தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 35

பெண்பிள்ளை ரகசியம் - 35

பெண்பிள்ளை ரகசியம் - 35


ADDED : அக் 08, 2026 02:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலாழ்வார்களைப் போலே

“அட! மறுபடியும் லீலா வந்திருக்காங்களே! வீட்ல என்ன விசேஷம்?” என கலகலப்பாக தொடங்கினார் அமிர்தம்.

“திடீர்னு ஒரு வெறுமை வந்துடுச்சு, அதனால அக்காவை பார்த்து பேசணும் போல இருந்தது, அதான் வந்துட்டேன். அக்கா கிட்ட பேசினாலே மனபாரம் போயிடும்'' என சிரித்தார் லீலா.

“சரி, இப்போ மூணு பேரா நடக்கலாம் வாங்க. என்ன லீலா தயாரா?”

“நான் ரெடி, நீங்க எப்ப வருவீங்கன்னு தான் காத்துட்டு இருந்தோம்”

“நம்ம மூணு பேரும் போறத பாத்தா முதலாழ்வார்கள் பற்றிய நினைவு வருது. பெண் பிள்ளையோட 34ம் வாக்கியம் என்ன சொல்லுது தெரியுமா?” என்றார் வேணி.

“அதான் நாங்களும் கேட்க ஆரம்பிச்சிட்டோமே'' எனச் சிரித்தார் லீலா.

“பெண் பிள்ளை ராமானுஜரிடம் 34ம் வாக்கியமான இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலேனு சொன்னா இல்லையா... இதில் வரும் முதலாழ்வார் மூன்று பேர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இதில் பொய்கையாழ்வார் காஞ்சியிலும், பூதத்தாழ்வார் மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலையிலும் பிறந்தனர். திருமாலின் பக்தர்களான இவர்கள் தனித்தனியாக தங்கள் பயணத்தை தொடங்கி கோயில்களுக்குச் சென்று வணங்கி தொண்டு செய்தனர். மூவரையும் சந்திக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் திருமால்.

அதன்படியே மூவரும் தனித்தனியாக திருக்கோவிலுார் உலகளந்த பெருமாளை தரிசிக்க வந்தனர்.தரிசனம் முடித்து திரும்பும் நேரத்தில் பலத்த மழை பெய்தது.

கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டின் கதவைத் தட்டி பொய்கையாழ்வார் தங்க அனுமதி கேட்டார். அவர்களும் அனுமதித்தனர். அங்கு ஒருவர் மட்டுமே படுக்க முடியும். அவ்வளவு சிறிய இடைக்கழி அது.இடைக்கழி என்றால் வீட்டு நடை. இப்போது பொய்கையாழ்வார் துாங்கிக் கொண்டிருந்தார். திடீரென கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தார். வாசலில் பூதத்தாழ்வார் நின்றிருந்தார்.தனக்கும் தங்க இடம் இருக்குமா என கேட்டார்.

உடனே பொய்கையாழ்வார் உள்ளே வாருங்கள் என்றார். இருவரும் அறிமுகமாகி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது. பேயாழ்வார் நின்றிருந்தார். அவரும் தங்க இடம் கிடைக்குமா எனக் கேட்க இங்கு ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம்.மூவர் நிற்கலாம் நாம் மூவரும் நிற்போம் வாருங்கள் எனச் சொல்லி வரவேற்றனர். நாம் மூவரும் திருமாலைப் பற்றி பேசியே இரவை கழிக்கலாம் என்றார் பொய்கையார்.

அந்த நேரத்தில் ஆச்சர்யமான சம்பவம் நடந்தது. ஆழ்வார்கள் மத்தியில் தானும் இருக்க விரும்பி திருமாலும் அங்கு வந்தார். அந்த சிறிய இடைக்கழியில் இவர்களை திருமால் வந்து நெருக்க யார் இப்படி நெருக்குவது என அதிசயித்தனர். பொய்கையாழ்வார் ஞான விளக்கை ஏற்றி யார் என பார்க்க முயன்றார்.

உலகத்தை விளக்காக கொண்டு கடல் நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை சுடராக கொண்டு இவர் ஒரு விளக்கு ஏற்றினார். அவருக்கு திருமாலின் பாதங்கள் தெரிந்தது. உடனே திருவடிக்கு முதன்முதலாக தன் பாட்டால் மாலை சூட்டினார். வையம் தகளியா வார்கடலே நெய்யாக என்பது அவருடைய பாடல்.

அடுத்ததாக பூதத்தார் அன்பையே விளக்காக கையில் எடுத்தார். கடவுளைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தையே நெய்யாக்கினார். சரி இப்போது விளக்கும் நெய்யும் வந்தாயிற்று. விளக்குக்கு திரி வேண்டாமா? அதற்கு என்ன செய்வது என சிந்தனையை திரியாக இட்டு ஞான விளக்கை ஏற்றி, 'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக...' என பாடினார்.

இதில் மூன்றாவது நபராக அந்த இடைக்கழிக்கு வந்து சேர்ந்த பேயாருக்கு அவருக்கு முன்பிருந்த இருவரும் திருவிளக்கு ஏற்றும் வாய்ப்பை தரவில்லை. இருவரும் இயற்றிய விளக்குகளின் பேரொளியிலேயே வந்தவர் திருமால் தான் என்பதை கண்டு கொண்டார்.

