ADDED : செப் 18, 2026 07:58 AM

கச்சிதமான கணக்கு
என் அறைக்குள் கோபமாக நுழைந்த இளம் பெண் மணக்கோலத்தில் இருந்தாள். பட்டுப்புடவை. கழுத்து நிறைய நகைகள்.
“நான் ஹாசினி. இன்னிக்குக் கல்யாணம் நடக்க வேண்டியது, நின்னு போச்சு” ஹாசினி கத்தினாள்.
“பச்சைப்புடவைக்காரிதான் எங்க குல தெய்வம். இந்த கல்யாணத்துக்குக்கூட முதல்ல அவளுக்குப் புடவை சாத்திட்டுத்தான் எனக்கே புடவை எடுத்தாங்க. தாலிய அவ கால்ல வச்சி வாங்கினோம். கல்யாணம் நல்லபடியா நடக்க நாங்க எல்லாரும் விரதம் இருந்தோம். பச்சைப்புடவைக்காரி கல்யாணத்த தடுத்துட்டா. அவ கொலைகாரி. ராட்சசி”
அழுகையை அடக்கிக் கொண்டு பலவீனமான குரலில் கேட்டேன்.
“என்னாச்சு?”
“காலேஜ் படிக்கும்போது ஒரு ராஸ்கலக் காதலிச்சேன். ஆனா கையப் பிடிச்சிக்கிட்டுப் பேசினதை தவிர எங்க அம்மா சத்தியமா வேற எதுவும் நடக்கல. அவன் ஒரு பொறுக்கின்னு தெரியவே விலகிட்டேன். நாங்க எடுத்துக்கிட்ட செல்பிய வச்சு அந்த தடியன் நாங்க நெருக்கமா இருக்க மாதிரி ஏ.ஐ.,ல வீடியோ தயாரிச்சி அத மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிச்சிட்டான். அதுவும் சரியா இன்னிக்குக் காலையிலதான் வந்தது. நடந்தது என்னன்னு தெரியாம அவங்க காச் மூச்சுன்னு கத்தி கல்யாணத்த நிறுத்திட்டாங்க. என் கல்யாணத்துக்கு இன்னிக்கு 500 பேர் வந்திருந்தாங்க. என் கல்யாணம் நின்னு போனது ஊருக்கே தெரிஞ்சி போச்சு. இனிமே எனக்கு எப்படி கல்யாணம் ஆகும்?”
நான் விழித்தேன்.
“இப்போ போறேன். நாளைக்கு வருவேன். என் வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டலேன்னா என் தற்கொலைக்குப் பச்சைப் புடவைக்காரியும் நீங்களும்தான் காரணம்னு எழுதி வச்சிட்டுச் செத்திருவேன்”
பல மணி நேரம் பித்துப் பிடித்தவனைப் போல் அமர்ந்திருந்தேன்.
பின் மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். இரண்டு தெருக்கள் தாண்டியிருப்பேன். வேகமாக வந்த ஒரு கார் என்னை உரசாத குறையாக வந்து நின்றது.
“மீனாட்சியம்மன் கோயில் இப்போ திறந்திருக்குமா?” காரை ஓட்டிக் கொண்டு வந்தவள் தோரணையாகக் கேட்டாள்.
மணியைப் பார்த்தேன் 12:20.
“இப்போ திறந்திருக்கும். ஆனா நீங்க அங்க போறதுக்குள்ள மூடிருவாங்க”
“இங்க வாங்களேன். இந்த விலாசம் எங்கன்னு சொல்ல முடியுமா?”
இறங்கி வந்து கேட்க வேண்டிய உதவி அது. எரிச்சலுடன் அவள் அருகில் சென்றேன்.
“ஹாசினி புலம்பல் உலுக்கி விட்டதோ?”
தாயே கதறியபடி காலில் விழுந்தேன்.
“தப்பான ஆளைக் காதலித்து அதனால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டாள். அதற்கு நீங்கள் எப்படி காரணமாக முடியும் தாயே?”
“அவள் என் மீது வழக்கா தொடுத்து இருக்கிறாள்? நீ எனக்காக வாதம் செய்கிறாயா? அவளை நல்வழிப்படுத்தவே வந்திருக்கிறேன். நாளை அவள் தலையில் கையை வைத்து ஆசி வழங்கு. உன் மனதில் அன்பு இருந்தால் அவளுக்கு வழிகாட்ட முடியும்”
அன்றிரவு உணவைத் தவிர்த்து பச்சைப்புடவைக்காரியையே நினைத்துக் கொண்டிருந்தேன்.
மறுநாள் காலை ஹாசினி புயல் போல வந்தாள். கண்கள் சிவந்திருந்தன. கத்த ஆரம்பித்தாள். அவளிடம் சைகை காட்டி விட்டு எழுந்து சென்று அவள் தலையில் கையை வைத்து பிரார்த்தித்தேன். நடந்தது எல்லாம் தெரிந்துவிட்டது.
