ADDED : ஆக 03, 2026 01:18 PM

தெய்வம் நின்று கொல்லும்
சென்னையில் ஒரு உணவகத்தில் என் முன்னால் அமர்ந்திருந்தவளைப் பார்த்தேன். பெயர் உமா. வயது 35. அழகாக இருந்தாள். முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
“ரகுவ காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். பத்து வருஷம் எல்லாமே நல்லாத்தான் இருந்தது. குழந்தையில்ல. இப்போ அந்தத் தடியனுக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு ஏற்பட்டு போச்சு. இப்பவே விவாகரத்துக் கொடுன்னு ஒத்தக் கால்ல நிக்கறான். நான் மாட்டேன்னு சொன்னவுடன கேஸ் போட்டுட்டான். எனக்கு ஒரு ஆளோட கள்ளத் தொடர்பு இருக்கறதா பழி சொல்றான். அதுக்கான போட்டோ, வீடியோ ஆதாரம் இருக்குன்னு சொல்றான்”
உமாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு பச்சைப்புடவைக்காரி தான் தெய்வம். நான் மதுரைக்காரி, சார். இப்படியெல்லாம் ஒரு வஞ்சகன் அபாண்டமா பழி சுமத்தினவுடன் பச்சைப்புடவைக்காரி துர்கையா அவதாரம் எடுத்து அவன் கண்ணப் பறிக்க வேண்டாமா? பச்சைப்புடவைக்காரி ரொம்ப நிதானம் சார். ஆறின கஞ்சி பழங்கஞ்சின்னு பச்சைப் புடவைக்காரிக்கு தெரியாதோ?”
ஆறுதல் வார்த்தை தான் என்னால் சொல்லமுடிந்தது. அநியாயம் நடந்தால் உடனே அவள் அவதாரம் நிகழ வேண்டாமா என்ற எண்ணம் என் மனதிலும் எழுந்தது
உண்மைதான். அன்று மதியம் சற்று தொலைவில் இருந்த ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. சரியான நேரத்திற்கு வாடகைக் கார் வந்து விட்டது. காரின் ஓட்டுனர் ஒரு பெண். அழகாக இருந்தாள். இன்முகத்துடன் வரவேற்றாள்.
பயணத்தின் போது நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. அலைபேசியில் இருந்த செயலி மூலம் பயணிக்கும் வழி, நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் வலது புறம் திரும்புவதற்குப் பதிலாக இடது புறம் திரும்பி விட்டாள். நான் ஏறக்குறைய கத்தினேன்.
உடனே வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள். அந்த அதிர்ச்சியில் என் தலை முன்சீட்டில் முட்டிக்கொண்டது. என் கண்ணாடி கீழே விழுந்து விட்டது. பின்னால் வந்த வண்டி எங்கள் வண்டியின் மீது இடித்துவிட்டது. வண்டியை ஓரம் கட்டினாள். நல்ல வேளை பின்னால் இடித்தவன் சண்டை போடாமல் சென்று விட்டான்.
“ஏம்மா, பாதை தப்புன்னா இப்படியா சடன் பிரேக் போடுவாங்க? வண்டிய ஸ்லோ பண்ணி எங்க யு டர்ன் போட முடியும்னு பாத்து திருப்பிக்கிட்டுச் சரியான வழியில போயிருக்கலாமே”
சட்டென என்னைத் திரும்பிப் பார்த்தாள் ஓட்டுனர். அவள் சிரிப்பில் என் ஆன்மாவே உருகி விட்டது.
“தாயே” நான் கதறினேன். வண்டியை விட்டு இறங்கிச் சென்று அவள் காலில் விழுந்தேன்.
“உமா என்னைப் பழித்த போது இந்த அறிவு எங்கே போயிற்று? நீயும் சேர்ந்து தானே என்னை பழித்தாய்?”
நான் கண்ணீர் மல்க கை கூப்பினேன்.
“புரியவில்லையே”
“யாராவது என் அடியவரை துன்புறுத்தினால் உடனே துர்கையாக மாறி துன்புறுத்துபவனின் கண்ணைப் பறிப்பது இப்படி திடீரென வண்டியை நிறுத்துவது போலத்தான்.
வண்டியை உடனே நிறுத்தியதால் எவ்வளவு சேதாரம் என பார்த்தாய் அல்லவா? அப்படி நான் செய்தால் அது உமாவிற்கும் நல்லதல்ல. அந்தக் கயவனுக்கும் நல்லதல்ல”
“அந்தக் கயவன் ரகு எப்படி போனால் என்ன தாயே?”
