ADDED : ஆக 13, 2026 08:26 AM

குசேலரைப் போலே...
அபார்ட்மெண்ட் பூங்காவில் கிருஷ்ணவேணியும் அமிர்தமும் நிதானமாக காரப்பொரியை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“வானம் மேக மூட்டமாக இருக்கும் போது இந்த காரப்பொரி சாப்பிடுவது அத்தனை சுகமா இருக்கு. ஆமா... போன சந்திப்பில் கண்ணனின் தோழர் யார் எனக் கேட்டிருந்தீங்களே, அது குசேலர் தானே?” என கேட்டார் அமிர்தம்.
“சரியா சொன்னீங்க. நீங்க கொடுத்த காரப்பொரியைப் போலவே குசேலர் தன் நண்பன் கிருஷ்ணனுக்காக அவல் பொரியை கொடுத்தார்”
“சின்ன வயசுல கேட்ட ஞாபகம். விரிவா சொல்லுங்க கேட்போம்” என ஆர்வமானார் அமிர்தம்.
“பெண் பிள்ளை ராமானுஜரிடத்தில் 26வது வாக்கியமான அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே பற்றி சொல்கிறாள். குசேலரின் இயற்பெயர் சுதாமா. கிருஷ்ணனும் சுதாமாவும் சாந்தீபனி முனிவரிடம் குருகுல முறையில் கல்வி கற்றனர். இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். சுதாமா பிறந்த ஊர் தான் சுதாமாபுரி. அந்த ஊர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ளது. எளிய பிராமண தம்பதிக்கு பிறந்த இவர் ஞானத்தில் சிறந்து விளங்கினார். அதோடு கிருஷ்ணனின் கடவுள் தன்மையை அறிந்திருந்தார்.
சாந்தீபனி முனிவரின் மனைவி இட்ட பணிகளை எல்லாம் இருவரும் இணைந்தே செய்தனர். நட்பு நாளுக்கு நாள் வளரவே, சுதாமா கிருஷ்ண பக்தியில் திளைத்தார். குருகுல கல்வி முடிந்ததும் சுதாமா சொந்த ஊருக்குச் சென்று சுசீலை என்ற பெண்ணை மணந்தார். தினசரி பிச்சை பெற்று ஏழையாகவே வாழ்ந்தார். அவர் அணிந்த கிழிந்த ஆடையைக் கொண்டு குசேலர் என்றே அழைத்தனர்.
குசேலர் என்றால் கிழிந்த ஆடையை அணிந்தவர் என பொருள்.
இடைப்பட்ட காலத்தில் கிருஷ்ணர் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கம்சனை அழித்த பின்னர் வடமதுரையின் மன்னர் ஆனார். பின்னர் அங்கிருந்து துவாரகையில் பெரிய மாளிகை கட்டி ருக்மணியுடனும் மற்ற மனைவியர்களுடன் வாழ்ந்தார். சுதாமாபுரியில் குசேலர் ஏழ்மையில் வாடினார்.
ஆனாலும் குசேலர், சுசீலை தம்பதி இல்லறத்தை இனிதே நடத்தினர். அவர்களுக்கு 27 பிள்ளைகள் இருந்தனர். வறுமையிலும் கிருஷ்ண பக்தி குறையவில்லை. அவ்வப்போது தனக்கு கிடைத்த சிறிய வருமானத்தை கொண்டே திருப்தி அடைந்தார்.
ஏனெனில் இவ்வுலக வாழ்க்கையை விட மறுமைக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அந்தப் பரம்பொருளே நண்பனாக கிடைத்ததை பெரிதாக நினைத்தாரே தவிர பணம் இல்லாததை குசேலர் பொருட்படுத்தவில்லை.
கிருஷ்ணரோ துவாரகைக்கு தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு எல்லாம் அவர்களின் குறையை தீர்த்து வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். இதை அறிந்த சுசீலை தயக்கமுடன், 'உங்களின் நண்பர் கிருஷ்ணர் துவாரகையின் மன்னராக இருக்கிறாரே, அவர் நம் வறுமையைப் போக்க உதவி செய்வார் என சொன்னாள்.
மனைவியின் வற்புறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும் கிருஷ்ணரை பார்க்க வாய்ப்பு இது என மகிழ்ந்தார். அதனால் துவாரகைக்குச் செல்ல முடிவு செய்தார். ஆனாலும் வெறுங்கையுடன் எப்படி பார்க்கப் போவது? அதனால் சுசீலை தன் தோழிகளிடம் இருந்து அவல் பொரியை சேகரித்து வந்து சுதாமாவிடம் கொடுத்தாள். அதை ஒரு துணியில் முடிந்து கொண்டு புறப்பட்டார்.
ஒரு மார்கழி மாதத்தின் முதல் புதன்கிழமையில் கிருஷ்ணரை சந்தித்தார் சுதாமா. பெரும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் கிருஷ்ணர் அவரை வரவேற்றார். மிகப்பெரிய ஆசனத்தில் குசேலரை உட்கார வைத்து அழகு பார்த்தார்.
பணிப்பெண்கள் எல்லாம் சுதாமரைப் பார்த்து வியந்தனர். ஆனால் அவருக்கோ வியர்த்தது. கிருஷ்ணர் விசிறியால் வீசினார். மிக அதிக துாரம் நடந்து வந்திருக்கிறாயே என சுதாமாவின் பாதங்களை நீரால் கழுவி தன் தலையில் தெளித்துக் கொண்டார் கிருஷ்ணர். பிறகு உடல் முழுவதும் சந்தனத்தை பூசினார்.
