தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 40

சித்தர்களின் விளையாட்டு - 40

சித்தர்களின் விளையாட்டு - 40


ADDED : ஆக 13, 2026 08:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 08:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண் சித்தர் ஊர்வசி

“மகேஸ்வரரே! பெண்களில் சித்தர்கள் இல்லையா?” என நாரதர் கேட்க பார்வதி குறுக்கிட்டு “நாரதரே! நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

“பார்வதி பதில் சொல்ல ஆசைப்படுகிறார் போல” என்றார் மகேஸ்வரர் .

“அர்த்த நாரீஸ்வரரான தங்களை விட பெண்ணை மதிப்பவர் உலகில் உண்டோ?” என்றார் பார்வதி.

“ராஜவாழ்க்கை, யோகவாழ்க்கையை அனுபவித்த ஊர்வசி, யோக, ஞான, வைத்திய, குறிப்புகளை எழுதி வைத்தார். அவரே முதல் பெண் சித்தர்” என மகேஸ்வரி கூற நாரதர் வியப்பில் ஆழ்ந்தார்.

“தேவலோக ஊர்வசியைப் பற்றியா குறிப்பிடுகிறீர்கள்! வேதம் போற்றும் ஊர்வசி, தமிழுக்குத் தொண்டு செய்தாரா'' என நாரதர் திகைத்து நிற்க, பார்வதி புன்னகைத்தபடி ஊர்வசியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“நாரதரே! பெயர்கள் பலவிதம். ஆனால் பொருள் என்னவோ ஒன்றுதான். சிவன் பல பெயர்களில் திருவிளையாடல் நடத்தவில்லையா? அதுபோல ஊர்வசியை பெண் சித்தராக அவதரிக்க வைத்தவர் சிவனே” எனக் கூற நாரதர் ஆர்வமானார்.

ஒருமுறை இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டது. இந்திரன் இடி, மின்னல், புயல் மழையை வரவழைக்க, வருணன் கடல்நீரை மேகமாக மாற்றி பூமியை இருட்டாக்கத் தொடங்கினார். இதனை அறிந்த தேவர்கள் ஒன்று கூடி சிவனிடம் முறையிட்டனர்.

வருணன் மேகங்களை ஒன்றோடொன்று மோத செய்ய, சீற்றமடைந்த இந்திரன் பூமியை கருகச் செய்யும் பெரிய மின்னலை தோற்றுவித்தார். சரியாக அதே நேரம் சிவன் தேவலோக மங்கை ஊர்வசியை தரையிறங்க வைத்தார். இருட்டாக இருந்த பூமியில் பிரகாசமும், அழகும் உடைய ஊர்வசியைக் கண்டு இந்திரனும், வருணனும் மெய்மறந்தனர்.

உடனே மழை குறைந்தது. கருமேகங்கள் விலகின. வெயில் வந்தது. அங்கே ஊர்வசி நின்றிருந்தாள். தங்களைக் காப்பாற்றிய ஊர்வசிக்கு மக்கள் நன்றி கூறினர்.

ஊர்வசி மக்களை நோக்கி “உலக இயக்கத்தின் அடிப்படை காரணமான ஐம்பூதங்கள் ஆக்ரோஷம் கொள்ளும் போது பூமியில் பல மாற்றங்கள் நிகழும். அவ்வாறு தோன்றுவதுதான் பூநீறு, அண்டக்கல், வழலை போன்ற மருந்துகள். இவை ரசவாதத்திற்கும் ஆயுளை நீட்டிக்கும் காயகற்ப மருந்துகள் செய்வதற்கும் உதவக் கூடியவை. ஒவ்வொரு முறை இயற்கை சீற்றத்தின் போதும் பூமித்தாய் மின்னலைத் தாங்கி, அண்டக்கல்லாக நமக்கு காட்சியளிக்கிறார். சித்த மருத்துவத்தின் ரசவாதம் பற்றி தங்களுக்குச் சொல்லவே சிவனருளால் இங்கு வந்திருக்கிறேன்” என்றார்.

ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டி பதஞ்சலி சித்தர், போகரை வணங்கி, அவர்களை குருவாக ஏற்று மருத்துவத்தை கற்றுக் கொண்டார். 18 சித்தர்களை தரிசித்து ஆசி பெற்று திருவள்ளுவ நாயனாரின் ஞானவெட்டியான் என்ற நுாலில் உள்ள யோக ஞானக் குறிப்புகளை கற்றார் ஊர்வசி.

“யோகி என்பவர் ஆசைகளைக் கடந்து வாழ வேண்டும். அதற்கு ஆசையை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் மனதையும், மூச்சையும் அடக்கி ஆள முடியும். மூச்சை அடக்கி ஆளத் தெரிந்தால் சிவனின் அருள் கிடைக்கும்.

அது மட்டுமன்றி யோகக்கிரியை கற்று தீட்சை பெற்றவர்களின் உருவம் கண்ணாடி போல் தெளிந்து விடும். மனதில் பாரம் இல்லாததால் உடல் எடையின்றி லேசாக மாறிவிடும். ஆதாரங்கள் மூலமாக வாசி என்ற மூச்சை அடக்கும் கலையை கற்றுக் கொண்டால் சாதாரண மனிதர்களும் யோகியாகலாம்” என மக்களுக்கு அறிவுரை கூறி பிராணாயாம கலையை கற்றுக் கொடுத்தார்.

