ADDED : அக் 15, 2026 01:32 PM

அக். 19 - சரஸ்வதி, ஆயுத பூஜை
சரஸ்வதியை எல்லோரும் வணங்குகிறோம். ஆனால் அவளுக்கு அதிகமான கோயில்கள் இல்லை. எப்போது சரஸ்வதியை நாம் நினைக்கிறோம்? தேர்வு, நேர்காணலுக்கு செல்லும் போது தான் சரஸ்வதியை வணங்குகிறோம்.
இதற்கான காரணம் பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைப் பார்ப்போமா?
'நவராத்திரி காலத்தில் சரஸ்வதிக்கு பூஜை செய்கிறோம். ஸ்லோகம் சொல்கிறோம். கம்பர், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர், பாரதியார் போன்றோர் சரஸ்வதி பற்றி அழகாகப் பாடியுள்ளனர். முத்துசுவாமி தீட்சிதர் அவள் மீது கீர்த்தனை பாடியுள்ளார்.
நாடு முழுவதும் எத்தனையோ ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் சரஸ்வதிக்கு திருவாரூர் மாவட்டம் கூத்தனுாரில் மட்டும் கோயில் உள்ளது. புலவர் ஒட்டக்கூத்தர் கட்டிய கோயில் அது. அவருடைய சொந்த ஊர் என்பதால் அவர் பெயரிலேயே கூத்தனுார் என அழைக்கிறோம்.
சிவன், மகாவிஷ்ணுவை வணங்குகிறோம். ஆனால் பிரம்மாவை அந்த அளவுக்கு நாம் வணங்குகிறோமா... எனக் கேட்டால் இல்லை... பிரம்மா மீது பக்தி, மரியாதை இல்லையே தவிர, அவரது மனைவியான சரஸ்வதியை வழிபடுகிறோம். நியூஸ் பேப்பர் பாஷையில் (நாளிதழ் பாணியில்) சொன்னால் பிரம்மா அன்பாப்புலர் தெய்வம்; சரஸ்வதி பாப்புலர் தெய்வம்.
பதிவிரதைகள் (கணவர் மீது அதிக அன்பு உள்ளவர்) கணவருக்கு இல்லாத எதையும் தானும் அனுபவிக்க விரும்ப மாட்டார்கள். தன் கணவர் பிரம்மாவுக்கு கோயில் இல்லை. தனக்கு மட்டும் எதற்கு கோயில் என சரஸ்வதி நினைத்தாளோ... என்னவோ... அத்துடன் அவள் பிரம்மாவின் நாக்கில் குடியிருக்கிறாள். இதுவே போதும் என அவள் திருப்திப்பட்டு விட்டாள். ஆனால் நாம் கூப்பிட்ட மாத்திரத்தில் ஓடி வரும் அவள் நம் குடும்பத்தில் ஒருத்தி. நமக்கு அறிவைப் புகட்டும் தலையாய பணி அவளுக்கு இருக்கிறது அல்லவா?
நவராத்திரி பூஜையின் போது நம் வீடு தேடி துர்கா, மகாலட்சுமியுடன் சரஸ்வதியும் வருவாள். அப்போது பிரார்த்தனை செய்து சரஸ்வதியின் அருளைப் பெறுவோம்' என்றார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.
* கஷ்டம் தீர குலதெய்வத்திற்கு விளக்கேற்று.
* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.
* ஆடி, புரட்டாசி, தை அமாவாசை அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவனே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
