தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 39

பெண்பிள்ளை ரகசியம் - 39

பெண்பிள்ளை ரகசியம் - 39


ADDED : நவ 05, 2026 01:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 01:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பாணரைப் போலே

கிருஷ்ணவேணியும் அமிர்தமும் துாறலை ரசித்தபடி நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களைக் கண்டதும், “எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னாதான் வாக்கிங் வருவீங்களா?” புதிதாக குடித்தனம் வந்திருந்த 54வது பிளாட் பெண் கேட்டார்.

“ஆமா... அப்படியே பழகிடுச்சு. எங்க ரெண்டு பேரோட அலைவரிசை ஒத்து போறதால சாத்தியப்படுது”.

“சரி நடத்துங்க நடத்துங்க” என்றபடி நகர்ந்தார் அந்த புதிய பெண்.

“அமிர்தம்... வீட்டுக்கு போனதும் முதல்ல சுத்தி போட்டுக்கோங்க. திருஷ்டி போகணும்”

“நிச்சயமா... அவங்க சொன்னதும் நானும் அப்படி நினைச்சேன்”

“சரி 38ம் வாக்கியம் அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே தானே?”

“ஆமா பெண் பிள்ளை ராமானுஜரிடத்தில் திருப்பாணரைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். திருப்பாணாழ்வார் ஸ்ரீரங்கத்துக்கு அருகிலுள்ள உறையூரில் பிறந்தவர். இசை பயிற்சியும், புலமையும் மிக்கவர் இவர் பெருமாளிடம் பக்தி கொண்டிருந்தார். தான் பாணர் குலத்தவர் என்பதால் கோயிலுக்குள் செல்லாமல் காவிரி கரையில் நின்று வீணையை மீட்டி பாடல்கள் பாடினார்.

இப்படி தன்னை மகிழ்விக்கும் பக்தனை உள்ளம் குளிர வைக்க வேண்டும் என்ற விருப்பம் பெருமாளுக்கு ஏற்பட்டது. அதற்கு ஒருவழி செய்தார். ஒருநாள் திருப்பாணர் காவிரிக் கரையில் நின்று தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார். அன்று பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுக்க லோக சாரங்க முனிவர் குழுவாக கரைக்கு வந்தார்.

திருப்பாணரை கண்டதும், தீர்த்தம் எடுக்கச் போகிறோம், அதனால் 'துாரப்போ... துாரப்போ' எனச் சொன்னார். கடுமையாக ஒலித்த இந்த குரல் பாணரின் காதில் விழவில்லை. திருமஞ்சன குடத்துடன் வந்தவர்களுக்கு கோபம் வந்தது. சிலர் காட்டமான சொற்களால் திட்டினர். அடித்து உதைத்து விரட்டுங்கள் என்றனர். சாரங்க முனிவர் கோபத்துடன் கல்லை திருப்பாணர் மீது எறிந்தார். உடனே அது அவரது நெற்றியில் பட்டு ரத்தம் வழிய மயங்கினார்.

சற்று நேரம் கழித்து அவர் விழித்த போது நடந்ததை தெரிந்து கொண்டார். ஆனால் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பெருமாளின் சன்னதிக்கு போனார்கள். அங்கு பெருமாளின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு அதிர்ந்தார் முனிவர். 'என் பக்தனை கல்லால் இப்படி அடிக்கலாமா? அவனை ஏன் கல்லால் அடித்தீர்? இது உன் பக்திக்கு அழகா' என பெருமாள் கேட்பது போல் இருந்தது.

லோக சாரங்க முனிவருக்கு மனம் உடைந்தது. அவரை எப்படியாவது கோயிலுக்குள் அழைத்து வந்து தம் பாவத்தை போக்க எண்ணினார். மறுநாள் காலையில் முனிவர் காவிரியில் நீராடி விட்டு கைகூப்பியபடி பாடிக் கொண்டிருந்த திருப்பாணரை நோக்கிச் சென்றார். மன்னிப்பு கேட்டு தன்னுடன் கோயிலுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.திருப்பாருணக்கு பதற்றம் தொற்றியது. தாழ்ந்த குலத்தில் பிறந்த எனக்கு அனுமதி கிடையாது என தயங்கினார்.

முனிவரோ இது பெருமாளின் உத்தரவு, அதனால் தான் அழைத்துச் செல்ல வந்தேன். வேண்டுமானால் ஒன்று செய்யலாம், நீங்கள் கோயிலுக்குள் காலால் மிதித்து வர வேண்டாம் என் தோளின் மீது ஏறிக் கொள்ளுங்கள். இதுவே பெருமாளின் விருப்பம் என்றார்.

சொன்னபடியே அவரை தோள் மீது ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அழகிய மணவாளத் திருமண்டபத்திற்குள் வந்தார். திருப்பாணரும் திருப்பாதம் முதல் திருமுடி வரை பெருமாளை கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். உடனேயே அமலாதி பிரான் என்ற பாடலை பாடினார்.

பெருமாளின் அடி முதல் முடி வரை தான் ரசித்த அனுபவத்தை பாடலாக பாடினார். இப்படி பத்து பாசுரங்களை பாடிய ஆழ்வார் கடைசி பாசுரத்தில், 'அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினை காணாவே' என பாடி முடித்ததுமே பெருமாளின் திருவடியில் கலந்தார்.

