தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 24

பச்சைப்புடவைக்காரி - 24

பச்சைப்புடவைக்காரி - 24


ADDED : செப் 24, 2026 11:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 11:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

  வாழ வைத்த தெய்வம்

“நான் சந்திரா. கார்ப்பரேஷன் ஸ்கூல் டீச்சர். இது ஜெயஸ்ரீ. என் கிளாஸ்ல படிக்கறா.ஜெயஸ்ரீ உங்ககிட்ட ஏதோ கேக்கணுமாம்”

“கேளு, கண்ணு.”

“அங்க்கிள், நீங்க பச்சைப்புடவைக்காரி கிட்டப்பேசுவீங்களாமே” மவுனமாக இருந்தேன்.

“அடுத்த தரம் பச்சைப்புடவைக்காரியிடம் பேசறப்போ ஒரு வரம் கேப்பீங்களா, அங்க்கிள்”

“நிச்சயமா, கண்ணு”

“நான் உடனே செத்துப் போகணும்”

நான் அரண்டுவிட்டேன். என் கண்கள் நிறைந்துவிட்டன. சந்திராவைப் பார்த்தேன். அவள் கண்களும் குளமாகியிருந்தன. என்னைச் சுதாரித்துக் கொண்டு மெதுவாகக் கேட்டேன்.

“ஏம்மா, இப்படிப் பேசற ? நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சி ஒரு கலெக்டராகி...”

“அதெல்லாம் நடக்காது, அங்க்கிள்”

“ஏம்மா அப்படிச் சொல்ற?”

“அங்க்கிள், எங்கப்பா மூடை துாக்கறவரு. நாளெல்லாம் முதுகு வலிக்க மூடை துாக்கினா சாயங்காலம் ஐநுாறு ரூபா கெடைக்கும்.அத வச்சிக்கிட்டு ஏதோ வாழ்ந்துக்கிட்டிருந்தோம்...

“ஒரு நாள் ராத்திரி அப்பா துாங்கிய போது அவரோட முதுகப் பாத்தேன்... ஒரே புண்ணா இருந்துச்சி. நான் பயந்து போய்க் கத்திட்டேன். அப்பா எந்திரிச்சிட்டாரு. நான் புண்ணப் பத்திச் சொன்னேன்.

“மூடைத் துாக்கினா முதுகுல புண்ணு வரத்தாம்மா வரும். மருந்து போட்டுக்கறேன். நீ இதுக்கெல்லாம் கவலப்படாம நல்லாப் படிச்சி கலெக்டர் ஆயிரு. அதுக்கப்பறம் நான் ஏன் மூடை துாக்கணும்?”

“புண்ணா இருந்த எங்கப்பா முதுகு அப்படியே என் மனசுல ஆழமாப் பதிஞ்சி போயிருச்சி, அங்க்கிள்.

போன மாசம் ஸ்கூல்ல திடீர்னு மயங்கி விழுந்துட்டேன்.இவங்கதான் என்ன ஆஸ்பத்திரிக்குத் துாக்கிட்டுப் போனாங்க. அங்க ஒரு வாரம் இருந்தேன். எல்லாம் சரியாயிருச்சின்னு டாக்டர் சொன்னாரு. ஆனா அப்பாகிட்ட ஒரு லட்ச ரூபாய் பிடுங்கிட்டாங்க''

சந்திரா தொடர்ந்தாள். “இவங்கப்பா கிட்ட பணம் இல்ல. அதனால பத்து வட்டிக்குக் கடன் வாங்கித்தான் ஆஸ்பத்திரிக்குக் கட்டினாரு.”

ஜெயஸ்ரீ பேசினாள்.

“இப்போ அந்தக் கடனையும் வட்டியையும் அடைக்க எங்கப்பா இன்னும் அதிகமா மூடை துாக்கணும். அவர் முதுகுல இன்னும் நெறையப் புண்ணு வரும்.

“போன வாரம் திருப்பியும் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். எனக்கு ஏதோ தீராத வியாதி இருக்காம். அதுக்காக நான் தினமும் நாலு தரம் ஊசி போட்டுக்கணுமாம். நெறைய மருந்து சாப்பிடணுமாம். எல்லாம் சேர்த்து மாசம் எட்டாயிரம் ஆகுமாம். அதையும் எங்கப்பாதான் கொடுக்கணும். இதுக்குமேல புண்ணு வரதுக்கு அப்பா முதுகுல இடம் இல்ல, அங்க்கிள்”

விக்கித்துப் போய் அமர்ந்திருந்தேன். அடுத்து ஜெயஸ்ரீ பேசிய வயதுக்கு மீறிய வார்த்தைகள் என்னை உலுக்கிவிட்டன.

“தெரியாமத்தான் கேக்கறேன். நான் எங்கப்பாவோட பொண்ணா, இல்ல, புண்ணா?

“நான் செத்துப் போகணும்னு பச்சைப்புடவைக்காரிகிட்ட கேளுங்க. எங்கப்பா புண் இல்லாம நல்லா இருக்கட்டும், அங்க்கிள்”

“தாயே” நான் கதறினேன். கத்தினேன்.

சந்திராவும் ஜெயஸ்ரீயும் கிளம்பி விட்டார்கள்.

நான் வெளியேறினேன். மனம் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். பச்சைப்புடவைக்காரியின் கோயிலுக்குப் போக மனம் இல்லை. அவள் மேல் சிறிது கோபம் இருந்தது.

வாழ்க்கையில் துன்பம் இருக்கத்தான் செய்யும். துன்பமே வாழ்க்கையாக இருந்தால்...

