தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 26

பெண்பிள்ளை ரகசியம் - 26

பெண்பிள்ளை ரகசியம் - 26


ADDED : ஆக 03, 2026 01:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 01:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அணில்களைப் போலே

“என்ன கிருஷ்ணவேணிம்மா... நீங்க கட்டி இருக்கும் புடவையில மானாட மயிலாட மாதிரி ஒரு மிருகக்காட்சி சாலையே இருக்கு. சுத்தி சுத்தி பாத்துட்டே இருக்கேன், அதில் அணிலை மட்டும் காணோமே” என்றார் அமிர்தம் விளையாட்டாக.

''நீங்க என்ன தான் பார்த்தாலும் அணிலை மட்டும் கண்டுபிடிக்க முடியாது. அணில் இந்த புடவையில இல்ல, வாக்கியத்தில் இருக்கு”

“இன்னிக்கு 25வது வாக்கியம் அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே தானே?”

“ஆமா, சரியா சொன்னீங்க. பெண்பிள்ளை அந்த வாக்கியத்துக்கான உட்பொருளை சொல்லத் தொடங்குறா. ராமானுஜரும், சீடர்களும் கவனமா கேட்குறாங்க. கைகேயி பெற்ற வரத்தால் ராமர் வனவாசம் போனது நமக்கு தெரியும். அந்த நேரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல, ராமரும் லட்சுமணனும் தேடி அலைந்தனர். அப்போது சுக்ரீவனின் நட்பு அவர்களுக்கு கிடைத்தது.

சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார் ராமர். வானரப்படையின் உதவியுடன் சீதையை தேடினார் ராமர். அப்போது அசோக வனத்தில் சீதை இருப்பதை அறிந்து 'கண்டேன் சீதையை' எனச் சொல்லி ராமனின் மனதை குளிர்வித்தார் ஹனுமன். சீதையை மீட்க சென்ற போது இலங்கைக்கு செல்ல கடலை தாண்ட வேண்டியிருந்தது.

சுக்ரீவனிடம் இருந்த குரங்குப் படையின் உதவியுடன் அணை கட்ட ராமர் தீர்மானித்தார். ஹனுமன் உள்ளிட்ட அத்தனை குரங்குகளும் பாறைகளை சுமந்து கடலில் போட்டன.

ஒரு குரங்கு மலைக்கு மேலே ஏறி பாறையை துாக்கி வீச மற்றொரு குரங்கு அதை தாவிப் பிடித்து மற்றொரு குரங்கிடம் வீசும். இப்படி பாலம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இதை அங்கிருந்த அணில் கூட்டம் பார்த்தது.

இந்த குரங்குகள் எல்லாம் ராமருக்கு உதவி செய்து கொண்டிருக்க நாம் ராமருக்கு உதவி செய்யவில்லையே என வருந்தின. எப்படி உதவலாம் என யோசித்தன. அவை கடலில் குளித்து ஈர உடம்புடன் கரைக்கு வந்து மணலில் புரண்டன. ஈர உடம்பில் மணல் நிறைய ஒட்டியது. அப்படியே அலுங்காமல் குலுங்காமல் கடலில் போட்ட கற்களுக்கு இடையே சென்று தன் உடம்பை உதறின.

இதனால் பாறைகளுக்கு இடையே இருக்கக் கூடிய இடைவெளியில் மணல் நிரம்பத் தொடங்கியது. இப்படியே திரும்பத் திரும்ப செய்தன. வீடு கட்டும் போது காரை பூசுவது போல் கற்களுக்கு இடையில் மணல் பூச்சை பூசின அத்தனை அணில்களும்”

“யாத்திரை என்றால் பயணம் என்பது தெரியும். நீங்கள் சொன்ன வாக்கியத்தில் அநுயாத்திரை என வருகிறதே. அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என சந்தேகம் கேட்டார் அமிர்தம்.

“அதுவா! ராமனுக்கு உதவ இந்த குரங்குகள் பாறைகளுடன் சென்றது யாத்திரை. இந்த குரங்குகளுடன் ராமனுக்கு உதவ அணில்களும் உதவி செய்ய போனது இல்லையா... அதுதான் அநுயாத்திரை என்பார்கள். புரிஞ்சுதா? அணில் அளவில் சிறியது தான். அதற்காக அணிலுடைய உதவியை சிறியதாக கருதக் கூடாது. செய்யும் செயலில் இம்மியளவு பெருமையை எதிர்பார்க்காமல் செய்வது. அதோடு மற்றவர் அந்த உதவியை பார்த்து கொண்டாடவேண்டும் என நினைக்காமல் யாருமே பார்க்கவில்லை என்றாலும் உதவி செய்வதை அணில் கைங்கரியம் என்பார்கள். இப்படிப்பட்ட இந்த அணில் கைங்கரியத்தை பெண் பிள்ளை ராமானுஜரிடத்தில் சொல்கிறாள் இல்லையா, இந்த ராமானுஜர் யார்? ராம அவதாரத்தில் ராமனுடன் கூடவே இருந்த லட்சுமணன் தான் இந்த ராமானுஜர்.

பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் ஹனுமனை நன்றியுடன் ஆறத் தழுவினார் ராமர். அப்படியே அருகில் இருக்கும் அணில்களை அன்புடன் முதுகில் தடவிக் கொடுத்தார். அதுவே ராமர் கோடுகளாக பதிவானது. இதை பக்கத்தில் இருந்து பார்த்தவர் தான் லட்சுமணன். அப்போது லட்சுமணன் தன்னைவிட சேவை செய்பவர் யாரும் இல்லை என எண்ணினார். அதை இந்த குரங்குகள் தவிடு பொடியாக்கியது.

ராமனுக்காக பாலம் கட்ட அத்தனை குரங்குகளும் ஓடிச் சென்று மலை போன்ற பாறைகளைக் கொண்டு வந்து கடலில் பாலம் கட்டியதை பார்த்து முதலில் லட்சுமணன் நம்மை காட்டிலும் இந்த குரங்குகள் அதிகம் சேவை செய்கின்றன என நினைத்தார். அடுத்ததாக இந்த அணில்களை பார்த்ததும் குரங்குகளை விட அணில்கள் இப்படி சேவை செய்கிறதே என வியப்பின் உச்சத்துக்கே போய்விட்டார்.

ராமனின் சகோதரன் என்ற முறையில் சகோதரனுக்காக தர்மத்தின்படி சேவை செய்கிறோம். ஆனால் அணில்கள் செயல்படுவதை பார்த்து லட்சுமணனின் கர்வம் தொலைந்தது. ராமானுஜர் லட்சுமணரின் வடிவமாச்சே. அந்த ராமானுஜரிடத்தில் தான் பெண் பிள்ளை ராமாவதாரத்தில் நடந்த அணிலின் சேவையைப் பற்றி விளக்கினாள். ராமானுஜரின் உடல் சிலிர்த்தது.

அப்படியே பெண்பிள்ளை மேலும் தொடர்ந்தாள். வானரங்களுக்கு பின்னாலே அணில்களைப் போல அநுயாத்திரை சென்று நான் பக்தி செலுத்தவில்லையே சுவாமி. சேவை செய்ய எனக்கு வாய்க்கவில்லையே... அதனால் நான் திருக்கோளூரை விட்டுப் போகிறேன் சுவாமி என்றாள் பெண்பிள்ளை”

“உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ராமருக்கு உதவி செய்யும் எண்ணத்தால் உயர்ந்திடுச்சு அணில். ராமருக்கு உதவி செய்த அணிலுடைய கதையைக் கேட்டதும் சிவன் நரியை பரியாக்கிய திருவிளையாடல் தான் ஞாபகத்திற்கு வருது”

“அது என்ன பரி?”என்றார் கிருஷ்ணவேணி.

“'பரி'ன்னா குதிரை. சிவன் பக்தனுக்காக நரிகளை குதிரையா மாற்றினார்”

“அப்படியா! அது எப்ப நடந்தது?”

''மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சர் தான் மாணிக்கவாசகர். படைக்கு குதிரை வாங்க மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து அனுப்பினார் மன்னர். ஆனால் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைக்கு போன போது அங்கு சிவன் குருந்த மரத்தடியில் குருவாக எழுந்தருளி உபதேசம் செய்தார்.

சிவன் மீது ஈர்க்கப்பட்ட மாணிக்கவாசகர் பொருள் முழுவதையும் கோயில் கட்ட செலவழித்தார். குதிரைகளும் வரவில்லை, பொருளும் இல்லை என்ற செய்தி கேட்டு மன்னர் கோபம் கொண்டார்.

மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார். சிவன் தன் பக்தரை காக்க ஆவணி மூலத்தன்று காட்டில் இருந்த நரிகளை உயர்ந்த பாரசீக குதிரைகளாக மாற்றினார். தானே குதிரை வியாபாரி வடிவில் தோன்றி குதிரைகளை மதுரையில் ஒப்படைத்தார்.

மன்னர் மகிழ்ந்து மாணிக்கவாசகரை விடுதலை செய்தார். அன்றிரவு குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காட்டுக்கு ஓடின. கோபமடைந்த மன்னர் மீண்டும் மாணிக்கவாசகரை பிடித்து வைகை ஆற்று மணலில் நிற்க வைத்து துன்புறுத்தினார். மாணிக்கவாசகர் மீண்டும் சிவனை வேண்டினார்.

உடனே சிவன் வைகை ஆற்றில் வெள்ளம் வரச் செய்ய, மதுரையே அழியும் நிலை வந்தது. இதனால் மன்னர் பயந்து மாணிக்கவாசகரை விடுவித்தார். இது

சிவனின் 64 திருவிளையாடல்களில் புகழ் பெற்றது” என ஒரே மூச்சில் சொன்னார் அமிர்தம்.

“அணில் பக்தி செய்து ராமரிடம் நெருக்கமானது. பக்தனால் நரி குதிரையானது. பக்தியால் பலப்பல அதிசயம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை இந்த உயிரினங்கள் வழியாக நாம் இன்னும் ஆழமாக தெரிந்து கொள்கிறோம்” என்றார் அமிர்தம். அதை கிருஷ்ணவேணியும் ஆமோதித்தார்.

“சரி, அடுத்த வாக்கியத்தில் யார் வருகிறார்கள்?”

''அதுவா! கண்ணனின் நெருங்கிய தோழர் வருகிறார். கண்டுபிடியுங்க பார்ப்போம்”

கண்ணனுக்குத் தான் நிறைய தோழர்கள் ஆச்சே! யார் என யோசித்தபடி வீடு வந்து சேர்ந்தார் அமிர்தம்.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us