மீண்டும் பேச ஆரம்பித்த ஹாசினியைக் கையமர்த்தினேன்.
“உன் சாவுக்கு நானும் பச்சைப்புடவைக்காரியும் தான் காரணம்னு லெட்டர் எழுதிட்டியா”
ஹாசினி திடுக்கிட்டாள்.
“தப்பான ஆளக் காதலிச்ச. சரியான நேரத்துல அவன்கிட்டருந்து தப்பிச்சிட்ட. சரி. ஆனா நீ ஒரு ஆள மாட்டிவிட்டயே, அந்தக் கதை மறந்து போச்சோ”
ஹாசினியின் முகம் வெளிறியது.
“நீ பத்தாவது படிச்சிக்கிட்டிருந்த. படிப்பு சரியா வரல. அதனால கிளாஸ் டீச்சரான ராஜநாயகம் கிட்டயே டியூஷன் கத்துக்கிட்ட. அவரும் நல்லாவே சொல்லிக் கொடுத்தாரு. ஆனா உனக்கு படிப்புல கவனம் இல்ல. படிச்ச பாடம் மண்டையில ஏறல. பரீட்சை நடந்தது. ராஜநாயகம்தான் இன்விஜிலேட்டரா இருந்தாரு. அவருகிட்ட நீ டியூஷன் படிச்சதால பிட் அடிச்சா கண்டுக்க மாட்டாருன்னு நெனச்ச. அன்னிக்கு நிறைய பிட் கொண்டு போன. ராஜநாயகம் கையும் களவுமா பிடிச்சிட்டாரு. உன்னைப் பத்தி புகார் சொல்லப் போறேன்னு பயமுறுத்தினாரு. உடனே நீ தப்பிச்சி ஓடிப் போய் பிரின்சிபல்கிட்ட ராஜநாயகம் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணார்னு புகார் கொடுத்த.
“உன் பிரண்ட் பேச்சைக் கேட்டு அவர் மீது போலீஸ் ஸ்டேஷன்லயும் புகார் கொடுத்த. போக்சோ சட்டத்துல ராஜநாயகத்தை கைது பண்ணிட்டாங்க. நடந்த களேபரத்துல நீ காப்பி அடிச்ச விவகாரம் அப்படியே அமுங்கிருச்சி.
“நீ முக்கித் தக்கி பாஸ் பண்ணி காலேஜ் சேர்ந்து படிச்சி வேலைக்கும் சேர்ந்துட்ட.
“ராஜநாயகம் மேல மூணு வருஷம் கேஸ் நடந்தது. கடைசியில விடுதலை பண்ணிட்டாங்க. ஆனா அவரு வாழ்க்கையே போயிருச்சி. அவருக்கு மனைவி இல்ல. அவருடைய பிள்ளைங்க அவர ஒதுக்கி வச்சிட்டாங்க. ரிட்டயர் ஆகி, எந்தத் துணையும் இல்லாம, தனியா வாழ்ந்துக்கிட்டிருக்காரு. செய்யாத தப்புக்கு அவர் மீது பழியப் போட்ட. நீ செய்யாத தப்புக்கு உன் மீது பழி வந்திருச்சி. நீ செஞ்ச துரோகத்துக்கு உன்னை வெட்டிப் போட்டாலும் தப்பில்ல.
“இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து தற்கொலை லெட்டரை தயாரிக்கலாமா?”
ஹாசினி பெரிதாக அழுதாள்.
“இப்போ என்ன சார் பண்றது?”
“முதல்ல ராஜநாயகம் சார் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு”
“என் வாழ்க்கை?”
“பச்சைப்புடவைக்காரி பிச்சை போட்டான்னா வாங்கிக்கோ. நீ கிளம்பு”
என் மனம் அநியாயத்துக்குக் கனத்திருந்தது.
“போஸ்ட்” என்ற குரல் கேட்டு ஓடினேன்.
“ஹாசினிக்கு வழிகாட்டி விட்டாய் போலிருக்கிறதே”
அவள் காலில் விழுந்து வணங்கினேன்.
“ஒரு ரகசியம் சொல்லட்டுமா? அவளுக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையும் சரியில்லை. குடிகாரன். அவனது சிறுநீரகங்கள் பழுதடைந்து விட்டன. அதனால் தான் திருமணத்தை நிறுத்தினேன்”
என்னால் விம்மல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“உனக்கு என்னப்பா வேண்டும்?”
“வஞ்சனை செய்தவளையே வாழ வைத்து விட்டீர்களே! எந்தக் காலத்திலும் எந்த வரமும் வேண்டாத மனத்தைத் தான் உங்களிடம் யாசிக்கிறேன்”
பச்சைப்புடவைக்காரி மறைந்த பின்னும் சிரிப்புச் சத்தம் காதில் ஒலித்தது.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
