தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 39

சித்தர்களின் விளையாட்டு - 39

சித்தர்களின் விளையாட்டு - 39


ADDED : ஆக 03, 2026 01:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 01:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவவாக்கியர்

கடவுளை ஒரு கிராமத்தில் வசித்த இளம் தம்பதியர் தெய்வச் சிலைகளை வடிவமைப்பதில் சிறந்து விளங்கினர். அவர்களுக்கு சந்ததி இல்லை. குழந்தை வேண்டி சிவனை வழிபட்டு தவ வாழ்க்கை வாழ்ந்தனர். வேண்டுதலின் பயனாக பெண் கருத்தரிக்க மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.

சிவனே குழந்தையாக பிறக்க உள்ளதாக எண்ணி வயிற்றில் இருக்கும் பொழுதே எந்நேரமும் “சிவ சிவ” என வணங்கினர்.

ஆண் குழந்தையைப் அந்தப் பெண் பெற்றெடுத்தார். மகிழ்ந்த பெற்றோர் பக்திக் கதைகள் கூறி வளர்த்தனர். குழந்தையும் சிறுவயதிலேயே தன் பெற்றோர் தெய்வத் திருமேனியை சிலையாக வடிப்பதை கண் கொட்டாமல் ரசித்தது. அவர்கள் செதுக்கும் சிலை நேர்த்தியாக இருந்ததால் பலர் வாங்கி சென்றனர். இதை தொடர்ந்து கவனித்த குழந்தைக்கு சந்தேகம் வந்தது. “கடவுள் சிலையில்தான் இருக்கிறாரா? ஏன், இதை வாங்கி செல்கிறார்கள்?” என கேட்டது.

பெற்றோரும் குழந்தையிடம் “அவரவர் விருப்பப்படி கடவுளை வணங்குகிறார்கள். உனக்கு எப்படி விருப்பமோ அப்படி வழிபடு” எனக் கூற வயது ஆக ஆக குழந்தையும் இளைஞன் ஆனான். இல்லற வாழ்க்கை வாழ விரும்பினான். பெற்றோரோ அவனை நோக்கி “சிறிது காலம் பொறு. வேண்டுதல் ஒன்றை நிறைவேற்ற காசிக்கு செல்ல வேண்டியுள்ளது. அதன் பின் திருமணம் செய்து வைக்கிறோம்” எனக் கூறினர்.

'நானே காசிக்கு செல்கிறேன்' எனக் கூறி இளைஞன் புறப்பட்டான். அங்கு கங்கைக்கரையில் இருந்த சித்தர் ஒருவர், இளைஞனிடம் காலணா காசையும் தண்ணீர் பிடித்து வைக்கும் சுரைக் குடுவையையும் கொடுத்தார். “இளைஞனே! இந்த காசை கங்கையில் வீசி விட்டு, சுரைக்குடுவையில் தண்ணீர் பிடித்து வா. உனக்கு மனைவி கிடைப்பாள்” என்றார்.

ஆச்சரியப்பட்ட இளைஞன் கங்கைக்குச் சென்று காசை வீசினான். குடுவையை கழுவி நீர் எடுத்து வந்து சித்தரிடம் கொடுத்தான்.

சித்தரோ புன்னகைத்தபடி, நீரை கீழே ஊற்றி விட்டு குடுவையை பார் என்றார். இளைஞனும் செய்ய குடுவைக்குள் கங்கையில் எறிந்த காலணா கங்கை ஆற்று மண் ஒட்டிய நிலையில் உள்ளே இருந்தது.

ஆச்சரியப்பட்ட இளைஞனிடம், “இதை கொண்டு போ. உன் ஊரில் உள்ள பெண்களிடம் கொடுத்து சமைத்து தரச் சொல். யார் சமைக்கிறாளோ அவளே உன் மனைவி” என ஆசியளித்து அனுப்பினார்.

பெற்றோரைப் பார்த்து நடந்ததைச் சொல்ல அவர்களும் பெண் தேட ஆரம்பித்தனர்.

உலர்ந்த சுரைக்காய் குடுவையையும், காசையும், மண்ணையும் சமைத்து தருமாறு ஊராரிடம் சென்று கேட்டனர். அவர்களோ கேலி செய்தனர் “காய்ந்து போன சுரைக்காயை சமைக்க முடியுமா?” என ஏளனம் செய்தனர். ஆனாலும் இளைஞன் தளரவில்லை. காட்டில் நாடோடி பெண் ஒருத்தி கூடை செய்வதைப் பார்த்தான். “தாகமாக இருக்கிறது. இந்தக் குடுவையில் தண்ணீர் தா” எனக் கேட்டான்.

புன்னகைத்தபடி அந்தப் பெண் குடுவையில் தண்ணீரை ஊற்றினாள். அப்பொழுது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

சுரைக்குடுவை அப்போது காய்த்தது போல பச்சையாக மாறியது. குடுவையில் ஒட்டிய மண் அரிசியாக மாறியது. மகிழ்ச்சியடைந்த இளைஞன், “நீயே என் மனைவி” எனக் கூறி காசியில் நடந்ததைக் கூற அந்த பெண்ணும் அரிசி, சுரைக்காயை சமைத்து உணவிட்டாள். காலணா காசை அவளிடம் கொடுக்க பொற்காசாக மாறியது. பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்தான். குழந்தையும் பிறந்தது.

