தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 30

பச்சைப்புடவைக்காரி - 30

பச்சைப்புடவைக்காரி - 30


ADDED : நவ 05, 2026 12:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 12:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைமுறைகளை வாழ வைத்தவள்

அரண்மனை போன்ற மாளிகையில் தொழிலதிபர் முத்தரசன் முன் அமர்ந்திருந்தேன்.

“எங்க குரூப்போட மொத்த சொத்து மதிப்பு 75,000 கோடி. என் மனைவி இறந்துட்டா. இரண்டு மகன்கள். மூத்தவன் ரிஷி கெட்டிக்காரன். உலகத்தையே வித்துட்டு வந்திருவான். அடுத்தவன் மகேஷ் அவ்வளவு சூதானமில்லாதவன். ரிஷி அளவுக்கு புத்திசாலி இல்ல. எனக்கு கேன்சர் வந்திருச்சி. இன்னும் ஒரு வருஷம் இருந்தா ஜாஸ்தின்னு டாக்டர் சொல்லிட்டாரு. என் மகன்களுக்கும் இது தெரியும். சொத்துக்களையும் கம்பெனிகளையும் சரி சமமாப் பிரிச்சிக் கொடுத்துருங்கப்பான்னு ரிஷி சொல்றான்.

மகேஷ் ஒண்ணும் சொல்லல. ரிஷி சொல்ற மாதிரி பிரிச்சா அவன் பெரிய ஆளாயிருவான். ஆனா மகேஷ் கஷ்டப்படுவான். அவனால தொழில்கள நிர்வாகம் பண்ண முடியாது.

“பணக்காரங்களச் சுத்தி ஒரு காக்கா கூட்டம் இருக்கும். அதுவும் மகேஷ் மாதிரி விவரம் பத்தாத ஆளுகிட்ட பல ஆயிரம் கோடி சொத்து இருக்குன்னு தெரிஞ்சா காக்காக்கள் எல்லாம் பிணம் தின்னிக் கழுகுகளா மாறிரும். மகேஷ் அழிஞ்சி போயிருவான்.

“நான் ரிஷிகிட்ட கெஞ்சினேன். 'சொத்தப் பிரிக்க வேண்டாம். தம்பியால தனியாத் தொழில் செய்ய முடியாதுடா. நீயே அவனப் பாத்துக்கப்பான்னு சொன்னேன். ரிஷி முடியாதுன்னு சொல்லிட்டான்”

“மொத்த சொத்தையும் மகேஷ் பேர்ல எழுதி வச்சி ரிஷியக் கார்டியனாப் போட்டா?”

“இன்னும் சிக்கலாயிரும். இந்தச் சொத்தெல்லாம் எங்கப்பா வழிவந்த சொத்துங்கறதுனால என் இஷ்டப்படி பிரிக்க முடியாது. ரிஷிக்குப் பாதி சொத்து கொடுத்தேயாகணும்.”

“ஓஹோ”

“என் காலத்துக்கு அப்பறம் மகேஷ் அனாதை ஆயிருவானேன்னு நினைக்கும் போதுதான் பதட்டமா இருக்கு”

அந்தச் சமயம் மேஜையில் இருந்த ஒரு தொலைபேசி சிணுங்கியது. ரகசியம் பேசும் குரலில் அதில் பேசினார் முத்தரசன்.

“காபி கொண்டு வரச் சொல்லியிருக்கேன். பத்து நிமிஷத்துல வந்துடறேன்”

காபி வரவில்லை. கம்பீரமான பெண் அதிகாரி வந்தாள்.

“யார் நீங்க? பாஸ் ரூம்ல என்ன பண்றீங்க?”

என்னைப் பற்றிச் சொன்னேன். கையில் இருந்த ஒரு மின்னணு சாதனத்தில் எதையோ தேடினாள். முகம் சுளித்தாள்.

“உங்க பேரே இங்க இல்லையே? செக்யூரிட்டிலயே உங்கள தடுத்திருக்கணுமே”

“நான் வெளிய போறேன்”

அவள் அழகாகச் சிரித்தாள்.

“அப்புறம் முத்தரசனின் பிரச்னையை யாரப்பா தீர்ப்பது? இப்போதாவது அவன் மனதில் அன்பை விதைப்பது அவசியம். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும்”

ஒரு ஊழியன் காபி கொண்டு வந்தான். அதை அந்த அதிகாரி வாங்கிக் கொண்டாள். விழுந்து வணங்கி அதைப் பெற்றுக் கொண்டேன்.

“என்ன சொல்லட்டும்?”

“வழக்கமானதுதான். ஊதுற சங்கை ஊது. விடியும் போது விடியட்டும்”

காபியைக் குடித்து முடிக்கவும் முத்தரசன் வரவும் சரியாக இருந்தது.

“தாயைப் போல் பிள்ளை. நுாலைப் போல் சேலை” சத்தமாக சொன்னேன்.

“என்ன உளறுறீங்க?”

