ADDED : ஆக 13, 2026 08:25 AM

தீமையும் சிகரெட்டும்
“கொஞ்ச நாள் மூச்சு விடக் கஷ்டமா இருந்தது. டாக்டர்கிட்ட போனேன். அவரு ஏதோ டெஸ்ட் எல்லாம் பண்ணிட்டு என் நுரையீரல்ல கேன்சர் இருக்கலாம்னு பயமுறுத்தறாரு. இன்னும் நிறைய டெஸ்ட் எழுதிக் கொடுத்திருக்காரு.
எனக்கு ஒரே பொண்ணு சார். பெரிய இடத்துல கல்யாணம் செஞ்சி கொடுத்தேன். பத்து வருஷமாச்சு, குழந்தையில்ல. இப்போ மாப்பிள்ளை பிரச்னை பண்றாரு. டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்காரு. நான் மனசறிய ஒரு பாவமும் செஞ்சதில்ல.
பச்சைப்புடவைக்காரியைத் தவிர வேறு தெய்வத்தை கும்பிட்டதில்லை. வாரம் தவறாம கோயிலுக்குப் போறேன். எனக்கு ஏன் சார் இப்படியெல்லாம் நடக்கணும்? பச்சைப்புடவைக்காரிக்கு இதயமே இல்லையோ? நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு அவளால பாகுபடுத்திப் பாக்க முடியாதா?”
என்னிடம் இப்படி எல்லாம் புலம்பியவர் முருகேசன். வயது 52. ஒரு பெரிய தனியார் நிறுவனத் தலைவரின் நேர்முக உதவியாளராக இருக்கிறார். அவரை எப்படி தேற்றுவது எனத் தெரியவில்லை. தொடர்பு விவரங்களை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.
இது நடந்து மூன்று நாள் கழித்து ஒரு பரபரப்பான காபிக் கடையின் வெளியே நின்றபடி காபி குடித்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் நின்றவர்கள் எல்லோரும் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். என்னால் அந்த நெடியைத் தாங்க முடியவில்லை. பல முறை இருமல் வந்தது. விலகி நிற்கவும் இடம் இல்லை. பாதி குடித்த காபியை வைத்து விட்டு காரை நோக்கி ஓடினேன்.
காரில் ஒய்யாரமாகச் சாய்ந்தபடி ஒரு பெண் நின்றிருந்தாள்.
“கொஞ்சம் விலகிக்கிட்டீங்கன்னா...”
“என்னால் எப்படியப்பா உன்னிடமிருந்து விலக முடியும்?”
தன்னுடைய அழகான சிரிப்பின் மூலம் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாள் பச்சைப் புடவைக்காரி.
“முருகேசனின் பிரச்னை உன்னை வாட்டுகிறதோ? அவனுக்காக என்னிடம் என்ன கேட்பது எனத் தெரியாமல் விழிக்கிறாயோ?”
நான் தலை குனிந்தேன்.
“முருகேசன் பெரிய பாவங்கள் செய்திருக்க வேண்டும், தாயே. இல்லாவிட்டால்...''
“துன்பப்படுபவர்களைப் பார்த்து அவர்கள் பாவம் செய்திருக்க வேண்டும் என அனுமானம் செய்வது அரக்கத்தனம். அவன் பாவம் செய்யவில்லை. என்றாலும்...''
நான் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“வெள்ளிக்கிழமை அவனை அழைத்துப் பேசு”
“என்ன பேச வேண்டும்?”
“தன்னால் தெரியும்”
வெள்ளிக்கிழமை மாலையில் முருகேசன் வந்தார். என் வலது கையைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். அவருடைய கண்ணீர் என் புறங்கையில் பட்டது. அந்தக் கணத்தில் எல்லாமே புரிந்து விட்டது.
“எனக்கு ஏதாவது வழி இருக்கா, இல்ல, நான் இப்படியே அழிய வேண்டியதுதானா? திரும்பின பக்கம் எல்லாம் பிரச்னையா இருக்கே?”
“பிரச்னை இருக்கற பக்கமாப் பாத்து நீங்க திரும்பியிருக்கீங்க”
“புரியலையே.”
“உங்க பாஸ் யாரு?”
“ஆர்.எம்.இண்டஸ்ட்ரீஸ் எம்.டி., நாகலிங்கம்”
“அவர் ஆளு எப்படி?”
“என்னைப் பொறுத்த மட்டுல சொக்கத் தங்கம். முப்பது வருஷமா அவர்கிட்ட வேலை செய்யறேன். என்னைக் கேக்காம எதுவும் செய்ய மாட்டாரு. அவர் செலவுல எனக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்காரு. என்மகளோட கல்யாணச் செலவுல பாதிக்கு மேல ஏத்துக்கிட்டாரு”
“அவரு சிகரெட் பிடிப்பாரா?”
“செயின் ஸ்மோக்கர். ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட். அத நான் எப்படி சார் கேக்க முடியும்?”
“ஒரு நாள்ல பாதிநேரம் அவர் ரூம்ல தானே இருப்பீங்க?”