ஒரு நாள் காலையில், “சிவவாக்கியா! இல்லற கடமை முடிந்தது. ஆன்மிக பணியை தொடர்வாயாக!” என அசரீரி கேட்டது. கணவரின் விருப்பமே தன் விருப்பம் என உணர்ந்து மனைவியும் சம்மதித்தாள்.

அன்று இளைஞன் வழக்கம் போல மூங்கில் மரத்தை வெட்ட ஆரம்பிக்க, திடீரென தங்கம் கொட்ட ஆரம்பித்தது. மூங்கிலில் தங்கத்துாள் வருவதையும், அதை மனைவியிடம் சொல்ல சிவவாக்கியர் வீட்டுக்கு கிளம்பியதையும் கொள்ளையர்கள் சிலர் பார்த்தபடி இருந்தனர். வீட்டிலிருந்து வருவதற்குள் அதை சேகரித்து மூடையாக கட்டினர். பின்னர் சிவவாக்கியர் வரும் வரை காத்திருந்தனர். அவர் வந்ததும் அவரை கட்டிப் போட்டு அங்கிருந்த தங்கம் இருக்கும் மூங்கில் மரங்களை கண்டுபிடித்து எடுத்துச் செல்ல திட்டமிட்டனர்.

சிவவாக்கியர் வர தாமதமானதால் அதில் இரண்டு பேர், மற்ற இரண்டு பேரை நோக்கி “பசிக்கிறது. பழம் பறித்து வாருங்கள் சாப்பிடுவோம். அதற்குள் சிவவாக்கியர் போய் விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” எனக் கூறி அனுப்பினர்.

பின்னர் அந்த இருவரும் சதி திட்டம் தீட்டினர். பழம் வந்ததும் அவர்களை கொன்று விட்டு அவர்களின் பங்கை தாமே எடுக்க முடிவு செய்தனர்.

பழத்தை பறிப்பதற்காக சென்ற இருவரும் விஷ மரத்தில் பழங்களை பறித்தனர். அதைக் கொடுத்து அவர்களை கொன்று விட்டு அவர்களின் பங்கை தாமே எடுக்க முடிவு செய்தனர்.

சில நிமிடங்களில் நான்கு பேரும் சந்தித்துக் கொண்டனர். பழம் கைக்கு கிடைத்ததும் மரத்தடியில் நின்ற இரண்டு பேரும் பழம் கொண்டு வந்தவர்களை கொன்றனர். பின் விஷக்கனி என அறியாமல் பழத்தை சாப்பிட அவர்களும் அங்கேயே இறந்தனர்.

இதையெல்லாம் அறியாத சிவவாக்கியர் மூங்கில் காட்டில் நடந்து வந்தார். அங்கே மூடையாக தங்கம் இருந்தது.

நான்கு பேரும் இறந்து கிடந்தனர். சிவவாக்கியருக்கு எல்லாம் புரிந்து போனது. தங்கத்தின் மீதுள்ள பேராசையால் இவர்கள் இப்படி செய்து விட்டனர். தங்கத்தை

துாக்கி எறியாமல் அப்படியே விட்டு சென்றது தவறு. ஆகவே அறியாமல் செய்த தவறை மன்னித்து அவர்களுக்கு உயிர் கொடுக்குமாறு சிவனிடம் வேண்டினார்.

உயிர் பிழைத்து எழுந்த நான்கு பேரும் சிவவாக்கியரை வணங்கி, “தங்கமும், பொருளும், பணமும் வேண்டாம். ஞானம் கிடைத்தால் போதும். தவறை பொறுத்தருளி சீடராக ஏற்றுக் கொள்ளுங்கள்” என வேண்டினர்.

சிவவாக்கியர் ரசவாதக் கலையை கற்றுத் தேர்ந்தார். ஒருவரின் மனம் துாய்மையாக இருந்தால் அங்கு கடவுள் இருக்கிறார். நற்செயலால் அவரை வணங்க வேண்டும். அப்படி வணங்க முடிந்தால் உருவ வழிபாடு தேவையில்லை என பாடினார்.

“நட்ட கல்லைத் தெய்வமென்று

நாலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொணென்று

சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ?

நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?”

சிவவாக்கியம் 1000, சிவவாக்கியர் நாடி சாஸ்திரம் 31, சிவவாக்கியம் 100, சிவவாக்கியம் 1200, சிவவாக்கிய மந்திரம், சிவவாக்கிய குணவாகடம், சிவவாக்கிய சூத்திரம் 33, பெரிய சிவவாக்கிய பாடல், சிவவாக்கியர் விருத்தம் போன்ற தத்துவம், ஆன்மிகம், ஞானம், மருத்துவ நுால்களை எழுதினார்.

சிவன் மலையில் உள்ள குகையில் தங்கி தவமிருந்தார். பின் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.சிவவாக்கியரின் பாடல்களில் ஞானக் கருத்துகள் அடங்கியுள்ளன. உடலில் ஓடும் உயிர் சீவன் என்னும் சிவன், சீவனே சிவன் என்றும், போலியான சித்தர்கள், பொய்யான மதகுருமார்கள் பெருகி வருவதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்

“ஆன்மிகத்தில் உண்மை, நேர்மை தழைத்தோங்க வேண்டும் என்பதை சிவவாக்கியர் வரலாறு மூலம் தெரிந்து கொண்டது எங்கள் பாக்கியம்” என மகேஸ்வரர், பார்வதியை வணங்கினார்.



- விளையாட்டு அடுத்த வாரம் முற்றும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us