ADDED : மார் 12, 2026 08:23 AM

துருவனைப் போலே...
கிருஷ்ணவேணியும், அமிர்தமும் காயும் வெயிலை நொந்தபடியே மெல்ல நடந்தனர்.
“சாயங் காலத்துல கூட இப்படி வியர்த்து கொட்டுதே! இன்னும் சித்திரை, வைகாசிக்கு எப்படி காயுமோ தெரியல! சரி நீங்க பெண் பிள்ளையோட அடுத்த ரகசியத்தை ஆரம்பிங்க. வெயில் கொடுமையை பத்தி மனசு யோசிக்காம இருக்கும்'' என்றார் அமிர்தம்.
“இதோ ஜில்லுனு ஆரம்பிச்சுடலாம். ஏழாவது ரகசியமா தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயை போலேன்னு சொன்னா இல்ல, இப்ப ராமானுஜரை பார்த்து எட்டாவது ரகசியம் தந்தை எங்கே என்றேனோ துருவனை போலேன்னு சொல்றா.”
“எனக்கு ஒரு சந்தேகம். துருவன் தான் வானத்தில ஒளி வீசும் துருவ நட்சத்திரமா?”
“இருங்க முழுசா கேட்டுட்டு அப்புறம் நீங்களே முடிவு பண்ணுங்க” என கதையை சொல்லத் தொடங்கினார் கிருஷ்ணவேணி.
முன்னொரு காலத்தில் உத்தான பாதன் என்ற மன்னன் இருந்தான். அவனுக்கு சுநீதி, சுருசி என இரு மனைவிகள். இதில் சுநீதிக்கு பிறந்த மகன் துருவன். இளைய மனைவி சுருசிக்கு பிறந்தவன் உத்தமன். தந்தை உத்தானபாதனுக்கு இளைய மனைவியின் மீது ஆசை அதிகம். அதனால் பெரும்பாலும் சுருசியிடமே பொழுதைக் கழித்தான். ஒருநாள் சுருசியின் அந்தப்புரத்தில் ஒரு உயரிய ஆசனத்தில் அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் உத்தானபாதன். அவனது மடியில் உத்தமன் அமர்ந்திருந்தான்.
அப்போது ஐந்து வயது நிரம்பிய துருவன் தந்தையை பார்க்க சுருசியின் அந்தப்புரத்திற்கு வந்தான். உத்தமனை கொஞ்சிக் கொண்டிருந்தான் உத்தானபாதன். அதைப் பார்த்த துருவன் தந்தையின் மடி மீது ஏறி உட்கார முயன்றான். சுருசி அவனை தடுத்து கடும் வார்த்தையால் திட்டினாள். உத்தான பாதனும் இளைய மனைவியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு இருந்து விட்டான்.
துருவன் தன் தாயிடம் நடந்ததை சொல்லி அழுதான். அவனை மடிமீது அமர்த்தி அமைதிப்படுத்தினாள் சுநீதி. ' தந்தையின் மடி கிடைக்கவில்லையே எனக் கலங்காதே. நீ நினைத்தால் பிரபஞ்சத்தின் தந்தையின் மடியில் உட்காரலாம். அதுவே உனக்கான உயர்ந்த சிம்மாசனம்' என்றாள். யார் அவர், எங்கே இருக்கிறார் எனக் கேட்டான் துருவன். உலகிலுள்ள அனைவருக்கும் அவரே தந்தை. அவருடைய பெயர் வாசுதேவன். அவரை நோக்கி தவம் செய். அத்தனை பேறுகளும் கிடைக்கும்'' என்றாள் சுநீதி
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க தவம் செய்ய போகிறேன் எனச் சொல்லி விட்டு அரண்மனையை விட்டு வெளியேறினான். கால் போன போக்கில் போனான். அவனை இடை மறித்த நாரதரிடம், அனைவருக்கும் தந்தையான வாசுதேவனை காண தவம் செய்யப் போவதாக சொன்னான்.
நாரதர் அவனுக்கு உபதேசம் செய்தார். வாசுதேவனின் பெருமைகளைச் சொல்லி தவத்தில் வெற்றி பெறுவாய் என ஆசியளித்தார். ஒரு கட்டத்தில் துருவனின் தவம் உக்கிரமானது. முதலில் பத்மாசனத்தில் உட்கார்ந்த நிலையிலும், பின் நின்ற நிலையிலும் தவம் செய்தான். பின்னர் வலது காலை மட்டும் ஊன்றி தவம் செய்தான். இவனது தவத்தைக் கண்டு காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குணங்களும் ஓடின. மனதை ஒருமுகப்படுத்தி 'ஓம் வாசுதேவாய நமஹ' எனச் சொல்லியபடி இருந்தான்.
