தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 27

பச்சைப்புடவைக்காரி - 27

பச்சைப்புடவைக்காரி - 27


ADDED : அக் 15, 2026 01:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2026 01:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரதியின் அன்பு

“நான் பாரதி. எங்கப்பா பச்சைப் புடவைக்காரிய வணங்காத நாள் இல்ல. நானும் அப்படித்தான். ஆனா அவ ஏன் என்னை மட்டும் குறி வச்சு தாக்கறான்னு தெரியல” முன்னால் அமர்ந்திருந்த அழகிக்கு 25 வயதிருக்கும்.

“எனக்கு பதினஞ்சு வயசான போது அப்பா இறந்துட்டாரு. எங்கம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எங்க அத்தைதான் என்னை வளர்த்தாங்க. பேங்க்ல லோன் வாங்கித்தான் பி.இ., படிச்சேன். நல்ல வேலை கெடைச்சது. ஆனா திடீர்னு வேலை போயிருச்சி. இ.எம்.ஐ.கட்ட முடியல. பேங்கில நெருக்கறாங்க. உடனே அஞ்சு லட்சம் ரூபாய் கட்டணுமாம். தற்கொலை பண்ணிக்கலாமான்னு தோணுது”

மறுநாள் வரச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

கர்மக் கணக்கு, நல்வினை, தீவினை எல்லாம் இருக்கிறது, சரி. ஆனால் பாரதியைப் பார்த்தால் தப்பு செய்தவளாகத் தெரியவில்லையே!

கோயிலில் செருப்பு போடும் இடத்தில் இருந்த பெண் என்னை நோக்கி வந்தாள்.

“கர்மக் கணக்கு, நல்வினை தீவினை என்பதை எல்லாம் தாண்டி எவ்வளவோ இருக்கின்றன”

“தாயே?”

“நாளைக்கு அவள் உன்னைப் பார்க்க வரும் போது புரியும். அவளிடம் சொல்லி விடு. அதற்கு மேல் நீயோ நானோ இதில் ஒன்றும் செய்வதற்கில்லை”

மறுநாள் பாரதி வந்தாள்.

“நான் என்ன சார் தப்பு செஞ்சேன்?”

“ஒரு ஆள அடியோட வெறுக்கறதுகூட தப்புதான் பாரதி. உன் மனசுல இருக்கற வெறுப்புதான் உன் வாழ்க்கைய அழிச்சிக்கிட்டிருக்கு.”

“என் மனசுலயா? வெறுப்பா?”

“உங்கப்பா திடீர்னு செத்தது பெரிய துரதிர்ஷ்டம்தான். உடனே உங்கம்மா உனக்காவே வாழணும்னு நீ எதிர்பார்த்ததையும் நான் தப்புன்னு சொல்லல. ஆனா உங்கம்மா தனக்குன்னு ஒரு வாழ்க்கையத் தேடிக்கிட்டதும் அவங்கள நீ வெறுக்க ஆரம்பிச்சிட்ட. உன் கோணத்துலருந்து பாத்தா உங்கம்மா செஞ்சது தப்பாயிருக்கலாம். ஆனா அவங்க கோணத்துலருந்து பார்த்தா? உன்னைப் பெத்தவரு உனக்கு ஒரு நல்ல அப்பாவா இருந்தாரு. ஆனா உங்கம்மாவுக்கு ஒரு நல்ல கணவரா இல்ல”

“அதனால...''

“உன்னைப் பெத்தவங்கள நாம எடை போட வேண்டாம். உங்கம்மா மேலயும் அவங்களக் கல்யாணம் பண்ணிக்கிட்டவரு மேலயும் உன் மனசுல வெறுப்பு இருக்கு. அந்தாளு உன்னைத் தன் மகளாத்தான் பாத்தாரு. நீதான் அத்தை வீட்டுக்கு ஓடி வந்துட்ட. ஒரு வேளை அந்தாள அப்பாவ ஏத்துக்கிட்டு நீ அங்கயே இருந்திருந்தா அவரே உன்னைப் படிக்க வச்சிருப்பாரு. இந்த எஜுகேஷன் லோனையே நீ வாங்கியிருக்க வேண்டாம்”

“எங்கம்மா போன வருஷம் செத்துட்டாங்க”

“தெரியும். நீ உங்க அம்மா முகத்தைக் கடைசியா ஒரு தரம்கூட பாக்கப் போகல. உங்கம்மாவோட ரெண்டாவது புருஷனுக்கு தீராத நோய் வந்திருக்கு. எத்தனை நாள் இருப்பாருன்னு தெரியாது”

“நான் அவருக்கு ஆயாவா இருக்கணுமாக்கும்? அவருக்கு முதல் கல்யாணத்துல பொறந்த மகளே அந்தாள அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டா. நான் அந்த ஆளுக்குப் பணிவிடை செய்யணுமாக்கும்?”

“நான் ஒண்ணுமே சொல்லலையே, பாரதி. உன் மனசுல இருக்கற வெறுப்பு போகணும். அவ்வளவுதான். அதுக்கு நீ என்ன செஞ்சாலும் சரி”

“நான் வேணும்னா ஒரு அனாதை ஆசிரமத்தில வேலை பாக்கட்டுமா?”