“ஆமா”
“அதனாலதான் நுரையீரல்ல பிரச்னை வந்திருக்கு. பாஸிவ் ஸ்மோக்கிங்னு சொல்வாங்க. அதனாலதான உங்க நுரையீரல் கெட்டுப் போயிருக்கு. கேன்சரோன்னு டாக்டர் சந்தேகப்படறாரு”
முருகேசன் ஒன்றும் பேசவில்லை.
“நாகலிங்கம் உங்களுக்குத்தான் நல்லவரு. மத்தபடி ஊர அடிச்சி உலையில போடற டைப். பல வருஷங்களுக்கு முன்னால ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்து நாகலிங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பிச்சாரு. நாகலிங்கம் எக்குத் தப்பா மாட்டிக்கிட்டாரு. கடைசில அந்த அதிகாரிய ஆளு வச்சிக் கொன்னுட்டாரு”
“கேள்விப்பட்டேன் சார். ஆனா...''
“அந்தப் பாவத்துல சிறு பகுதி உங்களுக்கும் உண்டு. நாகலிங்கம் எத்தனையோ பெண்களை கெடுத்திருக்காரு”
“அவருக்குக் கொஞ்சம் பொம்பளை வீக்னஸ் உண்டுன்னு தெரியும்”
“அது வீக்னஸ் இல்ல, வெறி. தன் ஆசைக்கு இணங்காத எத்தனையோ பொண்ணுங்களக் கற்பழிச்சு இருக்காரு, கேச மறைக்க பல பேருக்கு லஞ்சம் கொடுத்திருக்காரு. அதை நீங்கதான் கொண்டு போய்க் கொடுப்பீங்க.
“நீங்க ரொம்ப நாணயமானவரு. திருட மாட்டீங்க. அதனாலதான் நாகலிங்கத்துக்கு உங்களப் பிடிச்சிப் போச்சு. வீடு கட்டி கொடுத்தாரு, உங்க மக கல்யாணத்துக்குப் பணமும் தந்தாரு. ஆனா நாகலிங்கத்தால கெடுக்கப்பட்ட பொண்ணுங்க கொடுத்த சாபத்துல சிறு பகுதி உங்களையும் தாக்குது. அதுதான் உங்க மக வாழ்க்கையோட விளையாடுது”
“இப்போ என்ன சார் செய்யறது?”
“கேன்சருக்கான டெஸ்ட்ட பண்ணிக்கங்க. கேன்சர்னு சொல்வாங்க. அதையே காரணமா காட்டி நாகலிங்கத்துக்கிட்டருந்து விலகிடுங்க. முடிஞ்சா வேற ஊருக்குப் போயிருங்க. நாகலிங்கம் கொடுத்த வீட்டயும் வித்திருங்க. உங்க கையில நெறைய பணம் இருக்கும். அத வச்சிக்கிட்டு நல்லது பண்ணுங்க. நாகலிங்கத்துக்கிட்டருந்து விலகினாலே பிரச்னை சரியாயிரும். நோய் குணமாகவும் நிறைய வாய்ப்பு இருக்கு”
முருகேசன் மலைத்துப் போனார்.
“முருகேசன், கெட்டது செய்யறது சிகரெட் பிடிக்கற மாதிரி. பக்கத்துல இருக்கறவன் சிகரெட் பிடிச்சா நம்ம நுரையீரலும் பாதிக்கும். அதனால கெட்டதை விட்டு தள்ளி இருங்க. பச்சைப்புடவைக்காரி உங்களை கைவிட மாட்டா”
அன்று மாலை நான் கோயிலுக்கு நடந்து சென்றேன். வாழைப்பழம் விற்பவள் என்னை வம்புக்கிழுத்தாள்.
“என்ன, முருகேசன் பிரச்னைக்குத் தீர்வு சொல்லிவிட்டாய் போலிருக்கிறதே”
நான் அவளை விழுந்து வணங்கினேன். அடுத்து என்ன வேண்டும் எனக் கேட்பாள். பதில் தயாராக இருந்தது. ஆனால் கேள்விதான் வரவில்லை.
“வழக்கமாக உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்பீர்களே”
“நீ என்ன கேட்கப் போகிறாயோ அதை உனக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.”
நான் முழித்தேன்.
“அன்று கடையில் பாதி குடித்த காபியை தியாகம் செய்து விட்டு வந்தாயே ஏன்”
“பக்கத்தில் இருந்தவர் எல்லோரும் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். நெடி தாங்க முடியவில்லை என்று...''
“ஆக, அருகில் தீமை இருக்கிறது என்பதை உணரும் ஆற்றலும் அதிலிருந்து வேகமாக விலகிச் செல்லும் மன உறுதியையும் உனக்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். முருகேசனைப் போல் புற்று நோய் வரும் வரை நீ காத்திருக்கவில்லையே”
அவளை விழுந்து வணங்கினேன். நிமிர்ந்தபோது அவள் அங்கு இல்லை.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