“உங்கள மாதிரித்தானே உங்க மகன் இருப்பான்?”

முகம் வெளிறினார் முத்தரசன்.

“25 வருஷத்துக்கு முன்பு இதே பிரச்னை வந்துச்சில்ல? உங்கப்பா கெஞ்சினாருல்ல? முத்து, உங்க அண்ணன் முருகேசனுக்கு வெவரம் பத்தாதுடா. அவன உன் மகனாப் பாருடா. நீதாண்டா அவனுக்கு அப்பன், ஆத்தா எல்லாம்”

“ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல முருகேசன் எடுத்தெறிஞ்சிப் பேசினானேன்னு நீங்க கோபப்பட்டீங்க. சொத்தப் பிரிக்கணும்னு சண்டை போட்டீங்க. அண்ணனுக்கு பாதி சொத்தக் கொடுத்து கழட்டி விட்டீங்க. அதுவே அவன் அழிவுக்குக் காரணமாயிடுச்சி. சொத்த எல்லாம் தொலைச்சு இப்போ நோயாளியா வாழவும் முடியாம சாகவும் முடியாம தவிக்கிறான். உங்கப்பா அனுபவிச்ச வேதனை இப்போ தெரியுதா உங்களுக்கு?”

“எப்பவோ நடந்ததை இப்ப எப்படி சார் மாத்த முடியும்?”

“இன்னும் முப்பது வருஷம் கழிச்சி உங்களோட அடுத்த தலைமுறையச் சேர்ந்த ஒருத்தன் இதே வார்த்தையத் தான் சொல்வான். இது உங்க வம்சத்தையே பாதிக்கும்”

“என்னதான் செய்யறது?”

“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. உங்க அண்ணன் முருகேசனைப் பாருங்க. அவனுடைய கடன் தொல்லையை தீருங்க. நீங்க அவர் கையப் பிடிச்சிக்கிட்டுப் பேசினாலே நோய் போயிடும்”

“என் மகன் மகேஷ்...”

“முதல்ல உங்க தப்பை சரி செய்யுங்க. இந்த தலைமுறை வாழும், சார். அப்புறம் உங்க இஷ்டம்”விடைபெற்றேன்.

கதவருகில் அதிகாரி வடிவில் நின்றிருந்தாள் தாய்.

“ஒரு தலைமுறையையே வாழ வைத்து விட்டாயே!”

“வாழவைப்பவர் நீங்கள். வார்த்தைகளைக் கடத்தும் வேலை மட்டுமே என்னுடையது. என்ன ஆகும், தாயே?”

வருங்காலத்தைக் காட்டினாள் தாய்.

அடுத்த நாளே முத்தரசன் அண்ணனைப் பார்க்கச் சென்றார். மருத்துவமனையில் சேர்த்தார். முருகேசன் மனைவி, மகன்களுடன் குடும்ப நிலவரம் பற்றி பேசினார். கடனை தீர்த்து வைப்பதாகச் சொன்னார்.

முருகேசனின் மகன்கள் புத்திசாலிகளாக இருந்தனர். தன் இரண்டாவது மகன் மகேஷின் உதவியாளராக அவர்களை பணியமர்த்தினார். அவர்களிடம் இருந்த நேர்மை பிரமிக்க வைத்தது. தன் காலத்திற்குப் பிறகு மகேஷின் தொழில்களைப் பார்க்கும் பொறுப்பை முருகேசனின் மகன்களுக்குக் கொடுத்தார். அவர்களுக்கும் நிறையச் சொத்துக்களைக் கொடுத்தார். மகேஷின் வாழ்வு பாதுகாப்பாக இருக்கும் என உணர்ந்து முத்தரசன் அமைதியானார்.

“உனக்கு என்னப்பா வேண்டும்?”

“தலைமுறை தலைமுறையாக நடக்க இருந்த தவறை திருத்தி வம்சத்தையே வாழ வைத்து விட்டீர்களே தாயே''

“எனக்கு எதை வேண்டுமானாலும் கொடுங்கள். அளப்பரிய செல்வம், அறிவு, வீரம், புகழ் என எதை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் அதை கொண்டு நான் அடுத்தவரை வாழ வைக்க வேண்டும். முத்தரசனைப் போல என் அறிவை என் சகோதரனுக்குக் கொடுக்க மாட்டேன் என நான் அடம்பிடிக்கக் கூடாது.”

“மாறாக உனக்கு துன்பம், வறுமை, அறியாமை ஆகியவற்றைக் கொடுத்தால்...”

“அதை யாரோடும் பங்கு போடாமல் நானே அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவத்தை ஒரு வழிபாடாகவே செய்யும் பக்குவமான மனதைக் கொடுங்கள் தாயே”

“இருந்தாலும் உனக்கு ஆசை அதிகம்தான்.”

பச்சைப்புடவைக்காரி மறைந்த பின்னும் என் சிலிர்ப்பு அடங்கவில்லை.

-தாயின் அன்பு தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us