“புண்ணத்தலையில வச்சிக்கிட்டு மருந்தக் காலுக்குப் போட்டா என்ன அர்த்தம்?”

பாரதி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

அன்று மாலை கோயிலுக்குப் போகும்போது செருப்பு போடும் இடத்தில் அதே வடிவத்தில் இருந்தாள் பச்சைப்புடவைக்காரி. சாவிக் கொத்தைக் கீழே போடுவது போல் போட்டுவிட்டு அவள் காலைத் தொட்டு வணங்கினேன்.

“என்னால் பாரதிக்கு உதவ முடியவில்லை, தாயே!”

“உன் வார்த்தைகள் அவளை அடியோடு மாற்றிவிட்டன என்ன நடக்கும் எனக் காட்டுகிறேன்”

பாரதி நான்கு நாள் பித்துப் பிடித்தவளைப் போல் இருந்தாள். பின் தன் தாயின் கணவனைப் பார்க்கப் போனாள்.அவன் அரை மயக்க நிலையில் இருந்தான். அந்த அறையில் வேறு யாரும் இல்லை.

“அப்பா” மென்மையாகத்தான் அழைத்தாள் பாரதி. அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான்.

“நான் பாரதிப்பா. மாலதியம்மாவோட பொண்ணு”

“நீயா என்னை அப்பான்னு கூப்பிட்ட?”

“ஆமா. கூப்பிடலாம்ல?”

“பாரதி... பாரதி...'' என்று சில நிமிடங்கள் வாய்விட்டு அழுதான் அவன்.

ஒரு மணி நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு முக்கால்வாசி பாரதியின் தாயைப் பற்றியே இருந்தது. பாரதி விடைபெறும் போது அவன் அவளிடம் கெஞ்சினான்.

“நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன். இனிமே எனக்கு ட்ரீட்மெண்ட்டுன்னு ஒண்ணும் கெடையாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. வீட்டுல போய் நிம்மதியா இருங்கன்னு சொல்றாங்க. ஆனா இப்போ நான் போறதுக்கு வீடு இல்லயே, தாயி”

“உங்க வீடு என்னாச்சு?”

“முட்டாள் தனமா அதை என் மூத்த தாரத்து மகளுக்குச் செட்டில்மெண்ட் எழுதி வச்சிட்டேன். என்கிட்ட வேற சொத்து இல்லேன்னு தெரிஞ்சிக்கிட்டவுடன என்னை அத்து விட்டுட்டாங்க. நான் செத்தா எனக்குக் கொள்ளி வைக்கவும் ஆளு கிடையாது பாரதி”

“நான் இருக்கேம்ப்பா. நாளைக்கே நாம நம்ம வீட்டுக்குப் போறோம்”

அந்த மனிதன் அதன் பிறகு ஒரு மாதம் வாழ்ந்தான். அவனுக்குப் பிடித்த உணவைச் சமைத்துப் போட்டாள் பாரதி. அவனுடைய வலி குறைய மருந்துகளை வாங்கிக் கொடுத்தாள். அடுத்த வேலை கிடைக்கும் வரை வாழ வேண்டுமே என்பதற்காக வைத்திருந்த மொத்த சேமிப்பையும் செலவு செய்து விட்டாள் பாரதி.

ஒரு வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி இருக்கும்.

“பாரதி, இது உனக்குத்தான்”

அவன் பாரதியிடம் ஒரு பொட்டலத்தை நீட்டினான்.

“என்னிக்கு இருந்தாலும் நீ என்னைத் தேடி வருவேன்னு தெரியும், கண்ணு. நீ மாலதி பெத்த பொண்ணுல்லியா? உனக்காகத்தான் இத என் அழுக்குத் துணியோட மறைச்சி வச்சிருந்தேன். இதுல 100 பவுன் நகை இருக்கு. உங்கம்மா கொண்டு வந்த நகை, நான் அவளுக்குப் போட்ட நகை எல்லாம் இதுல இருக்கு. இத வச்சிக்கிட்டு நல்லபடியா வாழு, கண்ணு”

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன் அழற்சியில் கண்களை மூடினான். அதன்பிறகு அவன் கண்கள் திறக்கவேயில்லை.

“இன்றைய நிலவரப்படி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், தாயே! கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்துவிட்டீர்கள்”

“மனதில் இருக்கும் அன்பு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும். அது போல அவள் மனதில் இருந்த அன்பும் செல்வத்தை ஈர்த்தது. அதன்மூலம் தொழிலை தொடங்கி கோடீஸ்வரியாக வருவாள். அவளை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டுமப்பா?”

“பாரதி என்னிடம் அறிவுரை கேட்க வந்ததால் நான் அவளைவிட உயர்ந்தவன் என்ற நினைப்பு எனக்கு வந்து விட்டது. அன்பு நிலையை வைத்துப் பார்த்தால் பாரதி உச்சாணிக் கிளையில் இருக்கிறாள். அவள் அளவுக்கு நான் வளர இன்னும் எத்தனை பிறவிகள் ஆகுமோ தெரியவில்லை... நான் வேகமாக வளர வேண்டும், தாயே”

“ஆசையைப் பாரேன்” என சிரித்தபடியே மறைந்தாள் சிங்காரவல்லி.

-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us