பாலத்தில் ஏறி நடந்த போது எதிரில் ஒரு முதியவள் வந்தாள். அவள் கையில் நீளமான கம்பு இருந்தது. அவள் அருகில் சென்ற போது அந்தக் கம்பை என் காலில் வைத்து என்னை இடறச் செய்தாள். கீழே விழுந்து விட்டேன். கோபத்துடன் அவளைப் பார்த்தேன்.

அவள் அழகாகச் சிரித்தாள்.

“என்னப்பா செய்வது? கர்மக் கணக்கு என ஒன்று இருக்கிறதல்லவா? இன்று குறிப்பாக இந்த நேரத்தில் நீ என்னை விழுந்து வணங்கினால் நீ கேட்டது போல் ஜெயஸ்ரீயை வாழ வைக்கலாம் என நினைத்திருந்தேன். நீயோ கோபித்துக்கொண்டு கோயில் பக்கமே வர மாட்டேன் என சபதம் எடுத்துவிட்டாய். கோபமெல்லாம் பிள்ளைகளுக்குத்தான் தாய்க்கு இல்லை. நீ வராவிட்டால் என்ன... பச்சைப்புடவைக்காரியான நானே உன்னைத் தேடி வந்தேன். என் காலடியில் இடறி விழச் செய்தேன்”

“நாளை ஜெயஸ்ரீயை வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப் போகிறார்கள். அங்கே நடப்பதைப்பார்”

ஜெயஸ்ரீ பயந்து நடுங்கியபடி அந்த இளம் மருத்துவர் முன் அமர்ந்திருந்தாள். ஜெயஸ்ரீயின் தந்தை எதையும் மறைக்கவில்லை. தன்னுடைய மூடை துாக்கும் தொழில், சென்ற முறை ஒரு லட்ச ரூபாய் மருத்துவச் செலவானது, அதைக் கட்ட பத்து வட்டிக்குக் கடன் வாங்கியது, ஜெயஸ்ரீக்கு வந்திருக்கும் நோய் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.

ஜெயஸ்ரீ தன் தந்தையின் முதுகில் இருந்த புண்களைக் காட்டினாள்.

“டாக்டர் அங்க்கிள், எனக்கு ஏதாவது ஊசி போட்டுக் கொன்னுருங்க அங்க்கிள். என்னால அப்பா முதுகுல புண் வர வேண்டாம்”

டாக்டர் பல விநாடிகள் ஜெயஸ்ரீயையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். பின் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு யாரிடமோ போனில் பேசினார். ஐந்து நிமிடம் ஐந்து யுகங்களாகக் கடந்தன.

மருத்துவர் சிரித்தார்.

“சரியான நேரத்துல நீங்க வந்திருக்கீங்க. என் நண்பர் டாக்டர் நாதன் ஒரு அறக்கட்டளை நடத்திக்கிட்டிருக்காரு. இன்னிக்கு நம்ம ஊர்ல ஒரு கிளினிக் திறக்கறாங்க. அதுக்கு அவரும், சில தொழிலதிபர்களும் வந்திருக்காங்க. ஜெயஸ்ரீயப் பத்தி அவங்ககிட்ட சொன்னேன்.

'இனிமே ஜெயஸ்ரீக்கு இருபது வயசாகறவரைக்கும் அவளுடைய மருத்துவச் செலவ அந்த அறக்கட்டளை பாத்துக்கும். நீங்க கந்து வட்டிக்கு வாங்கின பணத்தத் திருப்பிக் கொடுக்கவும் ஏற்பாடு பண்றாங்க.

அடுத்த ஆறு மாசத்துக்கு உங்களுக்கு வேணும்ங்கற அரிசி பருப்பு, பலசரக்கு எல்லாம் கொடுத்திருவாங்க. அதுக்கப்பறம் உங்களுக்கு ஒரு பேக்கரில செக்யூரிட்டி வேலை தருவாங்க. நீங்க இனிமே மூடை துாக்கி கஷ்டப்பட வேண்டாம்”

தன்னுடைய உதவியாளரை அழைத்தார் மருத்துவர்.

“குமார், ஒரு ஆட்டோ பிடிச்சி இவங்கள கே.கே.நகரில இந்த அட்ரசுல கொண்டு போய் விட்டிரு”

மருத்துவர் எழுந்து நின்றதும் ஜெயஸ்ரீயின் குடும்பமே அவர் காலில் விழுந்தது.

இந்த முறை பச்சைப்புடவைக்காரி இடறி விடாமல் நானாகவே அவள் காலில் விழுந்தேன்.

“ஜெயஸ்ரீயின் குடும்பத்தைத் துன்புறுத்துவதற்காக இந்த நாடகத்தை நான் நடத்தவில்லை. அறக்கட்டளை நடத்தி வரும் நாதன், அவரிடம் போகச் சொன்ன அந்த இளம் மருத்துவர் என இவர்களின் மனதில் இருக்கும் அன்பைத் துாண்டிவிடத்தான் இந்த நாடகம். ஜெயஸ்ரீ ஒரு காலத்தில் பெரிய மருத்துவராகி மக்கள் சேவை செய்வாள். உனக்கு என்ன வேண்டும் என்று சொல்”

“இதுவரை நான் செய்த நல்வினைப் பயனை அந்த இளம் மருத்துவருக்கும், நாதனுக்கும் கொடுத்து விடுங்கள்”

“அப்புறம் நீ என்ன செய்வாய்?”

“எனக்குத்தான் நீங்கள் இருக்கிறீர்களே! உங்களை நினைத்தபடி நரகத் தீயில் வேகவும் நான் தயாராக இருக்கிறேன்”

பச்சைப்புடவைக்காரி மறைந்த பின்னும் அவளுடைய சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.



-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us