அண்ணி சுசீலை எனக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தனுப்பினார்களா, அதை கொடு என கையேந்தினார் கிருஷ்ணர். இதைக் கண்ட ருக்மணிக்கு கோபம் வந்தது. இதற்கிடையில் குசேலர், தான் கொண்டு வந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். கிருஷ்ணரோ நண்பரின் இடுப்பிலிருந்து துணியை பறித்து திறந்து பார்த்தார். 'அடடே! அவலா, எனக்கு ரொம்ப பிடிக்குமே' என கைபிடி அவலை வாயில் போட்டுக் கொண்டார். இரண்டாவது பிடியை எடுக்கும் போது ருக்மணி தடுத்தாள். குசேலர் அன்றிரவு அங்கேயே தங்கி விட்டு மறுநாள் காலையில் புறப்பட்டார்.
தான் வந்த காரணத்தை சொல்லாமல் திரும்பி போகும் வழியில் கிருஷ்ணரின் அன்பை நினைத்து உருகியபடி ஊர் வந்து சேர்ந்தார். அவருடைய வீடான குடிசை இருந்த இடத்தில் பெரிய அரண்மனை இருந்தது. குசேலரின் மனைவி அரண்மனையில் இருந்து வெளியே வந்தாள். பட்டுப்புடவையும் நகைகளும் அணிந்து கொண்டு மகாராணி போல இருந்ததால் குசேலருக்கு அடையாளம் தெரியவில்லை.
கேட்காமலேயே எனக்கு வேண்டியது கொடுத்திருக்கிறானே என கிருஷ்ணனை நினைத்து உருகினார். அந்த குசேலரை போல கிருஷ்ணனுக்கு அன்புடன் அவல் பொரியை நான் கொடுக்கவில்லையே, எனக்கு இந்த ஊரில் தங்கி இருக்க எந்த தகுதியும் இல்லை, அதனால் போகிறேன் சுவாமி என்றாள் பெண் பிள்ளை'' என வேகமாக சொல்லி முடித்தார் கிருஷ்ணவேணி.
''குசேலர் கொடுத்த அவல் பொரியை வாயில் போட்டதும் குசேலரின் வீடு மாளிகையான மாதிரி நீங்க கொடுத்த காரப்பொரியை நான் சாப்பிட்டாலும் எந்த மாற்றம் இல்லாமல் உங்க அப்பார்ட்மெண்ட் அப்படியேதான் இருக்கும்” என சொல்லி சிரித்தார் கிருஷ்ணவேணி.
அமிர்தமும் சிரித்தபடியே, ''உண்மையான அன்போடு கொடுக்கிறதே பெரிய பரிசுதான். குசேலரின் அவல்பொரி அதிபத்தரின் வைர மீனை எனக்கு நினைவுபடுத்துகிறது” என்றார்.
''வைரம் போன்ற மீனா? அல்லது வைரத்தாலான மீனா?” என சந்தேகத்தை கேட்டார் கிருஷ்ணவேணி.
“இதோ சொல்றேன். சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீனவ மக்களின் தலைவராக வாழ்ந்தவர் தான் அதிபத்தர். இவர் தன் வலையில் சிக்கும் முதல் மீனை, 'இந்த மீன் சிவபெருமானுக்கு உரியது' எனச் சொல்லி கடலில் விடுவது வழக்கம். நாளடைவில் இவரது வலையில் சிக்கும் மீன்கள் குறைந்து கொண்டே வந்தது. இதனால் அதிபத்தர் வறுமையில் வாடினார். ஆனாலும் அவர் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணிப்பதை நிறுத்தவே இல்லை.
காலப்போக்கில் அவரது உடலும் தளர ஆரம்பித்தது. ஒருநாள் உடல்நிலை சரியில்லாத நிலையில் மீன் பிடிக்க சென்றார். அன்று பார்த்து அவர் வீசிய வலையில் நவரத்தினம் பதித்த தங்க மீன் சிக்கியது. அருகில் இருந்தவர்கள் இந்த மீனை எடுத்துச் சென்றால் உங்கள் வம்சமே செல்வ செழிப்பாக வாழும் என்றனர்.
ஆனாலும் தங்க மீனை பார்த்தாலும் அதிபத்தரின் மனம் ஆசைப்படவில்லை. அதை சிவனுக்குரியது எனச் சொல்லி கடலில் விட்டார். அதைக் கண்ட அவர்கள் வாயடைத்து நின்றனர். அப்போது சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளித்து அவருடைய வறுமையை போக்கினர்'' என முடித்தார் அமிர்தம்.
''குசேலரும், அதிபத்தரும் வறுமையில் வாடினாலும் நட்புக்காகவும் பக்திக்காகவும் காட்டிய அக்கறையும், அன்பும் ரொம்ப உயர்வானது. இது போன்ற வரலாறு நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது''
''காரப்பொரி சாப்பிட்டதோட பிரசாதம் வாங்கலாம் வாங்க. கோயில்ல மணி சத்தம் கேட்குது” என்ற அமிர்தம் கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் உள்ள சிவன் கோயிலை நோக்கி நடந்தனர்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
