தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 33

பெண்பிள்ளை ரகசியம் - 33

பெண்பிள்ளை ரகசியம் - 33


ADDED : செப் 24, 2026 12:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவடியைப் போலே

கிருஷ்ணவேணியும் அமிர்தமும் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் கருட சேவை பார்க்கச் சென்றனர். கிருஷ்ணவேணி மாலையில் நடை பயிற்சிக்காக வந்த போதும் கருட தரிசனத்தை பற்றியே பேசினார்.

“ஆமா... கருட வாகனத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு” கேள்வியுடன் தொடங்கினார் அமிர்தம்.

“பெருமாளை துாக்கிட்டு போறதுல ரெண்டு பேரும் விசேஷமானவங்க. அவங்க பெரிய திருவடியான கருடன், சிறிய திருவடியான ஹனுமன். அதோட நாம இன்னைக்கு பேசப்போற பெண்பிள்ளை ரகசியத்தின் 32ம் வாக்கியமான கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலேவில் குறிப்பிடப்படுவதும் திருவடி பற்றித்தான்.

திருவடி என்பது பெருமாளை துாக்கிச் சுமக்கும், அதாவது அவரை அழைத்துச் செல்லும் நபரை குறிப்பது. வைணவத்தில் மொத்தம் இரண்டு திருவடி பெயர் போனவர்கள். பெரிய திருவடி என அனைவராலும் அன்பாக கூப்பிடப்படுபவர் கருடன். சிறிய திருவடி என பாசமாக கூப்பிடப்படுபவர் ஹனுமன். காசிப முனிவருக்கு கத்ரு, வினதை என இரண்டு மனைவிகள். கத்ரு பாம்பு இனத்தவள், வினதை பறவை இனத்தவள். வினதைக்கு அருணன், கருடன் என இரண்டு மகன்கள் பிறந்தனர்.

கத்ருவுக்கு ஆயிரம் பாம்புகள் மகன்களாக பிறந்தனர். இந்த இரண்டு மனைவிக்கிடையே பொறாமையால் தினசரி சண்டை வந்தது. ஒரு நாள் இந்திரன் இவர்களின் இருப்பிடத்திற்கு சிறிது துாரத்தில் குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த காட்சியைப் பார்த்த வினதை, 'அட! அழகிய வெள்ளை குதிரையாக இருக்கிறதே' என்றாள். அருகில் நின்ற கத்ரு, இது வெள்ளை குதிரை தான். ஆனால் வால் மட்டும் கருப்பாக இருக்கிறது என்றாள். உடனே வினதை அடி போடி, குதிரை முழுவதும் வெள்ளையாக தான் இருக்கிறது நீ சரியாக பார் என்றாள். கத்ருவும் விடுவதாக இல்லை.

'நீ என்ன இப்படி சொல்கிறாய்? நாளைக்கு அருகில் சென்று பார்க்கலாம் அப்போது யார் சொல்வது உண்மை என தெரியும்' என்றாள்.

பதிலுக்கு வினதை, 'அப்படியானால் என்ன பந்தயம்' என வம்படியாக கேட்டாள். 'நீ ஜெயித்தால் நான் உனக்கு அடிமை, நான் ஜெயித்தால் நீ எனக்கு அடிமை' என்றாள். வினதையை அடிமையாக்க கத்ரு சதித்திட்டம் தீட்டினாள். அன்றிரவே தன் மகன்களான கார்கோடன், மற்ற பாம்புகளும் குதிரையின் வாலை சுற்றிக் கொண்டன. அதனால் மறுநாள் அந்த குதிரையை பார்த்த போது வால் கருப்பாக இருந்தது. இதன் பின் கத்ருவின் அடிமையானாள் வினதை. அதன்பின் கத்ருவின் மகன்களான ஆயிரம் பாம்புகள் வினதையிடம், 'எங்களுக்கு அமிர்தத்தை கொண்டு வந்து கொடுத்தால் உனக்கு விடுதலை கொடுப்போம்' எனக் கூறினர்.

இதை தெரிந்து கொண்ட வினதையின் மகனான கருடன், தேவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை எடுத்து வரும் வழியில் திருமாலைக் கண்டார். 'என்ன கருடா இந்த பக்கம்' என பெருமாள் கேட்க கருடன் நடந்ததை சொன்னார். அதைக் கேட்ட திருமால், 'கருடா உனக்கு இப்போது என்ன வரம் வேண்டும்' எனக் கேட்டார்.

அதற்கு கருடன் நான் எப்போதும் உங்களுக்கு மேலே இருக்க வேண்டும் என்றார். திருமாலும் சம்மதித்தார். அதனால் தான் கோயில்களில் கருட கொடியாக உயரத்தில் இருக்கிறார். கருடன் வரம் வாங்கிய போது, 'நானும் ஒரு வரம் தருகிறேன். நீங்கள் கேளுங்கள்' என்றார் கருடன். உடனே பெருமாளும், 'நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும்' எனச் சொல்ல கருடனும் ஏற்றார். அதனால் தான் கருட கொடியில் மேலே பறந்தும், வாகனமாக பெருமாளை தாங்கிக் கொண்டும் இருக்கிறார் கருடன். எப்போதும் கருடனே பெருமாளின் முதன்மையான வாகனம். அதனால் அவருக்கு பெரிய திருவடி எனப் பெயர் வந்தது.

