ADDED : நவ 20, 2026 08:06 AM

தாயன்பின் தனித்துவம்
திடுதிப்பென்று என் அறைக்குள் நுழைந்தவளைப் பார்த்து அதிர்ந்தேன். டாக்டர் கவுரி. நரம்பியல் மருத்துவர். என் வாடிக்கையாளர். அறுபதை நெருங்கும் அற்புத மனுஷி. வரி விஷயத்தில் அரசை ஏமாற்றுவது தேசத் துரோகமே என நினைப்பவர்.
“பெரிய தப்பு நடந்து போச்சுண்ணா” சொல்லும் போதே கண்ணில் கண்ணீர்.
“எனக்கும் சுந்தருக்கும் 15 லட்ச ரூபாய்க்கு மெடிக்ளைம் இன்சூரன்ஸ் போட்டிருக்கோம். இருபது வருஷமா பணம் கட்டிட்டு வரோம். நோய் வந்திருக்குன்னு ஒத்த ரூபாய்கூடக் கிளைம் பண்ணதுல்ல. பச்சைப்புடவைக்காரியோட கருணையால ஆரோக்கியமா இருக்கோம்.
“பத்து நாளைக்கு முன்னால பாலிசிக்கான தொகையக் கட்டலாம்னு பாத்தபோதுதான்...''
கவுரி பேசுவதை நிறுத்தி விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“அப்போதான் போன வருஷம் பிரீமியம் கட்டலைன்னு தெரிஞ்சுது. எப்படியோ மிஸ் ஆகியிருக்கு. அந்த ஏஜண்ட்கிட்டயும், இன்சூரன்ஸ் கம்பெனிகிட்டயும் போராடிப் பாத்தாச்சு. புதுசா பாலிசி எடுத்த மாதிரிதான் கணக்காகும். இப்போ பிரீமியத்த வாங்கிக்கறோம். ஆனா இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துக்கு எந்த நோய் வந்தாலும் நாங்க பணம் தர மாட்டோம்னு சொல்றாங்க. சுந்தருக்கு அறுபது முடிஞ்சிருச்சி. எனக்கு 59 முடிஞ்சிருச்சி. “இப்போ திடீர்னு ஏதாவது நோய் வந்து படுக்கையில விழுந்தா...கதை கந்தல் தான். நாங்க ஒண்ணும் சேர்த்து வைக்கல. வீடு இருக்கு. வீடு கட்ட வாங்கின கடனும் இருக்கு. பசங்க படிப்புக்குச் நிறைய செலவழிச்சிட்டோம். திடீர்னு எமர்ஜன்சி வந்தா, ஆப்பரேஷன் செய்ய வேண்டி வந்தா... நெனைச்சாலே குலை நடுங்குதுண்ணா”
நான் பதறினேன்.
“இருபது வருஷம் விடாம பிரீமியம் கட்டிக்கிட்டு வர்றோம். போன வருஷம் எப்படி மறந்து போச்சு? எங்க ஏஜண்ட்டும் ஞாபகப்படுத்தல, இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்களும் கவனிக்கல.”
“சுந்தர் என்ன சொல்றாரு கவுரி”
“ஆடிப் போயிட்டாரு. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கடிதம் எழுதியிருக்காரு. பதில் வர ஒரு மாசமாகும் போலிருக்கு. நம்பிக்கையா சொல்ல மாட்டேங்கறாங்கண்ணா.”
முன்னால் இருந்த பச்சைப்புடவைக்காரியின் உருவத்தைப் பார்த்தேன்.
“இது என்னோட கவனக்குறைவு தான். பச்சைப்புடவைக்காரிகிட்ட என்ன வேண்டிக்கறதுன்னுகூடத் தெரியலண்ணா”
இதில் நான் என்ன செய்ய முடியும்?
“சொல்லணும்னு தோணிச்சி. உங்ககிட்ட சொல்லிட்டேன். இனிமே நீங்களாச்சு, அவளாச்சு. விதிப்படி நடக்கட்டும். தொந்தரவுக்கு மன்னிச்சிருங்கண்ணா”
கவுரி சென்ற பிறகு பச்சைபுடவைக்காரியின் படத்தையே பார்த்தேன். மனம் கிடந்து அல்லாடியது. கவுரிக்கு லேசாக சர்க்கரை நோய் இருக்கு. கணவன், மனைவி இருவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கு. ஏதாவது விபரீதமாக நடந்தால் மொத்தச் செலவும் இவர்கள் தலையில்தான் விழும்.
கவுரியும் அவள் கணவர் சுந்தரும் அன்பானவர்கள். ஏழைகளுக்கு இலவசமா சிகிச்சை செய்கிறார்கள். இவர்களுடைய சிகிச்சைக்கே பணம் கிடைக்காவிட்டால்...
அந்த கணத்தில் இருந்து விரதத்தை தொடங்கினேன்.
இரவு உணவைத் தவிர்த்து கோயிலுக்கு தினமும் நடந்தே போனேன்.
பத்தாம் நாள். சாலையைக் கடக்கும் போது எதிர்ப் பக்கம் வந்த வண்டியைக் கவனிக்கவில்லை. வேகமாக வந்த வண்டி எனக்கு அருகில் வந்து பிரேக் போட்டு நின்றது.