“எனக்கு எல்லோரும் முக்கியம்தான். உமாவைக் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரகுவைத் திருத்துவதும் முக்கியம்தான். காமம் ரகுவின் கண்களை மறைக்கிறது. கோபம் உமாவின் கண்களை மறைக்கிறது. இரண்டையும் என் வழியில் சரி செய்து கொண்டிருக்கிறேன்”
“என்ன நடக்கும், தாயே”
“உமாவுக்கு விவாகரத்து கிடைக்கும். விரைவில் அவளுக்கு வேலை கிடைக்கும். தனியாக வாழ பழகிக் கொள்வாள். அப்போது ஒரு நல்லவனைச் சந்திப்பாள். அவனை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வாள்”
“ஒழுக்கம் கெட்ட ரகுவிற்கு என்னாகும்?”
“வேறு என்னாகும்? அவன் வினை அவனைச் சுடப் போகிறது. உமாவை விட்டுவிட்டு காதலியைக் கரம் பிடிப்பான். அவர்களுக்கு குழந்தை பிறக்கும். அதன்பிறகு தான் புதுக் காதலியின் சுயரூபம் தெரியும். அவள் ஒழுக்கம் கெட்டவள் என புரிந்து கொள்வான். அந்த குழந்தையே தன்னுடையதில்லை என்பதை தெரிந்து கொள்வான். அவன் மீது வழக்கு போடுவாள். அவள் ஒழுக்கம் கெட்டவள் என்பதற்கான ஆதாரம் அவனுக்குக் கிடைக்காது.
வழக்கு பத்து வருடம் இழுக்கும். லட்சக் கணக்கில் கொட்டிக் கொடுத்துத்தான் ரகு அவளிடமிருந்து விடுபட வேண்டி வரும். அப்போது ரகுவிற்கு வயதும் ஆகியிருக்கும். உடல் நலம் கெட்டிருக்கும். அவன் நிதி நிலைமை சரியாக இருக்காது.
அப்போதுதான் உமாவிற்கு செய்த துரோகத்தை நினைத்து வருந்துவான். அவனைப் புரிந்து கொள்ளும் ஒரு துணையை அவனுக்குத் தருவேன். அதன்பின் அவனும் நிம்மதியாக வாழ்வான்.
“உமா ஆசைப்பட்டதுபோல் ரகு அவளுக்கு துரோகம் செய்தவுடன் நான் துர்கையாகத் தோன்றி அவன் கண்ணைப் பறித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ரகு கடைசிவரை திருந்தி வாழ வாய்ப்பே கிடைத்திருக்காது. துன்பத்தில் இருந்து உமா கற்க வேண்டிய பாடங்களும், அவள் பெற வேண்டிய ஞானமும் கிடைக்காமலே போயிருக்கும்.
ஒவ்வொரு முறை அநீதி நடக்கும்போது கூடவே அழிவும் நடந்தால் யாரும் ஆன்மிக ரீதியாக வளர முடியாது”
“தெய்வம் நின்று கொல்லும் எனச் சொல்வது தவறு. தெய்வம் நின்று வாழவைக்கும் என்பதுதான் சரி. உங்கள் அன்பின் வீரியத்தை இன்றுதான் புரிந்து கொண்டேன் தாயே! இதையெல்லாம் உமாவிடம் சொல்லட்டுமா?”
“வேண்டாம். இப்போதைக்கு அவளை வழக்கை நடத்தச் சொல். நம்பிக்கை இழக்க வேண்டாம். நல்லதே நடக்கும் என்று சொல். அவள் மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும். அதை அமைதிப்படுத்த அபிராமி அந்தாதியைச் சொல்லட்டும். போகப் போக அவளாகவே என் அன்பைத் தெரிந்து கொள்வாள். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்.”
“என்னவென்று கேட்பது தாயே! உமா உங்கள் அடியவள். அவளைக் காப்பாற்றி வாழ்வு தந்தீர்கள், சரி. ரகு தீயவன். ஒழுக்கம் கெட்டவன் உங்கள் அடியவளையே துன்புறுத்தியவன். அவன் செய்த பாவத்தை அவனுக்குப் புரிய வைத்துக் கடைசியில் அவனையும் வாழ வைத்து விட்டீர்களே! உங்கள் அன்பிற்கு உவமையாகச் சொல்ல இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே இல்லை தாயே! என்றும் உங்களை மறவாத மனதை மட்டுமே உங்களிடம் யாசிக்கிறேன்”
“அந்த மனம் வேண்டும் என்று அவனவன் காட்டில் வருடக் கணக்கில் தவம் செய்து கொண்டிருக்கிறான். நீ ஒரே வாக்கியத்தில் அதைப் பெற வேண்டும் என நினைக்கிறாயே பேராசைதான்”
“அந்த வரம் வேண்டாம் தாயே! நீங்கள் தரும் துன்பங்களையும் பிரசாதமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தைக் கொடுங்கள்”
“அந்த பக்குவம் வந்து விட்டால் நீ நினைத்தாலும் உன்னால் என்னை மறக்கவே முடியாது”
மீண்டும் அவள் காலில் விழுந்தேன். நிமிர்ந்த போது அவள் அங்கு இல்லை.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