ஆனால் ராமாவதாரத்தில் மட்டும் ஹனுமனே எல்லா இடங்களுக்கும் கூட்டிச் சென்றார். அதனால் அவரும் திருவடி தான். ராம அவதாரத்தில் ஒரு நாள் ஹனுமன் 'சுக்ரீவன் மலை உச்சியில் ஒளிந்து கொண்டு இருக்கிறான், என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள்' என ராம லட்சுமணரை தோளில் ஏற்றிக் கொண்டு நொடியில் மலை உச்சியில் சுக்ரீவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு ராமரிடம் மோதிரம் பெற்றுக் கொண்டு மலையில் ஏறி கடலைத் தாண்டினார்.

சீதையை பார்த்து பேசி விட்டு சீதையின் சூடாமணியை பெற்றுக் கொண்டு அதை மீண்டும் ராமரிடம் கொடுத்தார். இலங்கைக்கு போக பாலம் கட்டிய போது ஹனுமன் தன் தோள்களில் ராம லட்சுமணரை சுமந்தபடி பாலத்தில் நடந்தார். ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்த போது ராவணன் தேரில் நின்று போர் செய்தான். ராமருக்கு தேர் இல்லை. அதனால் ஹனுமனே ராமனை தன் தோளிலேயே துாக்கி சுமந்து வெற்றி பெற உறுதுணையாக நின்றார்.

போர் முடிந்த பிறகு சீதையிடம் ராமர் வெற்றி பெற்ற விஷயத்தை சொன்னார். பரதனிடம் போய் ராமர் வரும் விஷயத்தை முன்கூட்டியே சொல்லி பரதனைக் காப்பாற்றினார். ஆக கருடன் தன் தோள்களில் பெருமாளை சுமந்து திரிந்ததைப் போல, ஹனுமன் உள்ளத்தில் ராமரை அன்புடன் சுமந்தது போல நான் என் மனதில் அவரை கொஞ்சமாக சுமக்கக் கூட இல்லை. எனவே தான் இந்த திவ்ய தேசத்தை விட்டு வெளியே போகிறேன் என்றாள் பெண்பிள்ளை” என முடித்தார் கிருஷ்ணவேணி.

“இந்த திருவடிகள் தம் கைகளால் பெருமாளின் பாதங்களை தாங்கியும், தோள்களில் சுமந்தும் சென்றனர். இதைக் கேட்கும்போது சிவன் தன் தலையில் கங்கையை சுமந்தது தான் நினைவுக்கு வருது”

“ஆமா... சிவனின் ஜடாமுடியில் கங்கை குடியிருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா சரியான காரணம் தெரியாது. சொல்லுங்க கேட்போம்'' என்றார் கிருஷ்ணவேணி.

“சூரிய வம்ச அரசன் சகரனுக்கு 60 ஆயிரம் மகன்கள். அவர்கள் கபில முனிவரின் சாபத்தால் சாம்பல் ஆயினர். அவர்களுக்கு முக்தி கிடைக்க வேண்டுமென்றால் தேவலோகத்தில் உள்ள கங்கா தீர்த்தம் அவர்களின் சாம்பலில் பட வேண்டும். சகரனின் கொள்ளுப்பேரன் பகீரதன் இந்த பொறுப்பை ஏற்றான்.

பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தவம் செய்து பிரம்மாவை மகிழ்வித்தான். பிரம்மா கங்கையை பூமிக்கு அனுப்ப சம்மதித்தார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.

கங்கை வானத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தால் பூமி பிளந்து பாதாளத்துக்கு போய் விடும். இந்த பிரச்னை தீர பகீரதன் உடனே சிவனை நோக்கி தவம் செய்தான். சிவன் மனமிரங்கி கங்கையை என் தலையில் தாங்குகிறேன் என்றார்.

கங்கை ஆரவாரத்தோடும், ஆணவத்தோடும் வானத்தில் இருந்து பூமியை அழிக்கும் நோக்கத்தோடு வந்தாள். அப்படி வந்தவளை சிவன் தன் ஜடை முடியை விரித்து அப்படியே பிடித்துக் கொண்டார். கங்கை சிவனின் ஜடையில் சிக்கிக் கொண்டாள். எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியவில்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே விழவில்லை. கங்கையின் கர்வம் முழுவதும் அடங்கியது.

அவள் சிவனிடம் மன்னிப்பு கேட்டாள். பகீரதன் மீண்டும் சிவனை வேண்ட அவரும் மனமிரங்கி தன் ஜடையில் இருந்து ஒரு சிறு முடியை மட்டும் அவிழ்த்தார். அதிலிருந்து கங்கை ஒரு சிறு கிளையாக பூமியில் இறங்கினாள். பகீரதன் தேரில் முன்னே செல்ல கங்கை அவனை பின் தொடர்ந்து சென்று சகரனின் மகன்களின் சாம்பலை நனைத்து முக்தி கொடுத்தாள். இதனாலேயே சிவனுக்கு கங்காதரன் எனப் பெயர் வந்தது. சிவனின் ஜடாமுடி ஞானத்துள் அடங்கும். கட்டுக்கடங்காத சக்தியை கூட ஞானத்தால் அடக்கி நன்மைக்கு பயன்படுத்த முடியும் என்பதை உணர்த்துகிறார்” சொல்லி முடித்தார் அமிர்தம்.

“பெருமாளை சுமக்கும் திருவடிகளும் சரி, சிவன் தலையில் சுமக்கும் கங்கையும் சரி, ரெண்டு பேருமே ரொம்ப உயர்வானவங்க. அதனாலேயே அவர்களுக்கு ஜென்ம ஜென்மமா இந்த உறவு தொடர்ந்திட்டு வருது. ரெண்டு திருவடிகளும் பெரிய பாக்கியம் செஞ்சவங்க தான்”

“சரி அடுத்த வாக்கியம் என்ன கிருஷ்ணவேணிம்மா?”



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us