது. பணிவும், அடக்கமும் ஆன்மிக வாழ்விற்கான அடிப்படை குணங்கள்''
''அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்'' எனக் கேட்டார் ராமநாதன்.
''முன்னோக்கி நடந்தால் உனக்குப் பின்னால் நிழல் தானாக வரும். அது போல, 'நான்' என்ற ஆணவத்தை கை விட்டு கடவுளை நோக்கி மனதை திருப்பு. செய்த நற்செயல்களின் பலன் நிழல் போல உன்னை தொடரும்'' என்றார்.
பிறரிடம் சொல்லி பெருமைப்படுவது அல்ல ஆன்மிகம்; ஆணவம் இல்லாமல் கடவுளைச் சரணடைவது தான் என ராமநாதன் உணர்ந்தார். 'நான்' என்ற ஆணவம் அழியும் போது ஆன்மிகம் ஆரம்பமாகும். இதுவே நிழல் சொல்லும் நிஜம்.