அது மட்டுமல்ல அவரின் மார்பில் நீங்காமல் இருக்கும் மகாலட்சுமியை இவர் முதலில் கண்டார். 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என்ற பாசுரத்தை பாடத் தொடங்கினார். திருக்கோவிலுாரில் உள்ள ஒரு வீட்டு இடைக்கழியில் பக்தியுடன் இந்த மூவரும் இணைந்து அந்த திருமாலைக் கண்டு அழகுத் தமிழில் பாடி மகிழ்ந்தனர்.அது முதல் அவர்கள் ஆழ்வார்கள் ஆயினர். மூவரும் காலத்தால் மற்ற ஆழ்வார்களுக்கு மூத்தவர்கள், பக்தியிலும் மூத்தவர்கள் தான்.

அந்த முதலாழ்வார்கள் போல அவனது கருணையால் என்னுடைய அறியாமை என்னும் இருள் நீங்கி, அவனைப் பார்க்கும் பாக்கியத்தை பெறவில்லையே சுவாமி, நான் ஏன் திருக்கோளூரில் வாழ வேண்டும்? அதனால் நான் வேறொரு இடம் தேடிச் செல்கிறேன் சுவாமி என்று பெண் பிள்ளை பணிவுடன் ராமானுஜரிடம் தன் நிலையை தெரிவிக்கிறாள்” கிருஷ்ணவேணி சொல்லும் போது பக்தி பரவசத்தில் அவரையும் அறியாமல் அவர் கண்களில் நீர் கசிந்தது.

கண்களை அகல விரித்து கேட்டுக் கொண்டிருந்தார் லீலா.

“இந்த முதலாழ்வார் சந்தித்த தருணம் எனக்கு தேவாரம் பாடிய அப்பரும் ஞானசம்பந்தரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்த நிகழ்வை ஞாபகமூட்டுது''

“சீக்கிரமா சொல்லுங்க” என அமிர்தத்தை உற்சாகப்படுத்தினாள் லீலா.

“அப்பரும் திருஞானசம்பந்தரும் சைவத்தின் துாண்கள். அப்பர் தொண்டின் மலை என்றால் சம்பந்தரோ ஞானத்தின் வெள்ளம். இருவரும் சந்தித்த நிகழ்வு சாதாரணமானது இல்லை, சைவம் தழைக்க வந்த இவர்கள் முதன் முதலில் வேதாரண்யத்தில் சந்தித்தனர். அப்பரோ முதியவர்.

கையில் கம்பு ஏந்தி யாத்திரை சென்று கொண்டிருந்தார். சம்பந்தருக்கு 16 வயது. வேதம், ஆகமம் எல்லாம் அறிந்த ஞானக் கொழுந்து. பாடல் பாடி இவரும் ஊர்

ஊராக சிவ மகிமையை பரப்பினார். வேதாரண்யத்தில் சம்பந்தரை பார்த்ததும் விழுந்து வணங்கினார் அப்பர்.

மூத்தவர் நீங்கள் இப்படி காலில் விழலாமா என ஞானசம்பந்தர் பதறினார். நீங்கள் பெருமைக்குரிய ஞானசம்பந்தர்! சிவனே உமக்கு ஞானப்பால் ஊட்டினார். நீங்கள் குழந்தை இல்லை குரு. நான் தான் உங்களை வணங்க வேண்டும் என சம்பந்தர் காலில் இவர் விழுந்தார். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் திகைத்தனர்.

மற்றொரு சமயம் திருவையாறில் வழிபாடு செய்த திருஞானசம்பந்தர், திருப்பூந்துருத்தியில் அப்பர் இருப்பதை அறிந்து பல்லக்கு மூலம் அங்கு பயணமானார். இதை தெரிந்து கொண்ட அப்பர் உடனே அவரை எதிர்கொண்டு அழைக்க வேண்டி ஊருக்கு வெளியே போனார். சம்பந்தர் பல்லக்கில் இருக்க, அவரை சுமந்து கொண்டிருந்த ஒருவரின் தோளைத் தொட்டு மெல்ல விலக்கி தம் தோளில் சம்பந்தரை சுமந்து நடந்தார் அப்பர்.

திருவாலம்பூரை நெருங்கியதும் அப்பர் எங்கே என சம்பந்தர் கேட்க, அப்பர் தன் தலையை வெளியே நீட்டி, 'அடியேன் தங்களை சுமந்து பெருவாழ்வு பெற்றேன்' என தன்னுடைய இருப்பை பதிந்தார். ஞானசம்பந்தர் அதிர்ந்து போய் பல்லக்கிலிருந்து குதித்து அப்பரை கட்டித் தழுவினார். இந்த நிகழ்வை பூந்துருத்தி உபசாரம் என்பார்கள். இருவரும் திருஆலங்குடி சிவனை பாடிதிருப்பூந்துருத்தியை அடைந்தனர்.

80 வயது தாத்தாவும், 16 வயது பேரனும் சேர்ந்து சைவத்தை வலிமையாக்கினர். தொண்டும் ஞானமும் கைகோர்த்து ஆன்மிகத்தை பரவச் செய்தது. இருவரும் சம காலத்தவர் என்றாலும் 65 ஆண்டுகள் வித்தியாசம் இருந்தது. ஆனால் பக்தி என வந்த போது இருவரும் சமமாக நின்றனர்”

''அட... வைணவம் பற்றியும் சைவம் பற்றியும் சொல்றத கேட்கும் போது பேசாம நான் இங்கேயே தங்கிடலாம் போலிருக்கே. தினம் ஒரு திவ்யமான கருத்தை கேட்கிறதே பாக்கியம். சரி அடுத்த வாக்கியம் என்னக்கா?”

“வழக்கமா அமிர்தம் விடைபெறும் போது சரியா கேட்பாங்க. இன்னைக்கு நீ கேட்கிற. இந்தா பிடிச்சிக்கோ, இரு மன்னர் பெற்றேனோ வால்மீகரைப் போலே”



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us