இதனால் தேவர்கள் தங்களின் பதவிக்கு ஆபத்து வருமோ என மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். மகாவிஷ்ணு பூலோகத்திற்கு புறப்பட்டார். யமுனை ஆற்றங்கரையில் உள்ள மதுவனத்தில் துருவன் முன்னே தோன்றினார். மகாவிஷ்ணுவைக் கண்ட துருவன் ஆடிப் பாடி மகிழ்ந்தான். தந்தையின் மடி போன்ற உயரிய ஆசனம் வேண்டும் என துருவன் வேண்டினான். 'தந்தையின் மடி என்ன... சப்த முனிவர்களின் நட்சத்திரக் கூட்டத்திற்கு மேலே பிரகாசமாக இருப்பாய். உரிய காலத்தில் நட்சத்திர பதவியை அடைவாய்'' என்றார் மகாவிஷ்ணு.
துருவன் மன்னர் ஆனான். நல்லாட்சி நடத்திய பின் முடிவில் நட்சத்திர பதவியை அடைந்தான். அதுவே துருவ நட்சத்திரமாக வானில் உள்ளது. துருவனை நினைப்பவர்கள், அவனது வரலாற்றை படிப்பவர்கள் மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுவர் என்கிறார் வியாசர். இப்படி துருவனைப் போல வாசுதேவனை நினைத்து நான் பயன் பெறவில்லையே சுவாமி என பெண்பிள்ளை ராமானுஜரிடம் சொன்னாள்” என முடித்தார் கிருஷ்ணவேணி.
“இந்த துருவனை போல சிவனையும் தந்தையாக நினைத்து வாழ்ந்தவர் பற்றிய ஞாபகம் வந்திடுச்சு''
''அந்த நபர் யாரு?”
“வேற யாரு... ஞானசம்பந்தர் தான். சிவனை தந்தையாக கருதி உரிமையுடன் பாடியவர். சரி நாம இப்ப துருவ நட்சத்திரத்துக்கிட்ட வருவோம், துருவ நட்சத்திரம் இப்பவும் வானத்துல இருக்கா?”
''ஏன் இல்லாம! நட்சத்திரங்களில் புகழ் பெற்றது துருவ நட்சத்திரம். பல ஆயிரம் வருஷமா மாலுமிகள், பயணிகள், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியா இருக்கு. பூமியோட வடக்கு அச்சுக்கு நேர் மேல இது இருக்கிறதால பருவ காலம் மாறினாக் கூட இது எப்போதும் வடக்கு திசையை காட்டும் இயற்கையான திசை காட்டியாக செயல்படுது. இதை ஒளிரும் கலங்கரை விளக்கம் என்பார்கள். சூரியனை விட பல மடங்கு அதிகம் பிரகாசம் கொண்ட இந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 433 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கு.
துருவ நட்சத்திரம் வானில் ஒரே இடத்தில் நிலையாக தெரியும். பல நுாற்றாண்டாக மனித குலத்தை அண்டவெளியோடு இணைக்கும் பாலமாக துருவ நட்சத்திரம் இருக்கு. இது வானவியலில் சப்தரிஷி மண்டலத்தில் இருக்கு. முழுமையான நட்சத்திரத் தொகுப்பான அர்சா மேஜர் (URSA MAJOR) என்பதோட ஒரு பகுதி இது. இதில் பிரதானமாக ஏழு பிரகாசமான நட்சத்திரங்கள் ஒரு நீண்ட கைப்பிடி கொண்ட கிண்ணம் போல இருக்கும். இந்த வடிவம் இரவில் வானத்தில் வடக்கு திசையில் தெளிவாக தெரியும். வடக்கே செல்ல செல்ல வானத்தில் உயரமாக இருக்கும்”.
''சரி துருவ நட்சத்திரத்தை நம்மால பார்க்க முடியுமா?” எனக் கேட்டார் அமிர்தம்.
''பூமியில் உள்ள ஒவ்வொரு பார்வையாளருக்கும் துருவ நட்சத்திரம் நேர் வடக்கில் இருக்கும். இதை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். இது வடதுருவத்தில் இருப்பதால் வட நட்சத்திரம் என்றும் சொல்லுவாங்க”
''சரி மனிதனால் ஒரு நட்சத்திரத்தை உருவாக்க முடியுமா?”
''மனிதனால நட்சத்திரத்தை உருவாக்குவது சாத்தியம் தான்னு ஆராய்ச்சி சொல்லுது. ஆனாலும் அது குறைந்த காலத்துக்கு தான் இருக்கும் என நம்புறாங்க”
“கடவுளுடைய படைப்புதான் எவ்வளவு பிரம்மாண்டமானது! ஆமா... இந்த வான சாஸ்திரத்தை பற்றி எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க?”
“அது வேறொன்னுமில்ல... என் பேரனுக்கு துருவன்னு பேர் வெச்சாங்க. அப்ப அந்த பெயரை பற்றி தேடினப்ப தெரிஞ்சுக்கிட்டது” என்றார் கிருஷ்ணவேணி.
''சிலர் தெய்வப் பிறவியாக பிறந்து பூமியில் என்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். துருவனும் அது மாதிரி தான் போல” என்ற அமிர்தம் ''சரி அடுத்த ரகசியம் என்ன?” என ரகசியமாக கிருஷ்ணவேணியின் காதைக் கடித்தார். அதற்கு 'மூன்றெழுத்து சொன்னேனோ கத்திரபந்துவைப் போலே' என்றார்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