“பிறப்பு என்பது கடல் அலை போல. முன்னே வரும் அலை 'பிறப்பு', பின்னே செல்லும் அலை 'இறப்பு'. இந்த சமுத்திரம் பிறப்பையும், இறப்பையும் தாங்கியிருக்கிறது.

இந்த பிறப்பின் மூலமாக ஆசையை அடக்கி, பேரின்பம் அடைய விடாமல் தடுக்கும் பாசத்தை நீக்கி பதியை அடையும் கலையைக் கற்றுத் தேற பதினாறு கலைகளிலும் சுவாசத்தை நிறுத்த வேண்டும்.

இடகலை என்ற இடது நாசி, வடகலை என்ற வலது நாசி தவிர சுவாசம் ஓடும் எஞ்சிய பதினான்கு கலைகளிலும் உள்ள கதவுகளை பூட்டி சுவாசத்தை பதினாறு பக்கங்களிலும் நிறுத்தி வர மதி அமுதம் உண்ணலாம் என்ற சுவாசக் கலையை விளக்கும் பஞ்ச ரத்தினம் என்ற மருத்துவ நுாலையும் இயற்றினார்” என பார்வதி சொல்ல நாரதர் வியப்பில் ஆழ்ந்தார்.

“அம்மையே! சித்தர்களில் பெண்கள் உண்டு என்பதை இதுவரை அறியவில்லை. ஆனால் உலக மக்களைக் காப்பதற்காக சிவனின் திருவிளையாடலால் ஊர்வசி அவதரித்ததை அறிந்து வியப்பில் ஆழ்ந்தேன்” என நாரதர் சொல்ல பார்வதி சிரித்தபடி, “ஊர்வசி மட்டும் அல்ல. 48 பெண் சித்தர்கள் அவதரித்துள்ளனர். அவர்களின் தலைவர் ஊர்வசி. பெரிய ஞானக்கோவை படித்துப் பாரும். எல்லாம் புரியும்” என முடித்தார்.

பூலோக மக்களை காப்பதற்காக அவதரித்த ஊர்வசி அனைவரும் நோயின்றி வாழவும், அவர்களின் ஆரோக்கியம் மேம்படவும், ரசவாதம், யோகம், மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை விளக்கும் நாற்பத்தியெண்மர்கள் ஈண்டிய ஊர்வசி வைத்திய சிட்கா, ஊர்வசி ரசவாத சிட்கா, ஊர்வசி பஞ்ச ரத்தினம் போன்ற நுால்களை எழுதினார்.

மக்களுக்கு நன்மை செய்யவும், அறவழியை காட்டவும் அவதரித்தவர்கள் சித்தர்கள். மக்களின் நல்வாழ்விற்காக செயற்கரிய செயல்களை செய்பவர்கள். சித்தர்களில் ஆண், பெண் பேதமில்லை.

ஆன்மிக சித்தர்கள், மருத்துவ சித்தர்கள், யோக சித்தர்கள், ஞான சித்தர்கள், வாத சித்தர்கள் பல உண்டு. சித்தர்கள் தாங்கள் கற்றுத் தேர்ந்த பாதையில் மக்களை வழிநடத்திச் செல்கின்றனர். சித்தர்கள் எந்த ஆதாயத்தையும் எதிர்பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல. பிறரை பழித்து பேசவோ, ஏளனம் செய்யவோ, அழிக்கவோ நினைக்கவில்லை. ஆகையால்தான் சித்தர்களை கடவுளுக்கு இணையாக மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காரைக்கால் அம்மையார், அவ்வையார், சாவித்திரி, வாசுகி எனப் பல தன்னலமற்ற பெண்கள் இந்த உலகத்திற்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பல தியாகங்களை செய்து சித்தர்களாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

அது மட்டுமல்ல, இப்பூவுலகில் ஒவ்வொருவர் வீட்டிலும் பாட்டியாக, தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக, பேத்தியாக பல தியாகங்கள் செய்து, தங்கள் குடும்பத்தின் துாண்களாக, வாழ்க்கை வழிகாட்டியாக, நிற்கும் பெண்கள் தங்கள் அறப்பணியால் சித்தர்களாகத் திகழ்கின்றனர்.

“அதுமட்டுமா! என் மனதை அறிந்தவளாய்... என்னவளாய்... இந்த உலகத்தை இயக்கும் சக்தியாய்... என்னில் பாதியாய்... என்றும் இணைந்திருக்கும் என் பிரியமான பார்வதியும், நான் கைக்கூப்பி வணங்கும் பெண் சித்தர்தான்” என குறும்பாக பார்த்தபடி மகேஸ்வரர் சொல்ல, நாணத்துடன் பார்வதி புன்னகைத்தார்.

“மகேஸ்வரரே! என்னை தாங்கள் என்றும் விட்டுக் கொடுத்ததில்லை. என்னில் பாதியை உங்களிடம் ஏற்று, ஆணும் பெண்ணும் சமம் என்பதை, இந்த உலகம் என்றும் அறியத்தானே அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிக்கிறீர்கள். அதுவே எனக்கு கிடைத்த பாக்கியம்” என பார்வதி வணங்கினார்.

“மனதில் மாசில்லாமல் துாய மனதுடன் வாழும் எல்லோரும் சித்தர்களே. இன்னும் கோடான கோடி சித்தர்கள் இப்பூவுலகில் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் கடவுளுக்கு இணையாக என்றென்றும் போற்றப்படுபவர் என சித்தர்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்கிய தங்கள் இருவரையும் வணங்குகிறோம்” எனக் கூறி நாரதர் விடை பெற்றார்.

- விளையாட்டு முற்றும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us