வண்டியின் முன்பக்கம் தட்டியதில் கீழே விழுந்து விட்டேன். கையிலும் காலிலும் சிராய்ப்புக் காயங்கள்.
வண்டி ஓட்டியவரைத் திட்ட ஒரு கூட்டம் கூடியது. வண்டியிலிருந்து கம்பீரமாக ஒரு போலீஸ்காரி இறங்கியதும் கூட்டம் பின் வாங்கியது.
“அவர வண்டில ஏத்துங்க. நான் பாத்துக்கறேன்.”
வண்டி கிளம்பிய பிறகுதான் பெண் போலீசை பார்த்தேன். லேசாகச் சிரித்தாள். நான் அழ ஆரம்பித்தேன்.
“அதுதான் எல்லாம் நல்ல படியாக முடிந்துவிட்டதே! நீ ஏனப்பா அழுகிறாய்?”
தட்டுத் தடுமாறி சொன்னேன்.
“தாயே, எனக்கு இன்னும் அதிக துன்பங்களைக் கொடுங்கள். தாங்கிக் கொள்கிறேன். கவுரியும் அவள் கணவர் சுந்தரும் நல்லவர்கள். அவர்கள் வேதனைப்பட்டால் நாட்டிற்கே நல்லதில்லை”
“பராசக்திக்கே பாடம் நடத்துகிறாயோ?”
“மன்னித்து விடுங்கள், தாயே! என்ன பேசுவது என்றே தெரியவில்லை.”
ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் வண்டியை நிறுத்தினாள் பச்சைப்புடவைக்காரி.
“என்னப்பா செய்வது? கவுரிக்கு பெரிய நோய் வந்து மருத்துவமனையில் ஒரு மாதம் இருக்க வேண்டும் என கர்மக்கணக்கு இருக்கிறது. அதைத் தவிர்க்கவே இந்த மறதியை அவளுக்குக் கொடுத்தேன். பணம் கட்ட மறந்து விட்டோம் என தவியாய்த் தவிக்கிறாள். அதையே நோயால் ஏற்படும் வேதனையாகக் கருதி அவளைக் காப்பாற்றி விடுவேன். மறதியும் ஒரு நோய்தானே!”
“இரண்டு ஆண்டுக்கு அவர்களுக்கு எந்தக் காப்பீடும் கிடைக்காது தாயே!”
“இந்த இரண்டு ஆண்டுகளில் எந்த நோயும் வராமல் நான் பார்க்கிறேன். நோய் வந்துவிடக்கூடாதே என அவர்கள் தவிக்கும் தவிப்பே அவர்களின் கர்மக் கணக்கைச் சரி செய்துவிடும்.”
நான் அழுது கொண்டிருந்தேன்.
“கூடவே உன் கண்ணீரும் சேர்ந்துவிட்டது. சூழலின் அன்பு அதிகமாகிவிட்டது. அவர்கள் தவிக்கும் காலத்தை இரண்டு வருடங்களிலிருந்து ஒரு மாதமாகக் குறைத்துவிட்டேன்.
“கவுரியின் கணவர் சுந்தர் உருக்கமாக எழுதிய கடிதம் அந்த நிறுவனத்தின் தலைவர் வரை சென்று விட்டது. அவர் இந்தத் தம்பதிகளைப் பற்றி விசாரித்துப் பார்க்கச் சொல்வார். இவர்களுக்கு ஒரு முறை விதி விலக்கு தரலாம் என அவர் தீர்மானிப்பார். இடைவெளியில்லாமல் அவர்களுக்குக் காப்பீடு தர வேண்டும் என உத்தரவிடுவார்.
“அவர்களுக்கு எந்த நஷ்டமும் வராது. காப்பீடு பழையபடி தொடரும். கவுரி இதுவரை பட்ட வேதனை அவளுடைய கர்மக்கணக்கை சுட்டுப் பொசுக்கிவிடும். இருவருக்கும் கடைசிவரை நோய் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நல்லவர்களை துன்பப்பட விடமாட்டேன். யாரையும், எப்போதும் கைவிட மாட்டேன்.
'உனக்கு என்னப்பா வேண்டும்?”
“எனக்கே எனக்கென்று நீங்கள் இருக்கும்போது உங்களிடம் என்ன கேட்க முடியும்?”
“உனக்காக ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கித் தரவும் என்னால் முடியும்”
“அதனால்தான் உங்களிடம் ஒரு மண் துகளைக் கூட கேட்க மனம் வரவில்லை. உங்கள் தாயன்பு தனித்துவமானது. அதை பூரணமாக உணர்ந்து அனுபவிக்கும் மனதை உங்களிடம் வரமாக யாசிக்கிறேன்.”
“என் தாயன்பு எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதுதானே”
“ஆனால் அதன் தனித்துவத்தை உணர்ந்து அனுபவிக்கும் பேறு வெகு சிலருக்குத் தானே கிடைக்கிறது? அதில் ஒருவனாக நான்...''
நான் வாக்கியத்தை முடிப்பதற்குள் அவள் சிரித்தபடி மறைந்தாள்.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