அன்றுடன் அரங்கனின் கழுத்தில் மாலையாக மாறி ஜொலித்தார்.

இப்படி திருப்பாணாழ்வார் போல பண் இசைத்து பெருமாளின் புகழ் பாடி அந்த எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி அவன் பாதங்களில் சரணடைந்தேனா? இல்லையே சுவாமி பிறகு ஏன் நான் இந்த புண்ணிய பூமியான திருக்கோளூரில் இருக்க வேண்டும். என்னை தடுக்காதீர்கள் கிளம்புகிறேன் என பெண் பிள்ளை ராமானுஜரிடம் கூறினாள்” என நெகிழ்ச்சியுடன் முடித்தார் கிருஷ்ணவேணி.

“கடைசியா திருப்பாணருடைய மேனி பெருமாளுடன் இரண்டற கலந்தாச்சு! என்ன ஒரு விசேஷம். இந்த திருப்பாணரின் கதை எனக்கு பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கதையைத்தான் கண் முன்னே காட்சி படுத்தது''

“நான் கூட சின்ன வயசுல ஏதோ திரைப்படத்தில் பார்த்த ஞாபகம். சொல்லுங்க கேட்போம்''

“உங்களுக்கு இல்லாத விவரமா? ஒரு சமயம் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல கரைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் பாய்ந்தது. அப்போது வெள்ளத்தை கட்டுப்படுத்த மதுரையை ஆட்சி புரியும் பாண்டிய மன்னர், மக்கள் அனைவருக்கும் கரையை அடைக்கும் பணியை கொடுத்தார்.

அதை மேற்பார்வை செய்த அதிகாரிகள் ஊரில் இருப்பவர்களுக்கு கரையின் அளவை நிர்ணயம் செய்தனர். அங்கு வந்தி என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவள் பிட்டினை விற்று பிழைப்பவள். வயது மூப்பின் காரணமாக வைகைக் கரையை அடைக்கும் பெரும் பணியை செய்ய முடியாத நிலை. அப்போது சிவன் ஒரு சிறுவனாக பாலசுந்தரேசன் என்ற பெயரில் வந்து பாட்டிக்கு பதிலாக ஆற்றில் கரை அடைப்பதாக ஒப்புக் கொண்டான். அதற்குக் கூலியாக உதிர்ந்த பிட்டினை தருவதாக வந்திப் பாட்டியும் ஒப்புக்கொண்டாள்.

சிறுவனாக வந்த சிவன் பிட்டினை வாங்கி சாப்பிடுவதும், அது தீரும் வரை ஆடிப் பாடுவதுமாக இருந்தார்.

அதனால் வந்தி மூதாட்டிக்கு நிர்ணயித்த இடத்தில் மட்டும் கரை கட்டப்படாமல் இருந்தது. மேலதிகாரிகள் அதை விசாரித்துக் கொண்டு இருக்கையில் பாண்டிய மன்னர் வந்தார். அவரிடம் மேலதிகாரிகள் கூலியை பெற்றுக் கொண்டு சிறுவன் வேலை செய்யாமல் துாங்கிக் கொண்டிருப்பதை புகார் செய்தனர்.

உடனே மன்னன் துாங்கிக் கொண்டிருந்த பாலசுந்தரேசனின் முதுகில் பிரம்பால் ஓங்கி அடித்தார். அடுத்த கணமே எல்லா உயிர்களின் மீதும் பிரம்பால் அடித்தது போல உணர்ந்தனர். மன்னர் உட்பட அதிகாரிகள் அனைவர் முதுகிலும் அந்த பிரம்படி விழுந்தது.

அதற்குப் பிறகு சிவன் ஒரு கூடையில் மட்டும் மண் சுமந்து கரையை அடைக்க எல்லா கரைகளும் அடைக்கப் பெற்று வைகை நதியின் வெள்ளம் கட்டுக்குள் வந்தது. சிறுவனாக வந்த சிவன் மறைந்தார். அதன் பின் மூதாட்டி வந்தியை சிவகணங்கள் வந்து அழைத்துச் சென்றதாக வரலாறு. சிவனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்று”

“திருப்பாணருக்கு ஏற்பட்ட காயம் பெருமாளிடம் வெளிப்பட்டு இருக்கு. சிவன் முதுகில் விழுந்த அடியை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்தனர். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை தாமே வாங்கிக் கொள்வது கடவுளின் கருணையே”

“ஆமா நமக்குக் கூட கடவுளின் கருணை இருப்பதால் தான் இத்தனை நாளும் ஒவ்வொரு ரகசியத்தின் ஆழ்பொருளை தெரிந்து கொள்கிறோம். நம் இருவராலும் நடைபயிற்சிக்காக வர முடிவதால் தான் உங்களால் சொல்ல முடிகிறது. நான் சொல்லும் கதைகளை கேட்கவும் செய்கிறீர்கள்”

“சரி நம் பயணம் தொடரட்டும். அடுத்த வாக்கியத்தை சொல்லுங்க. ஏற்கனவே துாறல் வலுக்க ஆரம்பிக்குது''

“இதுவும் ஒரு வலிமையான வாக்கியம் தான். அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே”



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us